ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

டெல்டா விவசாயம் சூப்பரா நடக்குதா?

முதல்வர் பேச்சு நிஜமா?

##~##
டெல்டா விவசாயம் சூப்பரா நடக்குதா?

சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ''எனது தலைமையிலான அரசு டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை வழங்கிய காரணத்தால், 1,37,000 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பயிர் சாகுபடி வழக்கமான பரப்பளவில் மேற்​கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன'' என தெரிவித்தார். இது குறித்து டெல்டா விவசாயிகளிடம் கேட்டோம். 

சுகுமாறன், தமிழக விவசாய சங்க தஞ்சை மாவட்டத் தலைவர்: ''முதல்வர் தவறான ஒரு தகவலைக் கொடுத்து இருக்கிறார். தஞ்சையில் 30 ஆயிரம் ஏக்கர், திருவாரூரில் 10 ஆயிரம் ஏக்கர், திருச்சி மற்றும் கரூரில் 15 ஆயிரம் ஏக்கர் மட்டும்தான் சாகுபடி செய்துள்ளனர் என அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் தெரிவித்துள்ளன. சம்பா சாகுபடி சுத்தமாக நடைபெற​வில்லை. 'ஆடி, ஆவணியில் விதைக்க​லைன்னா, விதை நெல்லை வித்து வெள்ளாடுதான் மேய்க்கணும்’ என்று ஒரு வழக்குமொழி இருக்கிறது. இன்றைய டெல்டா விவசாயிகளின் நிலையும் அதுதான். 1974-க்குப் பிறகு இந்த ஆடி மாதத்தில்தான் விவசாயம் செய்ய முடியாமல்போனது. அதுசரி, தண்ணீர் திறப்பு பற்றி முதல்வர் ஏன் எதுவும் சொல்லவில்லை?''

டெல்டா விவசாயம் சூப்பரா நடக்குதா?

பெ.மணியரசன், தமிழ் தேச பொதுவு​டைமைக் கட்சித் தலைவர்: ''ஐந்து லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட குறுவை சாகுபடி இப்போது மிகக் குறைந்து விட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இழப்பீடு வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கி இருக்கிறது. 12 மணி நேரம் முழுமையான மின்சாரம் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. சம்பா சாகுபடிக்கான எந்த நம்பிக்கையும் விவசாயிகளிடம் இல்லை. இந்த மாத இறுதியிலாவது தண்ணீர் திறந்து விட்டால்தான் ஏதாவது செய்ய முடியும்.''

பி.ஆர். பாண்டியன், தமிழ்நாடு விவசாயி​கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்: ''ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செய்த சாகுபடி நிலவரத்தோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு மிகக்குறைவு. முதல்வர் சொல்வதை உண்மை என ஏற்றுக் கொண்டாலும், மீதி உள்ள 1,64,000 ஏக்கர் தரிசாக உள்ளது என்பதை அவரே ஒப்புக்​கொள்கிறார். அதற்கு என்ன செய்யப்போகிறார்? டெல்டா விவசாயத்தில் பாதிப்பு இல்லை என்று முதல்வர் சொல்வதை கர்நாடகா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும். சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. கர்நாடக அணைகளைத் திறந்துவிட மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசில் பிரதான அங்கம் வகிக்கும் தி.மு.க-வும் போராட வேண்டும்.''

அருட்செல்வன் எம்.எல்.ஏ., நாகை மாவட்ட தே.மு.தி.க செயலாளர்: ''டெல்டாவில் பம்பு செட் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே விவசாயம் செய்கிறார்கள். ஆற்றுப் பாசனத்தை நம்பிய விவசாயிகள், கிடைக்கும் மற்ற வேலைகளைச் செய்ய நகரத்தை நோக்கிச் செல்கிறார்கள். விவசாயமே பட்டுப்போகிறது. அதிகாரிகள் குழு கடைமடைப் பகுதிகளையும் சென்று பார்த்தால்தான், நிலைமை புரியும்.''

முதல்வருக்கு தவறான தகவலைத் தந்தவர்கள் யார்?

- சி.சுரேஷ், படங்கள் கே.குணசீலன்