ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கல்லூரி மோசடி... கலங்கும் மாணவர்கள்!

குமரி கொந்தளிப்பு

##~##
கல்லூரி மோசடி... கலங்கும் மாணவர்கள்!

வியாபாரமாகிவிட்ட கல்வியை வைத்து என் னென்ன விபரீதங்கள் நடக்குமோ தெரியவில்லை. குமரியில் நடந்த இந்தக் கல்வி மோச டியால் கலங்கி நிற்கிறது மாணவர் சமுதாயம். 

குமரி மாவட்டம் திருவிதாங் கோட்டில் உள்ளது முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதில், சேட்டிலைட் கல்விக்கான அனு மதியை மட்டும் வாங்கிவிட்டு ரெகுலர் கல்லூரி என மாணவர் களைச் சேர்த்து, அவர்கள் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கியுள்ளனர். தங்களை ஏமாற்றியதாக மாணவர்கள் வீதிக்கு வந்திருப்பது குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 31-7-2012 அன்று, முதல்கட்டப் போராட்டத்தை ஆரம்பித்தனர் மாணவர்கள். அழகியமண்டபம் திங்கள் சந்தைச் சாலையை மறித்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். மாணவர்களோடு பெற்றோர், ஊர்ப்பெரியவர்கள் எனப் பல தரப்பினரும் போராட்டத்துக்கு ஆதரவாகத் திரளவே, கல்லூரி நிர்வாகம் விழிபிதுங்கி நின்றது. போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த காவல்துறையினர் வருவாய் அலுவலர் தலைமையில் கல்லூரி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததால், ஒரு வழியாக அன்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது.

கல்லூரி மோசடி... கலங்கும் மாணவர்கள்!

மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதி, பத்மனாபபுரம் கோட்டாட்சியர் உமா தலைமையில் தக்கலை காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கல்லூரி நிர்வாகம் இந்தப் பிரச்னை தொடர்பாகப் பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் அனுப்புவதாக ஒப்புக்கொண்டது. ஆனால், 20 நாட்கள் கடந்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த மாணவர்கள், 21-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மோசடி... கலங்கும் மாணவர்கள்!

போராட்டம் குறித்து சுமதி என்ற மாணவியிடம் பேசினோம். ''பெரிய மோசடியைப் பண்ணிட்டு எதுவுமே நடக்காத மாதிரி உட்கார்ந்திருக்காங்க. ரெகுலர் கோர்ஸ்னு சொல்லி அட்மிஷன் போட்டாங்க. மார்க் ஷீட்டைப் பார்த்த அப்புறம்தான் நாங்க படிச்சது சேட்டிலைட் கோர்ஸ்னு தெரிஞ்சுது. பணத்துக்காக எங்க எதிர்காலத்தையே பாழாக்கிட்டாங்க. சேட்டிலைட் கோர்ஸ் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் இல்லாதது. அதில் படிப்பது எங்களின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு எல்லாவற்றையும் பாதிக்கும். மாணவர்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் கொள்ளை அடிச்சிருக்காங்க. பொதுவாக, ரெகுலர் கல்லூரியில் வாங்கும் கட்டணத்தைவிட இங்கே அதிகம். 8,000, 10,000-ன்னு வசூல் செய்றாங்க. ஆனா, எந்த அடிப்படை வசதியும் இல்லை. குடிக்கத் தண்ணி கூட வைக்கல. 'இங்கிலீஷ் வித் கம்ப்யூட்டர் சயின்ஸ்’னு கோர்ஸுக்குப் பேர். ஆனா, கம்ப்யூட்டர் சம்பந்தமா எதுவுமே நடத்துவது இல்லை. ஐ.ஏ.எஸ். கோச்சிங்னு சொல்லி 2,500 ரூபாய் வசூல் பண்றாங்க. அது எல்லாமே வேஸ்ட். நாங்க பணம் கட்டினா,  வெள்ளைப் பேப்பர்ல எழுதி இதுதான் பில்னு தருவாங்க. அதுவும் சில நேரங் களில் பென்சில்லதான் எழுதிக் கொடுப்பாங்க. விளையாட ஒரு கிரவுண்ட் கூடக் கிடையாது. இதைப் பற்றிக் கேட்டதற்காக ரெண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து இருக்காங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரணும்னா, எங்களுக்கு ஒரு யூனியன் வேணும்னு கேட்கிறோம்’' என்ற கோரிக்கையோடு முடித்தார்.

கல்லூரி மோசடி... கலங்கும் மாணவர்கள்!

இதனிடையே, முதலாம் ஆண்டு மாணவர்களில் பலர் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேறு கல்லூரிகளில் சேர்ந்து விட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்மன் முகமது அலியிடம் பேசினோம். ''இவை எல்லாமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். எல்லாக் கல்லூரிகளிலும் சேட்டிலைட், ரெகுலர் என்ற பிரிவுகள் உள்ளன. இரண்டுக்கும் கோட் நம்பர் மட்டும்தான் மாறும். ஆனால், ஒரே வேல்யூதான். நாங்கள் ஏமாற்றி எல்லாம் சேர்க்கவில்லை. அவர்கள் தெளிவாக விசாரிக்காமல் சேர்ந்தால், நாங்கள் என்ன செய்ய முடியும்? யாரும் இங்கிருந்து வேறு கல்லூரிக்கு மாறவில்லை.

குடிநீருக்காக இரண்டு போர்வெல் போட்டிருக் கோம். இதுக்கு மேல் என்ன பண்ண முடியும்? யுனிவர்சிட்டி நிர்ணயித்த கட்டணத்தைவிட குறைவாகத்தான் பணம் வாங்குகிறோம். அதற்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்கு. ஒழுக்கம் இல்லாம நடந்துக்கிட்டதுனாலதான், ரெண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்தோம். யாரோ சொல்றதைக் கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக் காங்க. பேச்சுவார்த்தை மூலமாகப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படும்’' என்றார்.

தொடர்ந்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமரகுருவிடம் பேசினோம். ''முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கும் பிரச்னை குறித்துக் கேள்விப்பட்டோம். மாணவர்களின் எதிர் காலத்தைப் பாதிக்காத அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’' என்றார்.

இதனிடையே, போராட்டம் வீரியமடைவதை உணர்ந்த பல்கலைக்கழக ஆணையர்கள் உண்ணா விரதப் பந்தலுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத் தினர். ''வரும் 31-ம் தேதி பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களின் கூட்டம் நடக்கிறது. அன்று, இதுகுறித்துப் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்’' என்றனர். இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர் மாணவர்கள்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வேகமாக நடவடிக்கை எடுக்க

வேண்டும்.

- பி.கே. ராஜகுமார்

படங்கள்: ரா.ராம்குமார்