ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

திப்புவின் கோட்டை அழிகிறது!

விழுப்புரம் வேதனை

##~##
திப்புவின் கோட்டை அழிகிறது!

'நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய திப்பு சுல்தான் கட்டிய ஒரு மலைக்கோட்டை அழிந்து வருகிறது. காப்பாற்ற முயற்சி எடுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-66808002) அலறியது. 

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருக மலையில் உள்ள அந்தக் கோட்டையைச் சுற்றிப் பார்த்தோம். பாதுகாக்கப்பட வேண்டிய பல வரலாற்றுச் சின்னங்கள் உடைபட்டுக் கிடந்தன. பல அடிகள் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த மலையில் இருக்கும் ஸ்ரீபகவதி மலையம்மன் கோயிலில் இருந்த இரும்பு சூலம் அகற்றப்பட்டு, செம்பு சூலம் பொருத்தப்பட்டு இருந்தது. பலி பீடத்தின் உயரத்தை அதிகரித்து இருப்பதும், அங்கே ரத்தப் பலி கொடுத்த அடையாளமும் தெரிந்தது.

திப்புவின் கோட்டை அழிகிறது!

என்னதான் நடந்தது என, அந்தப் பகுதி மக்களிடம் கேட்டோம். ''இந்த மலைக்கோட்டை 17-ம் நூற்றாண்டில் தியாகவள்ளி என்ற அரசியின் ஆளுமையில் இருந்தது. அதனால், இந்தப் பகுதிக்குத் தியாகதுருகம் என்ற பெயர் வந்ததாக செவிவழிச் செய்திகள் உண்டு. 1756-ல் பிரெஞ்சு அரசாங்கத்தினர் வசம் இருந்த இந்தக்கோட்டை 1760-ல் ஹைதர் அலியிடமும், 1790-ல் திப்பு சுல்தான் கைக்கும் மாறியது. அந்தச் சமயத்தில் திப்பு சுல்தான் வந்து தங்கிச் செல்வதற்காக பல அறைகளும் கருவூல அறையும் கட்டப்பட்டன. சூரியன் படாத கிணறு ஒன்று உள்ளே உண்டு. போருக்குச் செல்லும்போது, இங்கே இருந்து கிளம்பிச் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இப்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் அது இருக்கிறது என்றாலும், எந்தக் கண்காணிப்பும், பராமரிப்பும் கிடையாது.

திப்புவின் கோட்டை அழிகிறது!

சமீபத்தில் நெய்வேலியைச் சேர்ந்த கண்ணப்பன் என்ற சாமியார் இங்குள்ள மலையம்மன் கோயில் குருக்களிடம், 'இந்தக் கோட்டையில் உள்ள கோயிலில் சிற்ப சாஸ்திரம் சரியில்லை. எனவே, இங்குள்ள இரும்பு சூலத்தை செம்புச் சூலமாக மாற்ற வேண்டும். பலி பீடத் தின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்’ என்று சொல்லி யாகம் நடத்தி சூலத்தை மாற்றி இருக்கிறார்.

அ.தி.மு.க. நகரச் செயலாளர் ராஜி, அவரது மனைவியான பேரூராட்சித் தலைவி விஜயா, தி.மு.க. முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் யாகம் நடந்து இருக்கிறது. அந்த யாகத்தில் கோழிகளைக் கொன்று ரத்தப் பலி கொடுத்து 10 பூசணிக் காய்களையும் உடைத்து இருக்கிறார்கள். இங்கு இருப்பது காளிகோயில். ஆனால், இவர்கள் யாகம் செய்து இருக்கிறார்கள். இந்த யாகம் ஸ்ரீநாராயணருக்குத்தான் செய்வார்கள். இங்கே அந்த யாகம் ஏன் நடத்தினர்... எதற்காகப் பெரிய குழி தோண்டினர் என்று எதுவும் புரியவில்லை. இதைத் தொல்பொருள் துறையினர் எப்படி அனுமதித்தனர் என்றும் புரியவில்லை'' என்றனர் அதிர்ச்சியுடன்.

திப்புவின் கோட்டை அழிகிறது!

இந்த மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கச்செயலாளர் மணிஎழிலன், ''முன் பெல்லாம் இந்த மலைக்கோட்டை முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாகப் படிகள் அமைத்திருந்தனர். இப்போது எல்லாமே பாழாகி விட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாக அமல்ராஜ் வந்த நேரத்தில், அந்த அலுவலக வாசலில் வைப்பதற்காக மலையில் இருந்து ஒரு பீரங்கியைக் எடுத்துச் சென்று வைத்தார். நான் கலெக்டரிடம் மனு கொடுத்த பிறகுதான், மீண்டும் அந்தப் பீரங்கி  மலையில் கொண்டுபோய் வைக்கப் பட்டது.

மலையின் அடிவாரத்தைச் சுற்றி 100 மீட்டருக்கு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது, 200 மீட்டர் வரை சொந்தம் கொண்டாடாமல் பயன்படுத்தலாம் என்பது தொல்பொருள் துறையின் உத்தரவு. ஆனால், அடிவாரத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் நீளத்துக்கு, இடைவெளி இல்லாமல் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், மலையை ஒட்டியிருந்த பாறைகளை உடைத்துக் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்காக நான் சென்னை தொல்பொருள் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை'' என்றார் வருத்தத்துடன்.

அ.தி.மு.க. நகரச் செயலாளர் ராஜியிடம் பேசினோம். ''நாங்கள் வருடந்தோறும் கோகுலாஷ்டமி அன்று அங்கே பூஜை செய்துவது வழக்கம். அதேபோல்தான் இந்த வருடமும் செய்தோம். கண்ணப்பனின் கனவில் தெய்வம் தோன்றி, இங்கே சீரமைப்புப் பணிகள் செய்யச் சொல்லி இருக்கிறது. அதனால் அவரை வைத்தே பூஜை செய்தோம்'' என்றார்.

பூஜை செய்த நெய்வேலி சாமியார் கண்ணப்பனிடம் பேசினோம். ''என் கன வில் தெய்வம் வந்து, இங்கு கோயில் கட்டச் சொல்லியது. 'இந்தக் கோயிலில் நிறைய அரிய பொருட்கள் திருடு போய்விட்டன. மீதமுள்ளவற்றை நீதான் காப்பாற்றணும். அந்த மலையின் மேல் எனக்கு ஒரு கோயில் கட்டணும்’னு தெய்வம்தான் என்னிடம் கூறியது. அதனால் பூஜை நடத்தினேன். சோனியா, பிரதமர் எல்லாம் என்னைச் சந்திக்க அழைக்கிறார்கள்'' என்று சம்பந்தம் இல்லாத விஷயங்களை சீரியஸாகச் சொன்னார்.

ஆக்கிரமிப்புகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது குறித்து தொல் பொருள்துறை ஆணையர் வசந்தியிடம் கேட்டோம். ''ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி போலீஸில் புகார் அளித்திருக்கிறோம். மலைக்கோட்டையில் யாகம் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால், எதுவும் சேதமாகவில்லை'' என்று  முடித்துக் கொண்டார்.

தொல்பொருள் துறையினரே இவ்வளவு அசட்டையாக இருக்கும்போது, யாரைக் குறை சொல்வது?

- அற்புதராஜ், படங்கள்: பா.கந்தகுமார்