ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

தற்கொலை செய்த உடம்பில், கீறல்கள் இருக்குமா?

நாமக்கள் மாணவி மரணத்தில் மர்மம்

##~##
தற்கொலை செய்த உடம்பில், கீறல்கள் இருக்குமா?

'நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலக் கல்லூரியைச் சேர்ந்த பி.டெக். மாணவி காயத்ரியை, விடுதி அறையில் கற்பழித்துக் கொலை செய்து விட்டனர்’ என்று, ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. விசாரித்தோம். 

கிருஷ்ணகிரி மாவட்டம், அனுமன் தீர்த்தத்தில் உள்ள காயத்ரி வீட்டுக்கு நேரில் சென்றோம். காயத்ரியின் அப்பா வெற்றிவேல் நம்மிடம், ''நான் கவர்மென்ட் பஸ்ஸில் கண்டக்டரா இருக்கேன். மூத்த பெண் காயத்ரிக்கு கவுன்சிலிங் மூலம் ஸீட் கிடைச்சது. வீட்டில் இருந்து கல்லூரி தூரம் என்பதால், ஹாஸ்டல்ல சேர்த்தேன். மாசத்துக்கு மூணு நாட்கள் லீவு விடுவாங்க. அப்போ ஹாஸ்டலில் இருந்து எங்களுக்கு போன் பண்ணித் தகவல் சொல்வாங்க. எங்க ஊருக்கு வரும் காலேஜ் பஸ்ஸில் கொண்டுவந்து இறக்கி விடுவாங்க. போனவாரம் வெள்ளி, சனி, ஞாயிறு லீவு விட்டிருக்காங்க. ஆனா, எங்களுக்கு எந்தத் தகவலும் வரலை. பொண்ணும் ஊருக்கு வரலை. நான் வெள்ளிக்கிழமை காயத்ரிக்குப் போன் பண்ணும்போதுதான், 'மூணு நாள் லீவு விட்டிருக்காங்கப்பா. மெடிக்கல் கேம்ப் இருக்குன்னு சொல்லி என்னை வார்டன் இங்கேயே இருக்கச் சொல்லிட்டாங்க’னு சொல்லுச்சு. சனிக்கிழமை போன் பண்ணினேன். 'பரீட்சை இருக்கு. படிச்சுட்டு இருக்கேன். ஹாஸ்டல்ல எல்

தற்கொலை செய்த உடம்பில், கீறல்கள் இருக்குமா?

லோருமே ஊருக்குப் போயிட்டாங்கப்பா. நான் மட்டும்தான் இருக்கேன்’னு சொல்லுச்சு. அதுக்கப்புறம் திங்கள் கிழமை சாய்ந்திரம் ஹாஸ்டல்ல இருந்து போன் பண்ணி, 'உங்க பொண்ணு தூக்குப்போட்டு செத்துப்போயிட்டா’னு தகவல் சொன்னாங்க...'' என்று கண் கலங்கினார்.

சற்று நேரம் கழித்து மீண்டும் பேசியவர், ''திருச்செங்கோடு கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு எங்க ஊர் மக்கள் ஒண்ணு சேர்ந்து போனோம். யாருமே இல்லாத அனாதையைப் போல என் பொண்ணு உடம்பை அங்கே போட்டு வச்சிருந்தாங்க. சுடிதார் பேன்ட் கிழிஞ்சிருந்துச்சு. தொடையில, கழுத்தில் எல்லாம் கீறல் இருந்துச்சு. தலையெல்லாம் மண்ணு. தூக்குப் போட்டு செத்துப்போற பொண்ணுக்கு எப்படிங்க இப்படி இருக்கும்? அதுவும் இல்லாம அவ தூக்குப் போட்டுக்குற அளவுக்குக் கோழையும் கிடையாது. என் பொண்ணை மட்டும் ஏன் லீவுக்கு வீட்டுக்கு அனுப்பாம இருந்தாங்க? திட்டம் போட்டு அந்த காலேஜ்ல இருக்கும் சிலர்தான் என் புள்ளையை சின்னாபின்னமாக்கி இருக்காங்க.

திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். அங்க இருந்த இன்ஸ்பெக்டரு, 'நீ எந்த செக்ஷன்ல கேஸ் போடச் சொல்றியோ... போடுறேன். சாலை மறியல் வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா, காலேஜ்ல இருந்து யாரும் வர மாட் டாங்க. என்னால அவங்களை அரெஸ்ட் பண்ணவும் முடியாது. அது ரொம்பப் பெரிய இடம். பேசாம பொண்ணை எடுத்துட்டுப் போய் அடக்கம் பண்ணிட்டுப் பொழைக்கிற வழியைப் பாருங்க’னு கூசாமச் சொன்னார்.

அந்த காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்க பல பேரு எனக்குப் போன் பண்ணி, 'அப்பா காலேஜ் கொடுக்குற காசுக்கு விலை போயிடாதீங்க. உங்க பொண்ணு மாதிரி இங்கே பல பொண்ணுங்க செத்திருக்காங்க. ஆனா, எந்த விஷயமும் வெளியே வராம அமுக்கிட்டாங்க’னு அழுதாங்க. இந்த ஏழைப்பட்டவனால என்னங்க செய்ய முடியும்?'' என்று அழ ஆரம்பித்தார்.

காயத்ரியோடு படிக்கும் மாணவிகள் சிலரிடம் பேசினோம். ''ஹாஸ்டலுக்குள் அவ்வளவு எளிதில் யாரும் போய்விட முடியாது. மேனேஜ்மென்ட் ஆட்கள்தான் உள்ளே வந்திருக்க முடியும். அப்படி யார் வந்தாலும் நிச்சயமா வார்டனுக்குத் தெரிந்து தான் வந்திருப்பார்கள். வார்டனை விசாரித்தால் முழு உண்மை தெரியவரும்'' என்றார்கள்.

காயத்ரி மரணத்துக்கு நீதி கேட்டு, கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இரண்டு நாட்கள் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்தவே, கல்லூரியைக் கால வரையின்றி மூடி இருக்கிறது நிர்வாகம்.

கல்லூரியின் நிர்வாகியிடம் பேசினோம். ''போஸ்ட் மார்ட்டம் அறிக்கைப்படி காயத்ரி உடம்பில் எங்கேயும் காயம் இல்லை. கற்பழிப்பு நடக்கவும் இல்லை. கழுத்து எலும்பு இறுக்கப்பட்டதால்தான் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. நாங்கள் கல்லூரிக்கு லீவு விட்ட பிறகும், நிறைய அரியர்ஸ் இருந்ததால் படிக்க வேண்டும் என்று அந்தப் பெண்தான் ஊருக்குப் போகாமல் ஹாஸ்டலில் இருந்திருக்கிறார். காயத்ரியின் அப்பா, 'சரியாகப் படிக்கவில்லை’ என்று போனில் திட்டி இருக்கிறார். அந்த வருத்தத்தில்தான் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கிறார்'' என்று சொன்னார்.  

திருச்செங்கோடு புறநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தியிடம் கேட்டபோது, ''நான் யாருக்கும் சாதகமாவோ, பாதகமாவோ நடந்துக்க மாட்டேன். நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம்தான் நாங்க இருப்போம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் காயத்ரி கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. காயத்ரி குடும்பத்தினர் ஆதங்கத்தில் பேசுகிறார்கள்'' என்றார்.

தன்னுடைய நேர்மையை கல்லூரி நிர்வாகம்தான் நிரூபிக்க வேண்டும்!

- வீ.கே.ரமேஷ்