ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பார்பத்தி குளறுபடி... ஜெயலலிதா விழா புறக்கணிப்பு!

புத்திச்சந்திரன் மீது பாயும் புகார்கள்

##~##
பார்பத்தி குளறுபடி... ஜெயலலிதா விழா புறக்கணிப்பு!

சில காலமாகப் புகார் புகைச்சலில் இருந்து தப்பி இருந்த மாஜி அமைச்சர் புத்திச் சந்திரனைச் சுற்றி மீண்டும் சர்ச்சை வளையங்கள்! 

ஊட்டி தொகுதியின் எம்.எல்.ஏ., முன்னாள் உணவுத் துறை அமைச்சரான புத்திச்சந்திரன். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் மீது அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முதல்வருக்குப் புகார் அனுப்பி இருக்கிறார்கள்.  

''படுக சமுதாய வழக்கப்படி நீலகிரி மாவட் டத்தை நாலு சீமைகளாப் பிரிச்சு இருக்கோம். இதுல குந்தச் சீமையும் ஒண்ணு. இந்தச் சீமையில இருக்கிற எங்க படுக மக்களோட பிரச்னைகளைத் தீர்க்க, வாழ்வாதாரத்தைப் பெருக்க, வழிநடத்த என்று பல விஷயங்களுக்காக ஒரு பார்பத்தியைத் தேர்ந்தெடுப்போம். (பார்பத்தி என்றால், ஊர்நாட்டாமை என்று அர்த்தமாம்.) இந்த பார்பத்தி சொல்ற வாக்கும் கட்டளையும் எங்களுக்கு முக்கியமானது. குந்தச் சீமையின் பழைய பார்பத்தியோட குடும்ப உறுப்பினர்கள் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து நடக்க ஆரம்பிச்சுட்டார். அதனால, அவரை அந்தப் பொறுப்புல இருந்து நீக்கிட்டு புதிய நபரைத் தேர்ந்தெடுக்க

பார்பத்தி குளறுபடி... ஜெயலலிதா விழா புறக்கணிப்பு!

முடிவு பண்ணினோம். பல கட்ட ஆலோசனை நடத்தி, அன்னமலை முருகேசன் என்பவரை குந்தச் சீமைக்கு பார்பத்தியாத் தேர்ந்தெடுத்தோம். 22 ஊர்மக்கள் சேர்ந்து எடுத்த முடிவு இது. உள்ளூரைச் சேர்ந்த டி.பி.ராமன் இதுல கலகம் பண்ண ஆரம்பிச்சுட்டார். புத்திச்சந்திரனோட ஆதரவாளரான இந்த ராமன், தன்னிச்சையா பெள்ளா கவுடர் என்பவரைப் பார்பத்தியா அறிவிச்சு, புரமோட் பண்ண ஆரம்பிச்சார். இது எல்லாம் எம்.எல்.ஏ. புத்திச்சந்திரன் ஆசியோடதான் நடக்குது. காரணம்... தன் கன்ட்ரோல்ல இருக்கும் ஒருத்தர் பார்பத்தியா இருந்தால்தான், குந்தச் சீமைக்குள் செல்வாக்கா இருக்க முடியும்னு நினைக்கிறார். படுக இளைஞர்களை தன்னோட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர்றதுக்காக இப்படிப் பார்பத்தி விஷயத்தில் அரசியல் பண்றார் புத்திச்சந்திரன்.

இவங்களாவே அறிவிச்சிருக்கிற பார்பத்தியை வெச்சுக்கிட்டு போட்டி ஊர்க்கூட்டம் போடுறது, ஊர் மக்களுக்கு எதிரா செயல்படுறது, படுக மக்களோட நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட சங்கத் துக்கு எதிராப் போட்டி சங்கங்களை உருவாக்குறதுனு ஏகப்பட்டக் குழப்படிகள் நடக்குது. அதனாலதான், எல்லாத்துக்கும் காரணமான புத்திச்சந்திரனை கண்டிக்கச் சொல்லி முதல்வர் அம்மாவுக்கு லெட்டர் போட்டிருக்கோம்'' என்றார்கள் கடுப்புடன்.

அன்னமலை முருகேசனிடம் பேசியபோது, ''ஊர் மக்கள் தேர்ந்தெடுத்தது என்னைத்தான். ஆனா, ராமன் டீமோ வேறு ஒரு ஆளை பார்பத்தினு சொல்லி பிரச்னை பண்றாங்க. இதுக்கு எம்.எல்.ஏ.

பார்பத்தி குளறுபடி... ஜெயலலிதா விழா புறக்கணிப்பு!

புத்திச்சந்திரனோட பூரண ஆசீர்வாதமும் வழிநடத்தலும் இருக்குது. இவங்க பண்ற குழப்படியால், எங்க படுக சமுதாயம் சீர்கெடுது'' என்கிறார் வருத்தம் மேலிட.

''அம்மா கொடநாட்டில் தங்கி இருந்தபோது கட்சி ரீதியாக நடத்தப்பட்ட முக்கிய நிகழ்வு... மாற்றுக் கட்சியில் இருந்து 60 நபர்கள் அம்மா முன்னிலையில் நம் கழகத்தில் இணைந்ததுதான். இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏ-வான புத்திச்சந்திரன் வரவே இல்லை. தன் ஆதரவாளர்களையும் கலந்துக்க வேண்டாம்னு சொல்லிட்டார். ஏன்னா, இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் அர்ஜுனனைப் புத்திச்சந்திரனுக்கு ஆகாது. எனவே, அம்மாவின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த புத்திச்சந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகார் அனுப்பி இருக்கிறோம் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் சிலர்.

புத்திச்சந்திரனிடம் இதுபற்றி விளக்கம் கேட்டோம். ''மனசாட்சி இருக்கிற எந்த மனுஷனும் என் மேல் இப்படி அபாண்டமா புகார் சொல்ல மாட்டான். குந்தச்சீமை பார்பத்தி விஷயத்தில் எந்தக் குழப்படியும் இல்லை. பார்பத்தி என்பவர் எங்களைப் பொறுத்தவரை தெய்வப் பிரதிநிதி மாதிரி. அவர்கிட்ட கண்ணியமா நடந்து, ஆசியும் வழிகாட்டுதலும் வாங்குறதுதான் என்னோட வழக்கம். அந்தப் பதவிக்கு எதிராக் கலகம் பண்ற புத்தி எனக்குக் கனவிலும் வராது. ரெண்டு கோஷ்டிக்கும் இடையில் நின்னு பிரச்னையைத் தீர்க்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இது எங்க படுக சமுதாயத்தோட நான்கு சீமைத் தலைவர்களுக்கும் தெரியும்.  

60 பேர் இணைப்பு விழா நடந்த அன்னைக்கு நான் திருவண்ணாமலை கிரிவலத்தில் இருந்தேன். புரட்சித்தலைவி அம்மாவோட உதவியாளரிடம் இதைச் சொல்லி முறையா அனுமதி வாங் கிட்டுத்தான் திருவண்ணாமலை போனேன். மாவட்டச் செயலாளரையும், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவங்களையும் தவிர, வேற யாரையும் அன்றைக்கு பங்களாவுக்குள் அனுமதிக்கலை. எதுக்காக என் மேல் இத்தனை புகார் சொல் றாங்களோ?'' என்று நொந்துகொண்டார்.

அம்மா கோர்ட்டில் என்ன தீர்ப்போ?

- எஸ்.ஷக்தி