ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''நம்ம கேப்டனா இது?''

விஜயகாந்த்திடம் ஆச்சர்ய மாற்றங்கள்

##~##
''நம்ம கேப்டனா இது?''

மேடைக்கு வரும்போது சிடுசிடுப்பு, மைக்கில் பேசும்போது கடுக டுப்பு, பொது இடங்களில் கர்ஜிப்பு. இதுதான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் குணம். 'அதெல்லாம் அப்போ... இப்போ ஆளே மாறிட்டார்...’ என்று சிலிர்க்கிறார்கள் தே.மு.தி.க-வினர். இது உண்மை என்று நிரூபிப்பதைப் போன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டக் கட்சி விழாக்களில் கலந்துகொண்ட விஜயகாந்த்திடம் அடடே மாற்றங்கள்!

தன்னுடைய பிறந்த நாளை, வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் விஜயகாந்த். அந்த வரிசையில் கடந்த வாரம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

அங்கே நடந்ததைச் சொல்கிறார் தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர், ''பெரும்பாலும் கோபம் கொப் பளிக்கும் முகத்தோடுதான் மேடை ஏறுவார். எல்லாக் கட்சியிலும் தங்கள் தலைவனின் வருகையைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரிக்கத்தான் செய்யும். அதேபோல பேச்சின் இடையே சிலர் விசில் அடிக்கவும் செய்வார்கள். இதையெல்லாம் அன்போடு கண்டிக்காமல்... மைக்கிலேயே அவர்களை ஏகவசனத்தில் திட்டுவார் கேப்டன். திட்டு வாங்கிய அனுபவம் உள்ளவர்கள், அடுத்தக் கூட்டத்தில் கை தட்டவும் தயங்குவார்கள். ஆனால், இந்த முறை எல்லோருக்குமே ஆச்சர்யம். சிரித்த முகத்தோடு மேடைக்கு வந்தவர், பாசம் கலந்த வணக்கம் சொல்லி உட்கார்ந்தார். மற்றவர்கள் பேசும்போது புன்முறுவலோடு கேட்டுக்கொண்டு இருந்தார். கூட்டத்தில் வழக்கமான ஆரவாரம், சலசலப்பு, விசில் சத்தம் இருந்தபோதும் முகம் சுளிக்கவே இல்லை. 'எதிர் முகாம் அரசியல்வாதிகளுக்கு மேடையில் சூடு கொடுத் துப் பேசுவதுதான் தலைவருக்கு அழகு. தன் பிள் ளைகளுக்கு நிகரான கட்சித் தொண்டர்களிடம் சீறக்கூடாது’ என்பதை கேப்டன் இப்போது உணர்ந்து விட்டார். கேப்டனின் இந்த அணுகுமுறை நீடித்தால், இனி தே.மு.தி.க-வுக்கு சுக்கிர தசைதான்'' என்று சிலாகித்தார்.

''நம்ம கேப்டனா இது?''

நலத் திட்ட உதவிகள் வழங்கும்போது பாட்டிகள், குழந்தைகளின் தோள் மீது வாஞ்சையோடு கை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். பேச்சின் இடையே ஒரு முறைகூட தன் தொண்டர்களிடம் கோபப்படவில்லை. ஆளும் கட்சிக்கு எதிராக மட் டுமே அக்னி வெயிலாக வெப்பம் உமிழ்ந்தார்.

19-ம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் பேசி யவர், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு ஆலை தொடங்குவதாகக் கொடுத்த வாக்குறுதி புஸ்வாணமாகிப் போச்சு. ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் மின் வெட்டை நீக்குவோம்னு சொன்னாங்க. ஆனா, ஓசூர் சிப்காட்டில் பல கம்பெனிகளில் ஒட்டடை படிஞ்சு கிடக்கு. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் என யாருமே பொதுமக்களிடம் உரிமையோடு 'நான் உங்கள் நண்பன்’னு சொல்லிக்க முடியாது. போலீஸ் காரங்களுக்கு மட்டும் அந்த உரிமை உண்டு. ஆனா, தமிழ்நாட்டில் இருக்கும் போலீஸாரோ ரவுடி களைவிடக் கேவலமா நடந்துக்கிறாங்க. அதனால் கொலையும் கொள்ளையும் சாதாரணமாயிடுச்சு. மதுரையைவிட அதிகமா கிருஷ்ணகிரியில் கனிமக் கொள்ளை நடக்குது. அதில் நேர்மையான நடவடிக்கை மேற்கொள்ள யாருக்காவது துப்பு இருக்கா?'' என்று பொரிந்தார்.

அடுத்த தர்மபுரிக் கூட்டத்தில் இன்னும் அதிக அனல்.

''இந்த ஆட்சியில் திரும்பும் திசையெல்லாம் லஞ்சம். அரசுத் திட்டங்களை டெண்டர் எடுக்க வருவோரிடம் ஏழரை முதல் பதினேழரை சதவிகிதம் வரை லஞ்சம் கேட்டால் நிலைமை என்னாகும்? தமிழ்நாடு போலீஸ் லஞ்ச போதையில் சிக்கிக்கிடக்கு. ஹைவே பேட்ரோல் வண்டிக்காரன், ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துல நின்னுதான் வண்டியை மறிக்கிறான். எதுக்கு..? பாக்கெட்டை நிறைச்சுக்கிட்டு வீட்டுக்குத் திரும்பத் தான். இதையெல்லாம் தட்டிக் கேட் காத இறுமாப்பு ஆட்சிதான் இங்கே நடக்குது. ஆளும் கட்சிக்கு அறிவுரை சொல்ல புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 'நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை...’ங்கிற பாட்டு ஒண்ணே போதும். மிச்சம் இருக்கும் மூன்றரை வருஷத்துல இதெல்லாம் குறையும்னு நினைக்கிறீங்களா..? (விஜயகாந்த்திடம் அடிவாங்கியதாகப் பரபரப்புக்கு ஆளாகிய எம்.எல்.ஏ-வான பாஸ்கரைத் திரும்பிப் பார்த்து இதே கேள்வியை விஜயகாந்த் மீண்டும் கேட்க, அவரோ ஜெயலலிதாவைக் கண்ட அமைச்சர் களைவிட அதிகம் பணிவு காட்டிக் குழைந்தார்).

அ.தி.மு.க-வால்தான் தே.மு.தி.க-வுக்கு வாழ்வுன்னு சொல்றாங்களே... அவ்வளவு பலம்கொண்டவங்க எதுக்கு எங்களோடு தேர்தலில் கூட்டணி வச்சாங்க. தனிச்சே வீரத்தை நிலைநாட்டி இருக்கலாமே? உங்கள் ஆட்சியின் வண்டவாளங்கள் இனி தொடர்ந்து மக்கள் மேடையில் வெளிச்சம் போட்டுக் காட்டுவேன்'' என்றார் அதிரடியாக.

விஜயகாந்த்தின் புதிய அணுகுமுறையால் பூரித்துக் கிடக்கிறார்கள் தொண்டர்கள்.

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்