ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஜவுளிப் பூங்காவுக்குப் பதில் அனல் மின் நிலையமா?

ஆவேசத்தில் திருப்பூர் மக்கள்

##~##
ஜவுளிப் பூங்காவுக்குப் பதில் அனல் மின் நிலையமா?

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து, அங்குள்ள மக்கள் தொடர் போராட்டம் நடத்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் சூழலில், திருப்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் முயற்சி ஒன்று கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.   

அனல்மின் நிலைய எதிர்ப்புக் குழுவின் ஒருங் கிணைப்பாளர் சின்னசாமியிடம் பேசினோம். ''ஊத்துக்குளி ஒன்றியத்தில் உள்ள வடமுகம் காங்கேயம்பாளையத்தில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆறு வருடங்களுக்கு முன், இங்கே ஐவுளிப் பூங்கா ஒன்றை அரசு அமைக்க இருப்பதாகச் சொல்லி சுமார் 350 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார்கள். அப்போதே நிலத்தைச் சுற்றி முள்வேலி அமைத்தனர். இந்த முள்வேலி அமைக்கப்பட்டதில், பலருடைய வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன என்று 25 வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன.

அரசு ஜவுளிப் பூங்கா வரும் என்று நினைத்திருந்த எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி தரும்விதமாக, 'கிரேட் இந்தியன் லினன் அண்டு டெக்ஸ்டைல் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனப் பெயர் பலகை வைக்கப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை.

ஜவுளிப் பூங்காவுக்குப் பதில் அனல் மின் நிலையமா?

கடந்த மாதம் மோகன்ராஜ் என்பவர் இந்த நிறுவனத்தின் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு

ஜவுளிப் பூங்காவுக்குப் பதில் அனல் மின் நிலையமா?

எங்களிடம் வந்தார். 'இந்த இடத்தில் 'ஐஜி3 இன்ஃப்ரா லிமிடெட்’ என்ற தனியார் அனல் மின் நிலையம் வருகிறது. இதுகுறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது’ என்றார்.

உடனே சுமார் 2,000 மக்கள் திரண்டு ஆட்சியரை சந்தித்து, 'அனல்மின் நிலையம் அமைக்க விட மாட்டோம்’ என்று எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகளோ, 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் நேரத்தில் மாசு ஏற்படாது. இங்கே இருந்து வெளியேறும் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படாது’ என்றும் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தின் இணையதளத்தில், 'இந்தப் பகுதியில் பள்ளிகளோ, புராதனக் கோயில்களோ, நீர்நிலைகளோ இல்லை. விளைநிலங்கள் அறவே இல்லை, மக்கள் வாழத் தகுதி இல்லாத இடம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் உண்மையில், இங்கு 400 ஏக்கரில் புத்தூர் பள்ளபாளையம் குளம் உள்ளது. கம்பு, சோளம், மஞ்சள் போன்ற பொருட்கள் விளைகின்றன. இங்கே 25 பள்ளிகளும் புராதனக் கோயில்களும் உள்ளன என்ற உண்மையை அந்த நிறுவனம் மறைத்து

விட்டது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு வராது என்று சொல்லப்படுவதும் உண்மை அல்ல. ஏனென்றால், நிலக்கரித் துகள்கள் எல்லா இடங்களிலும் பரவும். இந்த மண்ணில் கார்பன் அதிகமாகி மண்ணின் திறன் மங்கி மலட்டு நிலமாகிவிடும். ஊத்துக்குளி என்றாலே பால், வெண்ணெய்தான் பிரபலம். அதற்குக் காரணம் இந்தப்பகுதி மண்ணில் உள்ள அதிகமான கால்சியம். ஆனால், இந்த மண்ணில் கார்பன் கலக்கும்போது,

ஜவுளிப் பூங்காவுக்குப் பதில் அனல் மின் நிலையமா?

இங்கு விளையும் பயிர்களைச் சாப்பிடும் கால்நடைகளும் மலடாகி விடும். அதனால், மக்களையும் மண்ணையும் பாதிக்கும் அனல்மின் நிலையம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வும் வருவாய்த் துறை அமைச்சருமான தோப்பு வெங்கடாசலத்திடம் இதுகுறித்து மனு கொடுத்த நேரத்தில், 'நிச்சயமாக, மின் நிலையம் வராமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் மீறி அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்தால், மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்'' என்று எச்சரித்தார்.

இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துப் போராடத் தொடங்கியிருக்கும் தே.மு.தி.க-வின் திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் குழந்தைவேலு, ''இந்தப் பகுதியில் தனியார் மின் நிலையம் அமைக்க முயற்சித்தால், எங்கள் கட்சி அதைக் கடுமையாக எதிர்க்கும். தேவைப்பட்டால் கேப்டனை அழைத்துவந்து மிகப்பெரிய போராட் டம் நடத்துவோம். கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துப் போராட்டம் நடத்துவோம்'' என்று கச்சை கட்டுகிறார்.

இந்தச் சூழல் குறித்து, திருப்பூர் மாவட்ட ஆட் சியர் மதிவாணனிடம் பேசினோம். ''இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது. மாசுக்கட்டுப்பாட்டுத் துறையில் இருந்து, அந்தப் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்கச் சொல்லி இருந்தனர். ஆனால், மக்கள் பிரச்னை செய்கிறார்கள். ஆனாலும் அவர்களின் கருத்துகளைப் பதிவுசெய்து அனுப்பி உள்ளேன்'' என்றார்

வருவாய்த் துறை அமைச்சரும் பெருந்துறைத் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான தோப்பு வெங்க டாசலம், ''இந்தப் பிரச்னையை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்'' என்கிறார்.

நாட்டுக்கு வளர்ச்சி, மக்களுக்குப் பாதுகாப்பு இரண்டும் அவசியம். அதனால், எந்த ஒரு நடவடிக்கை என்றாலும், ஆரம்ப கட்டத்திலேயே தெளிவான முடிவு எடுக்கப்பட வேண்டும்.  

  - ம.சபரி

படங்கள்: க.ரமேஷ்