Published:Updated:

கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் மெகா மோசடி!

மதுரையை ஏமாற்றிய பாலசந்தர்

கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் மெகா மோசடி!

மதுரையை ஏமாற்றிய பாலசந்தர்

Published:Updated:
##~##
கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் மெகா மோசடி!

'தளி’ ராமச்சந்திரனை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  'நல்ல பெயர்’ வாங்கிக் கொடுத்திருக்கிறார் மதுரை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலசந்தர்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையில் நூற்றாண்டு கடந்த ஃபைனான்ஸ் நிறுவனங்களே 16 சதவிகித வட்டியில் நகைக் கடன் வழங்கும்போது, வெறும் 1 சதவிகித வட்டிக்கு நகைக்கடன் தருவதாகத் தம்பட்டம் அடித்தார் பாலசந்தர். அந்த விளம்பர வெளிச்சத்தில் விட்டில்பூச்சி போல வந்து விழுந்தார்கள் ஒத்தக்கடை, கடச்சனேந்தல் பகுதி மக்கள். கடைசியில், சுமார் ஒரு கோடி மதிப்புள்ள நகைகளுடன் அவர் கம்பி நீட்டிவிட, அழுது புலம்புகிறார்கள் அப்பாவி மக்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் இறங்கவே, விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடு பிடிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். கண்ணன் என்பவர், 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் காளிதாஸின் சொந்தத் தங்கை மகன்தான் பாலசந்தர். யானை மலையைச் சிற்ப நகராக மாற்றும் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால், 28 வயது இளைஞரான பாலசந்தர் மீது மக்கள் நல்ல மதிப்பு வெச்சிருந்தாங்க. அவர், ஒரு வருஷத்துக்கு முன் யோகா ஃபைனான்ஸ் என்ற பெயரில் அடகுக்கடை தொடங்கினார். 1 சதவிகித வட்டிக்கு நகைக்கடன் என்று அவர் விளம்பரப்படுத்தியதால், டீக்கடை மாதிரி அவரோட அடகுக் கடையில் கூட்டம் குவிந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் மெகா மோசடி!

1 சதவிகித வட்டி தானே என்று நானும் தொழில் அபிவிருத்திக்காக 12 பவுன் நகையை அவரது கடையில் அடகு வெச்சேன். அவர் ரசீது கொடுக்கலை. தெரிந்தவர்தானே, அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் நேர்மையா இருப்பார் என்று நம்பி நானும் ரசீது கேட்கலை. ஆறே மாசத்துல நகைக் கடன் 1 லட்சத்தையும் வட்டியோட திருப்பிக் கொடுத்துட்டேன். ஆனா, அவர் நகையைத் திருப்பித் தரலை. 'உள்ளாட்சித் தேர்தல்ல நிற்கிறதால வேலை அதிகம்... முடிஞ்சதும் கொடுத்துடுறேன்’ என்றார். பிறகு, தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் குடுக்கிறேன் என்றார். ஆனா, நகை வந்து சேரலை. ஊர்ப் பணத்துல உல்லாசமா இருந்துட்டு, எங்களை ஏமாத்திட்டார். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கேன்' என்றார் வருத்தமாக.

கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் மெகா மோசடி!

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான மணி மேகலை கூறியபோது, 'கட்சிக்காரர், நேர்மையா இருப்பார்னு நம்பி குடும்பக் கஷ்டத்துக்கு நகையை அடகுவெச்சேன் சார். ரசீது கேட்டப்ப, 'யக்கா நீ தொலைச்சிடுவ. நானே பத்திரமா வெச்சிருக்கேன். எப்ப வேணுமோ வாங்கிக்க’னு இனிக்க இனிக்கப் பேசி ஏமாத்திட்டார். கடந்த உள்ளாட்சித் தேர்தல்ல நிறைய செலவு பண்ணி கவுன்சிலர் பதவிக்குப் போட்டி போட்டார். அப்புறம், நிறைய நகை போட்டு ஆடம்பரமா தங்கச்சிக்கு கல்யாணம் நடத்தி வெச்சார். அப்புறம் தன்னோட காதலின்னு ஒரு பெண்ணோட கார்ல ஊர் சுத்தினார். அவர் எப்படியும் போகட்டும். எங்க நகை எங்களுக்கு வேணும்'' என்றார் கண்ணீருடன்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் மெகா மோசடி!

ஊர்க்காரர்கள் மட்டுமல்ல, பாலசந்தரின் நகைக் கடையில் வேலை பார்த்தவர்களே அவர் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். 'அடகுக் கடையில என்னோட சேர்த்து மொத்தம் நாலு பேர் வேலை பார்த்தோம். எங்களுக்கே ஒழுங்கா சம்பளம் கொடுக்கலை. மக்களிடம் 1 கிராமுக்கு 1,300 ரூபாய்தான் கடன் கொடுப்பார். ஆனா, அதே நகையை முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் கோல்டு போன்ற நிறுவனங்களில் 2,000 ரூபாய்க்கும் அதுக்கு மேலேயும் அடகுவெச்சி சம்பாதிச்சார். ஒரு கட்டத்தில் அவரோட லிமிட் முடிஞ்சிருச்சுனு அந்த நிறுவனங்கள் சொல்லிட்டாங்க. அதனால, எங்க பேருல அடகு வைக்கச் சொன்னார். நகையை மீட்க வந்த ஆளுங்களுக்கும் இவருக்கும் பிரச்னையாகிடும். அப்பக் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாம, எங்க நகைகளை வாங்கிச் சமாளிப்பார். இந்த ஆளு மோசடியான ஆளுன்னு தெரியாம, கூடவே இருந்த பாவத்துக்காக, கடை ஊழியர் காளிராஜன் ஊர்க்காரங்ககிட்ட அடி வாங்கியிருக்கார்' என்றார் கடை ஊழியரான பாண்டியன்.

இந்த மோசடி பற்றி ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜிடம் கேட்டோம். 'பாலசந்தரிடம் நகை அடகுவைத்து சுமார் 300 பேர் ஏமாந்து உள்ளார்கள். அதில் 80 பேர் இதுவரை புகார் கொடுத்து இருக்கின்றனர். சுமார் 1 கோடி ருபாய் மோசடி செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாலசந்தர் மீது 420-வது பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்து உள்ளோம். முத்தூட், மணப்புரம் கோல்டு போன்ற நிறுவனங்களில் பாலசந்தர் அடகு வைத்துள்ள நகைகளை மீட்கப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். கூடிய விரைவில், மக்களுக்கு அவர்களுடைய நகைகள் திரும்ப வழங்கப்படும்'' என்றார்.

இந்தப் புகார் பற்றி பாலசந்தரின் மாமாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான காளிதாஸிடம் கேட்டபோது, 'அவர் செய்தது முழுக்க முழுக்க மோசடி. உறவுக்காரனாக இருந்தாலும் அவர் செய்தது தப்பு என்பதால் அவருக்கு எந்த உதவியும் செய்ய, நான் தயாராக இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் எங்களிடம் முறையிட்டபோது, நாங்களே அவர்களை அழைத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அவனைக் கட்சியில் இருந்தும் நீக்கிவிட்டோம்'' என்றார்.

எந்தக் கட்சியையும் நம்பக் கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார் பாலசந்தர்!

- ரா.அண்ணாமலை

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism