ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''கொச்சைப்படுத்துகிறார்கள்!''

கொதிக்கும் முஸ்லிம்கள்

##~##
''கொச்சைப்படுத்துகிறார்கள்!''

ஸ்லாமிய சகோதரர்கள் அனைவரையும் ரோட்டுக்கு அழைத்து வந்துவிட்டது அந்தப் படம்! 

'இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ (இஸ்லாமியர்களின் அப்பாவித்தனம்) என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் எடுத்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்களிடையே கொதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் யூ டியூப்பில் வெளியானதுமே, 'இஸ்லாம் மார்க்கத்தையும் நபிகள் நாயகத்தையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது’ என்று அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் போரைத் தொடங்கி இருக்கின்றன இஸ்லாமிய அமைப்புகள். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தும் அளவுக்கு விஷயம் விவகாரமானது.

யூ டியூப்பில் இருந்து டிரெய்லரை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தினம் தினம் ஒவ்வோர் அமைப் பாக அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு ஆதரவாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் கை கோத்திருக்கின்றன.

''கொச்சைப்படுத்துகிறார்கள்!''

முஸ்லிம் அமைப்புகள் என்ன சொல் கின்றன..?  

ஜே.எஸ்.ரிபாயீ (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர்):

''தங்கள் உயிரைவிட மேலாக முஸ்லிம்கள் மதிக்கும் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை மிக மோசமாகச் சித்திரித்துத் திரைப்படம் எடுத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த யூதப் பயங்கரவாதி சாம் பாசைல். 'குர்ஆனைத் தீயிட்டுக் கொளுத்துவோம்’ என சில காலம் முன்பு வாய் நீளம் காட்டிவிட்டுத் தலைமறைவான டெரி ஜோன்ஸுடன் கைகோத்துக்கொண்டு, அமெரிக்காவின் பின்புலத்தோடு அவர் படத் தைத் தயாரித்து இருக்கிறார். சமாதானமான, போர் இல்லாத, இன வெறியற்ற உலகம் சமைக்கப் போராடிவரும் வேளையில் இப்படி ஈனத்தனமான காரியத்தைச் செய்து இருக் கிறார்கள். பெண் பித்தர், மூன்றாம் தர ஆள் என்பதுபோல நபிகளாரின் புகழுக்குக் களங்கம் கற்பித்திருக்கும் இந்தச் செயலுக்குப் பின்னால் யூதச் சதி பின்னப்பட்டு இருக்கிறது. ஒபாமாவும் ஹிலாரியையும் பின்னிப் பிணைந்திருப்பதுபோல மோசமாகப் படம் எடுத்து இருந்தால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அந்தப் படத்தை அனுமதித்துவிடுவார்களா? இந்தப் படம் அமெரிக்காவுக்கு நாசத்தை உண்டாக்கும். உலகில் பயந்து வாழும் மக்களாக இன்று அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். மத ரீதியான போரை இந்தப் படத்தின் மூலம் தொடுத்திருக்கிறது அமெரிக்கா. ஒபாமா மீண்டும் அரியணையில் அமர்வதற்காக முஸ்லிம்களைக் காயப்படுத்திப் படம் எடுத்து விளம்பரத் தந்திரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எரிமலைகளாக குமுறிக்கொண்டு இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் கொந்தளிப்பை சர்வதேச சமூகம் அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது.''

''கொச்சைப்படுத்துகிறார்கள்!''

பி.ஜெயினுல் ஆபிதீன் (நிறுவன தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்):

''நபிகளாரைப் பாராட்டி சிலை வைத்தாலும் கார்ட்டூன் போட்டாலுமே முஸ்லிம்கள் பொறுக்க மாட்டார்கள் என்பது உலகத்துக்கே தெரிந்த செய்தி. அப்படிப்பட்ட நிலையில் நபிகளார் விபசாரியைத் தேடிப் போவதுபோலவும் சிறுவர்களுடன் ஹோமோசெக்ஸ் வைத்துக்கொள்வதுபோலவும் கொச்சையாகப் படம் எடுத்தால் முஸ்லிம்கள் கொதிப்படையாமல் எப்படி இருப்பார்கள்? இது மத நம்பிக்கைக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர். மெசெஞ்சர் என்ற படத்தில் நபிகள் நாயகத்தைக் காட்டாமலேயே படம் எடுத்து இருப்பார்கள். அதற்கே விமர்சனங்கள் வைக்கப்பட்டன. 'தனிப்பட்ட நபர் எடுத்த படத்துக்கு எதுவும் செய்ய முடியாது’ என்கிறது அமெரிக்கா. உலகத்தை மிரட்டும் அமெரிக்காவுக்கு ஒருவனை அடக்கத் தெரியாதா? தன்னைத் தோலுரிக்கிறான் எனத் தெரிந்ததும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை முடக்கத் தெரிந்த அமெரிக்காவுக்கு, ஜூலியன் அசாஞ்சை நாடு கடத்த முடிந்த ஒபாமாவுக்கு இப்போதுதான் கருத்துச் சுதந்திரம் பற்றி ஞாபகம் வருகிறதா?

''கொச்சைப்படுத்துகிறார்கள்!''

உண்மையை விமர்சனம் செய்வதற்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு. அவதூறுகளைச் சொல்லி கருத்துச் சொல்வதற்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. முஸ்லிம்களை உசுப்பிவிடும் வேலையை அமெரிக்கா செய்திருக்கிறது. இந்தப் படத்தை போப் ஆண்டவர்கூட கண்டிக்கவில்லை. இங்கே இருக்கிற பாதிரிமார்களும் கிறிஸ்துவ அமைப்புகளும் எதிர்க்கவில்லை. இதன் மூலம் இரு சமூகத்திடையே மோதல் போக்கை உண்டாக்க மறைமுகச் சதி பின்னப்பட்டு இருக்கிறது. எந்த மதத்திலும் இது மாதிரியான விஷயங்கள் நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை.''

கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா):

''மோசமான ஒரு படத்தை எடுத்ததோடு இல்லாமல், படத்தின் தயாரிப்பாளர் சாம் பாசிலி 'இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என்று கருத்தும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவருடைய படம் எந்தச் செய்தியைச் சொல்ல வருகிறது என்பது தெளிவாகிறது. இந்தப் படத்தின் மூலம் அரபு நாடுகளுக்கு இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி அதன் மீது தாக்குதல் தொடுக்கும் தருணத்தை அமெரிக்கா எதிர்ப்பார்த்துக் காத்திருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.''

மக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவது யாருக்குமே நல்லதல்ல!

- எம்.பரக்கத் அலி

படங்கள்: என்.விவேக், வீ.நாகமணி, ஜெ.வேங்கடராஜ்