ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சிறைக் 'கஞ்சா' கெளரி!

அதிரவைக்கும் 30 வருட சாம்ராஜ்யம்..

##~##
சிறைக் 'கஞ்சா' கெளரி!

திருநின்றவூர் ஏரியாவில் கஞ்சா சாம்ராஜ்யம் நடத்திவந்த கௌரி என்ற 50 வயதுப் பெண்ணைக் கைது செய்தது போலீஸ்.. அவரைப் பற்றி விசாரிக்கச் சென்றால், மலைக்க வைக்கும் தகவல்கள் வந்து விழுகின்றன! 

நெற்றியில் பெரிய சைஸ் குங்குமப் பொட்டும் கண்ணாடியும் அணிந்து பூ வியாபாரம் செய்து வந்தவர் கௌரி. பூவுடன் சேர்த்து கஞ்சாவும் விற்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி. இவரைப் பார்த்து திருநின்றவூர் ஏரியாவே மிரள்கிறது.

கௌரியைப்பற்றி அந்த ஏரியாவாசிகளிடம் பேச்சுக் கொடுத்தோம். ''எங்களுக்கு எதுக்கு வம்பு?'' என்று பலரும் நழுவிச் செல்ல... ஒரு சிலரே தைரியமாகப் பேச முன் வந்தனர். ''கௌரியோட சொந்த ஊரு வேலூர் மாவட்டம் வாணியம்பாடி. திருமணம் ஆகி சென்னைப் பக்கம் வந்தாங்க. 1980-களிலேயே புருஷன் நாதனோட சேர்ந்து அந்தப் பொம்பளை கள்ளச்சாராயம் காய்ச்சி வித்தது. சென்னைப் புறநகர் பகுதியில் 20 வருஷமா

சிறைக் 'கஞ்சா' கெளரி!

இவங்களோட கள்ளச் சாராய சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறந்தது. அப்பவே அந்தம்மா நிறையப் பணத்தையும், ஆள் பலத்தையும் சேர்த்துக்கிச்சு.

அவங்களுக்கு எதிரா யாராவது செயல்பட்டா, அடியாட்களை வெச்சு மிரட்டுவாங்க. 2000-ம் வருஷத்துல இருந்து கள்ளச் சாராயம் விற்கிறவங்களை போலீஸ் கைது பண்ணினாங்க. அப்போ இருந்து அந்தத் தொழிலை விட்டுட்டாங்க. அப்புறம் பத்து வருஷங்களா கஞ்சா வியாபாராம் செஞ்சுட்டு இருக்காங்க. பெரிய வெளிநாட்டு நாய்கள் நாலு அவங்க காம்பவுண்ட்டுக்குள் திரிஞ்சுக்கிட்டு இருக்கும். யாராவது வீட்டுக்கு உள்ளே போனா, அந்த நாய்கிட்ட இருந்து தப்ப முடியாது.

யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கணுமோ, அதெல்லாம் சரியா செஞ்சிடுவாங்க. அதிகாரி களைப் பொறுத்து விலை பேசுவாங்க. சிலர் பணம் கேட்பாங்க... சிலர் பொண்ணு கேட்பாங்க. எதுவா இருந்தாலும் அவங்க செஞ்சு கொடுத்துடுவாங்க. அதனாலேயே அவங்க கஞ்சா வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது. நேர்மையான போலீஸ் யாராவது அவங்களைக் கைதுசெய்ய வீட்டுக்குப் போனா... அவங்களோட புடவையைக் கழற்றி வீசி, அவங்களை மானபங்கம் செஞ்சதா விவகாரத்தைத் திசை திருப்பிடுவாங்க.

அவங்க கடைப்பக்கம் பூ விக்கிறவங்க, பழம் விக்கிறவங்ககிட்ட கஞ்சா பொட்டலம் கொடுத்து விக்கச் சொல்லுவாங்க. அதே மாதிரி ரயிலில் பழ வியாபாரம், பூ வியாபாரம் செய்யுறவங்ககிட்டயும் விக்கச்சொல்லி கஞ்சா கொடுத்து அனுப்புவாங்க. கஞ்சாவைப் பிரிச்சுக் கொடுக்குற வேலையை

சிறைக் 'கஞ்சா' கெளரி!

அவங்க கணவர், மகள், மருமகன், வீட்டு வேலைக்காரங்க ரெண்டு பேரு எல்லாரும் சேர்ந்து செய்வாங்க. வழக்கம்போல இப்பவும் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணி இருக்கு'' என்று நிறுத்தினர்.

''வழக்கம்போலவா?'' என்று நாம் ஆச்சர்யத்துடன் கேட்க... ''ஆமா சார்... எப்ப எல்லாம் மேலிடத்துல இருந்து பிரஷர் வருதோ, அப்ப எல்லாம் கௌரிகிட்டேயே போய் கெஞ்சிக் கூத்தாடி அரெஸ்ட் பண்ணி அழைச்சுட்டுப் போவாங்க. அரெஸ்ட் பண்ண நாலே நாள்ல அவங்க பெயில்ல வந்துடுவாங்க. இதெல்லாம் அவங்களுக்கு வழக்கம்தானே? ஜெயிலுக்கு கொஞ்சம் கூட பயப்படாத பொம்பளை சார் அது'' என்றனர்.

கௌரியைக் கைதுசெய்த திருநின்றவூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்யனை சந்தித்தோம். ''சென்னைப் புறநகரில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், கடந்த ஆறு மாசமா கௌரி கஞ்சா வியாபாரம் செய்யாம இருந்தாங்க. பட்டாபிராம், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை, திருவள்ளூர் பக்கம் ஜாகையை மாத்திட்டாங்க. திரும்பவும் திருநின்றவூர்ல கௌரி கஞ்சா விக்கிறதாத் தகவல் வந்தது. உடனே, அவரைக் கைது செஞ்சோம். இதுக்கு முன்னால பலமுறை அவங்களை கைது செஞ்சு இருக்கோம். அப்ப எல்லாம் நாலைஞ்சு பொட்டலம் கஞ்சாவோடுதான் இருப்பாங்க. அதனால, அவங்க மேல சாதாரண கஞ்சா கேஸ் மட்டும்தான் போட முடிஞ்சது. ஜெயிலுக்குப் போன ஒரு வாரத்துல பெயிலில் வந்துடுவாங்க. 50 வயது பெண் என்பதால், அடிச்சா எதாவது ஆகிடுமோனு கண்டிச்சு விடுறோம். ஆனா, திரும்பத் திரும்ப அதே தப்பை செய்யுறாங்க. வழக்கமா அவங்க கூட்டாளிங்கதான் கஞ்சா விற்கும்போது சிக்குவாங்க. அவங்க மூலமாக் கௌரியைக் கைது செய்வோம். ஆனா, இந்த முறை கௌரியே கஞ்சா விற்கும்போது கைது செஞ்சு இருக்கோம். இப்பவும் நாலைஞ்சு கஞ்சா பொட்டலம்தான் கிடைச்சு இருக்கு. இருந்தாலும் கேஸை வலுவாப் போட்டு இருக்கோம்'' என்றார்.

சட்டத்தில் ஓட்டை இருக்கிற வரைக்கும், கஞ்சா விற்று கல்லா கட்டுவது சுலபம்தானே?

- கவிமணி