ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?

பெரம்பலூர் கோயில் பரபர

##~##
சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?

ங்கப் புதையல் இருப்பதாகப் பரவிய செய்தி பெரம்பலூர் மாவட்டத்தை தகதகக்க​வைத்துள்ளது! 

சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி - மருவத்தூர் இடையே முட்புதர்களுக்குள் பழைமையான இரண்டு கோயில்களைக் கண்டு​பிடித்தனர் கிராம மக்கள். 'அந்தக் கோயில்களில் இருந்த சில சிலைகள் திருடப்பட்டுள்ளன என்றும் தங்கப் புதையல் இருக்கிறது’ என்றும் பரபர தகவல்கள் கிடைக்கவே, விசாரணையில் இறங்கினோம்.

காட்டுப் பாதைக்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோயில் திடீர் பிரபலம் ஆகி விட்டதால், ஏராளமான மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்த பிறகு, ஊர்ப் பெரியவரான ஆறுமுகத்திடம் பேச்சுக் கொடுத்தோம்.

சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?

''அந்தக் காலத்துல கோயில்களைச் சுற்றி பேரளி கிராமம் இருந்ததாகவும், அதன்பிறகு, பேரளி மருவத்தூர், பேரளி, பனங்கூர் என்று மூன்று ஊர்களாகப் பிரிஞ்சுட்டதாகவும் சொல்வாங்க. மக்கள் புழக்கம் இல்லாததால், நாளடைவில் கோயில்​களைச் சுற்றி முள்வளர்ந்துடுச்சு. ஒரு கட்டத்தில் கோயில்களையே மறைச்சிடுச்சு. அதனால, இந்தப் பக்கம் ஆட்கள் யாரும் வர்றதே கிடையாது, கோயில் இருந்ததே இந்தத் தலைமுறை ஆட்களுக்குத் தெரியாது.

போன மாசம் எங்க ஊருக்கு வந்திருந்த சீனிவாச ஐயங்கார், 'உங்கள் ஊர் கோயில்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதைப் பார்க்கணும்’னு சொன்னார். கோயிலைச் சுற்றி முட்புதர்கள் மண்டிக்​கிடக்குறதைப் பார்த்துட்டு, வெட்டுவதற்கு உதவி கேட்டார். அவரோடு சேர்ந்து நாங்களும் முள் வெட்ட ஆரம்பிச்சோம். முட்களை வெட்டிய பிறகு உள்ளே அழகான சிவன் கோயிலைப் பார்த்தோம். கோயிலுக்குள் நுழைந்தபோது கூட்டம் கூட்டமாகப் பாம்புகளும் வெளவால்களும் இருந்தன. எதிர்த் திசையில் வரதராஜப் பெருமாள் கோயிலும் அற்புதமா அமைஞ்சிருந்தது'' என்றார்.

சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?

அவரைத் தொடர்ந்து பேசிய சீனிவாச ஐயங்கார், ''எங்க ஊர்ப் பெரியவங்க சொன்னதைக் கேட்டுத்தான் இந்தக் கோயில்களைத் தேடி வந்தேன். முட்களை வெட்டியதும் எங்கள் கண்ணில் பட்ட சிவன் கோயிலின் கட்டட வேலைப்பாடுகளைப் பார்த்து பிரமித்துப் போனோம். வழக்கமான சிவன் கோயில் போல் இல்லாமல் இங்கு தெற்கு நோக்கி வாசல் அமைந்துள்ளது. சிவன் கோயில்களில் ஒரு நந்திதான் இருக்கும். ஆனால், இங்கு மூன்று நந்திகள் இருக்கின்றன. மூலவர் தியானலிங்கம் வடிவில் இருக்கிறார். இந்தக் கோயில்களைப் பற்றி அப்பர் பாடி இருப்பதாகவும் இப்போது தெரிந்துள்ளது.

வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகள் மிகநேர்த்தியாக ஆகம விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. திருப்பதியில் உள்ளதுபோல தாயார் வலதுகாலை தாமரையின் மேல் பதித்திக்கிறார். மக்கள் துணையோடு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கோயில்களில் நெய்தீபம் ஏற்றி அணையாமல் பாதுகாத்து வருகிறோம். திருச்சி திருப்பட்டூர் சிவன் கோயிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் இப்படித்தான் சிதிலம் அடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைப் போலவே இந்தக் கோயில்களையும் சீரமைக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

கோயிலைகளைச் சுற்றி மண்ணில் புதைந்துகிடந்த பைரவர், துர்க்கை மற்றும் விநாயகர் சிலைகளையும், காளை வாகனத்தையும் மக்கள் கண்டுபிடித்து உள்ளனர். உள்ளூர்க்காரரான ராயப்பன் என்பவர், ''இந்த இரண்டு கோயில்களுக்கும் சொந்தமான நிலங்கள் மூன்று ஊர்களிலும் நிறையவே இருக்கு. அந்த நிலங்களில் விதைக்கிறவங்ககிட்ட பணம் வசூலிச்சாலே, கோயிலை சீரமைச்சிடலாம். சிவன் கோயிலில் இருந்த அம்பாள் சிலையையும், பல சாமி சிலைகளையும் யாரோ திருடி இருக்காங்க. சிவன் கோயிலில் இருந்து பெருமாள் கோயிலுக்கு இடையில் இருக்கிற சுரங்கப் பாதையில், கேரளா கோயிலில் இருந்ததைப் போல விலை மதிக்க முடியாத பொருட்கள் இருக்கிறதாச் சொல்றாங்க.  அரசு உடனே ஆராயணும்'' என்று கோரிக்கை வைத்தார்.

நமக்குக் கிடைத்த தகவல்களை மாவட்டக் கலெக்டர் தாரேஸ் அஹமதுவிடம் தெரிவித்தோம். அதையடுத்து, அந்தக் கோயில்களைப் பார்வையிட்டார். பிறகு நம்மிடம் பேசியவர், ''இவை சோழர் காலத்தைச் சேர்ந்த, 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில்களாக இருக்கலாம். இந்தக் கோயில்களைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன். தொல்லியல் துறையினர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தர விட்டுள்ளேன். வருவாய்த் துறை பதிவேடுகளில் அழகேஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜப் பெருமாள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தக் கோயில்களுக்கு மருவத்தூரில் மட்டும் 60 ஏக்கருக்கும் மேல் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற ஊர்களில் எவ்வளவு நிலம் இருக்கிறது, அவை யாருடைய பயன்பாட்டில் இருக்கிறது எனும் தகவல்களைச் சேகரிக்க வி.ஏ.ஓ-க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கோயிலில் திருடப்பட்டுள்ள சிலைகள் குறித்து காவல் துறையில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இரண்டு கோயில்களையும் புனரமைத்து, மீதி இருக்கும் சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதையல் பற்றியும் ஆய்வு நடக்கும்'' என்று உறுதியளித்தார்.

பழைமைக்கு மரியாதை கிடைக்கட்டும்!

- சி.ஆனந்தகுமார் ,

படங்கள்: எம்.ராமசாமி, விக்னேஷ் குமரன்