ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மீனவர்களை மிரட்டும் மணல் திட்டுகள்!

முத்துப்பேட்டை துயரம்

##~##
மீனவர்களை மிரட்டும் மணல் திட்டுகள்!

''கடலுக்குள் மீனவர்களுக்கு மழை, புயல் என்று ஏகப்பட்ட பிரச்னைகள். ஆனால், எங்களுக்கு கடலுக்குள் போறதே பெரும் பிரச்னையா இருக்கு'' என்று சோகம் காட்டுகிறார்கள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீனவர்கள்.

 கடற்கரை முழுவதும் அலையாத்திக் காடுகளும், சதுப்பு நிலமும் சூழ்ந்திருக்க கோரையாறுதான் முத்துப்பேட்டை மீனவர்களுக்கும் கடலுக்கும் பாலமாக இருக்கிறது. கோரையாற்றில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்துதான் கடலுக்குள் நுழைய முடியும். மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்லும்போது கடலுக்குள் செல்ல இவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வெயில் கொளுத்தும் மற்ற ஆறு மாதங்கள் இவர்கள் கடலுக்குள் கால் எடுத்து வைக்க படும்பாடு சொல்லி மாளாது. அந்த இன்னல்களைப்பற்றி விவரிக்கிறார் மீனவர் ஐபுகான்.

''சிறு வயதில் இருந்தே இங்கே மீன் பிடித்து வர்றேன். இந்தக் கடலில் மீன் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், கடலுக்குள் நுழைவதுதான் எங்களுக்குப் பெரும்பிரச்னை. மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடும்போது எந்தத் தடையும் இல்லாமல் கடலுக்குள் சுலபமாப் போயிடுவோம். ஆனால், கோடைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் வற்றிப்போவதால், எட்டு கி.மீ தூரத்தைக் கடக்க ஒன்றரை மணி நேரம் ஆகிடும். ஆறேழு அடி உயரத்துக்குத்தான் ஆற்றில் தண்ணீர் இருக்கும். அதனால் வழியில் இருக்கும் மணல் திட்டுக்கள் பெரும் இடைஞ்சல் கொடுக்கும். அந்த எட்டு கிலோ மீட்டரைக் கடப்பது நாலைந்து மலைகளைக் கடப்பதற்கு சமம்.

மீனவர்களை மிரட்டும் மணல் திட்டுகள்!

இதனால், பெரிய படகுகளைப் பயன் படுத்தி மீன் பிடிக்கப் போக முடியாது. மிகச்சிறிய டீசல் படகுகளைத்தான் பயன் படுத்த வேண்டியிருக்கும். அங்கங்கே மணல் திட்டுக்கள் தென்படுவதால், அந்த

மீனவர்களை மிரட்டும் மணல் திட்டுகள்!

இடங்களில் படகுகளைக் கஷ்டப்பட்டுத் தள்ளிக்கொண்டு போகவேண்டும். இதற்காகக் கூலி கொடுத்து கூடுதல் ஆட்களை அழைத்துப் போகிறோம்.

இந்த மணல் திட்டுப் பிரச்னையால் பிடித்த மீன்களைக்கூட நேரத்தோடு கொண்டு வந்து சேர்க்க முடியாது. மழைக் காலத்தில் காலை 8 மணிக்குள் சந்தைக்கு மீனைக் கொண்டு வந்துடுவோம். அதுவே கோடைக் காலம் என்றால் 11 மணிக்குத்தான் வர முடியும். இதனால் மீன்கள் நல்ல விலைக்குப் போகாது.  வேற வேலை தெரியாது என்பதால், எத்தனை சிரமம் என்றாலும் வயித்துப் பொழப்புக்கு இந்தத் தொழிலையே செஞ்சுட்டு இருக்கோம்'' என்றார் வலியோடு.

விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் மீரான் மொய்தீனும் தன் பங்குக்கு எள்ளும் கொள்ளுமாக வெடித்தார்.

''முத்துப்பேட்டையில் சுமார் 5,000 மீனவர்கள் இருக்கிறோம். 185 படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குள் போயிட்டு வருகிறோம். கோரையாற்றில் உள்ள அந்த எட்டு கிலோ மீட்டர் தூரத்தை மணல் திட்டு, பாறைகள் இல்லாமல் ஆழப்படுத்தித் தரும்படி திருத்துறைப்பூண்டி முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ-க்கள் எல்லோரிடமும் குமுறிப் பார்த்துட்டோம். ஆனா, யாரும் எங்க கோரிக்கைக்கு செவிசாய்க்கவே இல்லை.

மீனவர்களை மிரட்டும் மணல் திட்டுகள்!

கடந்த 2001-ல் அ.தி.மு.க. ஆட்சியில் கோரையாற்றைத் தூர்வார 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விட்டாங்க. ஆனா, அந்த டெண்டர் என்ன ஆச்சுன்னே தெரியலை. ஆற்றையும் தூர் வாரவே இல்லை. 2005-ல், கப்பல்துறை அமைச்சரா இருந்த டி.ஆர்.பாலு 1 கோடியே 65 லட்ச ரூபாய் செலவில் துறைமுகம் கட்டித் தர்றோம்னு சொன்னப்போ, சந்தோஷப்பட்டோம் ஆனா, ஒரு  துரும்பும் அசையலை. ஜி.கே.வாசனும் தன் பங்குக்கு 16 கோடி செலவில் துறைமுகம் கட்டப்படும்னு சொல்லி அடிக்கல் நாட்டினார். ஆனா, துறைமுகம்கிற பேச்சு மூழ்கின கப்பலாப் போச்சு. நான்கு மாதங்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா முத்துப்பேட்டை துறைமுகம், லகூன் தீவை சுற்றுலாத் தலமாக மாற்றுதல் போன்றவைக்காக 103 கோடியே 92 லட்சம் ஒதுக்கி இருக்காங்க. ஆனால், அந்தத் துறைமுகத்தை எங்களுக்குத் தேவையான இடத்தில் அமைக்காமல், முத்துப்பேட்டை யில் இருந்து 4 கி.மீ. தூரம் தள்ளி கோரையாற்றின் பாதியில் ஆரம் பிக்கப் போறாங்களாம். துறை முகத்தை அங்கே அமைப்பதால் எங் களுக்கு எந்தப் பலனும் இல்லை.

சமீபத்தில் இங்கு வந்த, சட்டமன்ற ஆய்வுக் குழுவிடம் சொல்லலாம்னு பார்த்தா, அவங்க எங்களைச் சந்திக்கவே இல்லை. மாவட்ட நிர்வாகமும் அதற்கான வாய்ப்பைத் தரவில்லை. பக்கத்து மாவட்டமான நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்தான் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால். அவரும் எங்களுக்கு உதவியாக ஒன்றும் செய்யலை. அரசுதான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு சொல்லணும்'' என்றார்.

முத்துப்பேட்டை மீனவர்களின் கோரிக்கைகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் நடராஜன் முன் வைத்தோம். நாம் சொல்வதைக் கவனமாகக் கேட்ட அவர், ''அதிகாரிகளை அனுப்பி விசாரிக்கிறேன். மீனவர்களின் நலன் நிச்சயம் பாதுகாக்கப்படும்'' என்றார்.

மீனவர்களின் கண்ணீரால்தான் கடல் கரித்துக் கிடக்கிறது!

- சி.சத்தியகுமார்