ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''தண்ணி வரலே... காத்துதான் வருது!''

மணல் குவாரிகளால் அலறும் டெல்டா விவசாயிகள்!

##~##
''தண்ணி வரலே... காத்துதான் வருது!''

கிரானைட், மணல் என்று கனிம வளங் களைப் போட்டி போட்டு அழிப்பதில், தமிழ்நாட்டை எந்த மாநிலமும் மிஞ்சவே முடியாது. 

தாமிரபரணி, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவது குறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மணல் வியாபாரிகளின் கவனம் விளைநிலங்களில் இருக்கும் மண்ணை நோக்கித் திரும்பி விட்டது. நெற்களஞ்சியமான டெல்டாவில் ஏற்கெனவே தண்ணீர் இல்லாமலும், விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாய நிலங்கள் இப்போது, வீட்டுமனைகளாக மாறிவருகின்றன. இந்நிலையில் மீதம் உள்ள விளை நிலங்கள், மண் அள்ளுவதற்கு அனுமதிக்கப்பட்டு நாசமாக்கப்படுவதுதான் மிகவும் வேதனை.

நாகை மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் நிலங்களை வாங்கி, அதில் தங்கள் இஷ்டத்துக்கு மண் அள்ளுகின்றனர். பாசன வாய்க்கால், ஆறுகள் ஓடும் இடம், விளைநிலங்களில் எல்லாம் மண் அள்ளக் கூடாது என்ற விதிமுறையை மீறி, இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. காத்திருப்பு, கன்னியாநத்தம், நல்லாடை, கங்காதரபுரம் என்று, மண் அள்ளும்  இடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில், கங்காதரபுரம் ஊராட்சி கொண்டங்கி கிராமத்தில் மண் அள்ளுவது, மக்களின் தீவிர எதிர்ப்பைச் சம்பாதித்து உள்ளது. இதுகுறித்து தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

''தண்ணி வரலே... காத்துதான் வருது!''

இந்த விவகாரம் குறித்துப் பேசிய எழுமகளூர் கிராமத்தின் ஊர்த் தலைவரான வேணுகோபால்,

''தண்ணி வரலே... காத்துதான் வருது!''

''கொண்டங்கி கிராமம் எங்க ஊருக்கு மேற்கே இருக்கு. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் காந்தி என்பவர் இங்கே நிலம் வாங்கி அதில் மண் அள்ள  அனுமதி பெற்று இருக்கிறார். அது அடுத்த கிராமம் என்றாலும் எங்க ஊர் எல்லையை ஒட்டி இருப்பதால், எங்களுக்குத்தான் அதிக பாதிப்பு. அவங்க நிலத்தை ஆழமாகத் தோண்டத் தோண்ட, அதில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. அந்தத் தண்ணீரை மோட்டார் வெச்சு வெளியேத்திட்டு மண் அள்ளுறாங்க. இதனால, பக்கத்தில் இருக்கும் எங்க ஊரில் நிலத்தடி நீர்மட்டம் ரொம்பவே குறைஞ்சுடுச்சு. பம்புகளில் இப்போது தண்ணீர் வர்றதே இல்லை. குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயிடுச்சு. இப்படியே போனால் எங்களுடைய வாழ்வாதாரம் என்ன ஆவது?'' என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கங்காதரன், ''ஆற்றில் தண்ணி வரலைன்னாக்கூட நாங்க பம்ப்செட்டுல தண்ணீர் பாய்ச்சி இரண்டு போகம் விவசாயம் செஞ்சுடுவோம். நாப்பது, அம்பது அடியில எங்களுக்கு நல்ல தண்ணி கிடைச்சது. அதனால, சின்ன சின்ன விவசாயிகளும் பம்ப் செட் வெச்சிருக்கோம். ஆனா, அதுலயும் இப்ப தண்ணி வரல. ஆத்துலயும் தண்ணி வராம, பம்ப் செட்டுலயும் தண்ணி வரலைன்னா, எப்படி நாங்க விவசாயம் செய்யுறது?'' என்று பொங்கி னார்.

பா.ம.க-வைச் சேர்ந்த செல்வராஜ், ''3.3 மீட்டர் ஆழத்துக்குத்தான் மண் அள்ளணுங்கறது விதி. அப்படி எடுத்தா எங்களுக்குப் பாதிப்பு வராது. அதுல தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு இருக்கு. ஆனா, இவங்க கிட்டத்தட்ட ஏழெட்டு மீட்டர் ஆழத்துக்கு தோண்டுறாங்க. அங்க ஊறுகிற தண்ணீர் எல்லாத்தையும் வெளியேத்துறாங்க. அதோட... அந்த ஆழத்தை களி மண்ணைக் கொட்டி நிரப்புறாங்க. அதுதான் சிக்கலே. களிமண், தண்ணீரை உறிஞ்சி நிலத்துக்குக் கீழே அனுப்பாது. இவ்வளவு விளைநிலங்கள், நீராதாரங்கள் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் எப்படி டெல்டா பகுதியில் மண் அள்ள அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை. இப்போது பட்டா நிலங்களுக்கு மார்க்கெட் விலையைவிட அதிகம் கொடுத்து வாங்கி, மண் அள்ளப் பயன்படுத்துகிறார்கள். அதிகவிலை கிடைப்பதால் விவசாயிகள் பலரும் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். இதனால், வெகு விரைவில் டெல்டாவின் உணவு உற்பத்தியும் வேகமாக குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது'' என்று வேதனைப்பட்டார்.

கொண்டங்கி கிராமத்தில் மண் அள்ள  உரிமம் பெற்றிருக்கும் ஸ்ரீதர் காந்தியிடம் பேசினோம். ''எல்லா சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு முறைப்படிதான் அனுமதி வாங்கி இருக்கோம். அனுமதிக்கப்பட்ட அளவுதான் தோண்டுறோம். தோண்டும்போது சில நேரங்களில் ஆழம் அதிகமாப் போயிடுது. அப்படி தெரிஞ்சா உடனே மண்ணைப்  போட்டு மூடிடறோம். புகார் சொல்றவங்க யாரும் நான் மண் அள்ளும் கங்காதரபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவங்க இல்லை. அவங்க என்கிட்ட பணத்துக்காகப் பேரம்பேசி, நான் தராததால் இப்படிச் சொல்லிட்டுத் திரியுறாங்க. எந்த அதிகாரியும் எப்போ வேணும்னாலும் வந்து ஆய்வு செய்யட்டும். விதிமுறையை மீறி இருந்தா, நடவடிக்கை எடுக்கட்டும்'' என்றார்.

நாகை மாவட்ட கனிம வளத்துறையின் துணை இயக்குனர் ஜெயசீலனிடம் இது பற்றி கேட்டோம். ''உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்குப் பிறகு, மண் அள்ள யாருக்கும் உரிமம் தருவது இல்லை. முன்பு உரிமம் பெற்றவர்கள்தான் இப்போது மண் அள்ளுகின்றனர். அதையும் ஆய்வு செய்து மாவட்டத்தில் பல குவாரிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். கங்காதரபுரம் குவாரியை தாசில்தாரை அனுப்பி ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். அவருடைய அறிக்கையின் அடிப்படையில், விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பதில ளித்தார்.

விவசாயிகளுக்குத்தான் எப்படியெல்லாம் வருகிறது சோதனைகள்!

- கரு.முத்து