ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''மற்ற பகுதிக்கும் தீ பரவியிருந்தால்..?''

திகில் கிளப்பும் மதுரை விபத்து!

##~##
''மற்ற பகுதிக்கும் தீ பரவியிருந்தால்..?''

சிவகாசி வெடி விபத்து ஏற்படுத்திய கொடூரச் சுவடுகள் மறையும் முன்பே, மதுரையில் நான்கு உயிர் களைப் பஸ்பமாக்கிவிட்டது தீயின் சுடுநாக்குகள்! 

டி.வி.எஸ். குழுமத்தில் டயர் தயாரிக்கும் பிரிவான டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா டயர்ஸ் நிறுவனம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் செயல்படுகிறது. ஒரு ஷிஃப்ட்டுக்கு 2,000 பேர் வீதம், மொத்தம் 6,000 பேர் பணிபுரியும் இந்த நிறுவனத்தில், இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்துக்குமான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் பெரும்பாலானவை ஏற்றுமதி யாகின்றன.

இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட டயர்களுக்கு 'ஃபினிஷிங் டச்’ கொடுப்பதற்காக ஒருவிதமான பெயின்ட் பயன்படுத்துவார்கள். இதற்காக, பெட்ரோலியப் பொருட்கள் அடங்கிய கரைசலுடன், டயர் பேஸ்ட்டைக் கலந்து பெயின்ட் தயாரிக்கும் 'பெயின்ட் ஷாப்’ என்ற கட்டடம் இருக்கிறது. சுமார் 20 அடி நீளமும் 10 அடி அகலமும்கொண்ட இந்தக் கட்டடத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மிக அதிக எரிசக்தி கொண்ட திரவம் என்பதால், விபத்து ஏற்பட்ட மறு கணமே அதில் சிக்கி மூன்று பேர் கரிக்கட்டை ஆகிவிட்டார்கள். அவர்களின் மண்டையோடும், உடலில் சிறு பகுதியும் மட்டுமே எஞ்சியது. மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் பலியானார்.

''மற்ற பகுதிக்கும் தீ பரவியிருந்தால்..?''

விபத்தில் காயமடைந்த மேலும் ஐந்து பேர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

''மற்ற பகுதிக்கும் தீ பரவியிருந்தால்..?''

வருகிறார்கள். அவர்களில் வீரபத்திரனிடம் பேசினோம். 'அந்த பெயின்ட் ஷாப்ல மொத்தம் 12 பேர் வேலை செய்றோம். இன்னைக்கு ஒன்பது பேர்தான் வேலைக்கு வந்திருந்தோம். சால்வன்ஸ் திரவத்துடன், டயர் பேஸ்ட்டைக் கலக்குவதற்கு மொத்தம் ஏழு மோட்டார்கள் இருக்கிறது. அதில் ஒரு மோட்டாரில் மின் கசிவு காரணமாக திடீர்னு தீப்பிடிச்சிருச்சு. அதைக் கவனிக்கும் முன்பே வெடிகுண்டு போல வெடித்து, தீப்பிழம்பு கிளம்பிருச்சு. உடனே அலறியடித்துக்கொண்டு எல்லோரும் வெளியே ஓடினோம். வெளியே வர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்பதால், அடித்துப்பிடித்து ஓடிவந்தோம்.  

வெளியே வந்த பிறகுதான் உள்ளே நான்கு பேர் மாட்டிக் கொண்டதை அறிந்தோம். அதில் பூலாம்பட்டியைச் சேர்ந்த சித்திரைப்பூ என்பவரைக் காப்பாற்றி சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் அவர் இறந்துவிட்டார். உமாசங்கர், சந்திரசேகர், மணிகண்டன் என்ற மூன்று பேர் உள்ளேயே கருகிவிட்டார்கள்' என்றார் கண்ணீருடன்.

தீயணைப்புப் பணிகளைப் பார்வையிட்ட தென் மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குனர்

''மற்ற பகுதிக்கும் தீ பரவியிருந்தால்..?''

சாகுல் ஹமீது, 'பெயின்ட் தயாரிக்கும் திரவத்தில் அதிக எரிசக்திகொண்ட பெட்ரோலிய மூலப் பொருள் இருந்ததால், கண நேரத்தில் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. காலை 7.35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு 7.50-க்குத்தான் தகவல் கிடைத்துள்ளது. 8 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில், மதுரையில் இருந்து நுரையைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தும் வண்டியும் வந்துவிட்டது.

இந்த பெயின்ட் ஷாப்புக்கு இடது புறம் மூன்று ராட்சத டேங்கர்களில் சால்வன்ஸ் திரவமும், பின்புறம் 2,000 கிலோ கந்தகமும், வலது புறம் சுமார் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுகொண்ட டீசல் நிலையமும் இருக்கின்றன. தீயணைப்புப் பணி நடந்துகொண்டிருந்தபோதே, இந்தப் பகுதிகளில் தீ பரவாத வண்ணம் தரையிலும், கட்டடங்கள் மீதும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்'' என்றார்.

'தொழிற்சாலைப் பாதுகாப்பு விதிப்படி, ஓரளவுக்கு சரியான இடைவெளிவிட்டுக் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதால், தீ பரவவில்லை. தப்பி வந்த ஊழியர்களும், மற்ற ஊழியர்களும் சேர்ந்து சுமார் 60 தீயணைப்பான்களைக் கொண்டு தீயுடன் போராடியிருக்கிறார்கள். அதனால்தான் தீயணைப்புத் துறையினருக்கு வேலை எளிதாக இருந்தது. மற்ற பகுதிக்கும் தீ பரவியிருந்தால், காலை ஷிஃப்ட்டில் பணியில் இருந்த 2,000 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும்' என்றார் போலீஸ் காரர் ஒருவர்.

காயமடைந்த வரின் உறவினரான வீரணன், 'விபத்து நடந்து நான்கு மணி நேரமாகியும், இறந்தவர்கள் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விபத்து நடந்த இடம் எது என்றும் ஊழியர்களின் குடும்பங் களுக்குச் சொல்லவில்லை. இதனால், ஒவ்வொரு ஊழியரையும் தேடி அவர் களது குடும்பத்தினர் ஃபேக்டரிக்கு வந்து விட்டார்கள். செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை என்றதும், இறந்தது நம் பிள்ளைதான் என்று ஆளாளுக்கு அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். போலீஸாராவது இறந்தவர்கள் பெயரைச் சொல்லியிருக்கலாம்.

இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு வசதிகள் சரியாகவே இருக்கலாம். ஆனால், ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தார்களா? என்று தெரியவில்லை. டயர் பொருத்தப்பட்ட உயரமான இரும்பு ஏணியை தள்ளிச் சென்றபோது, மின் வயரில் உரசி கடந்த ஆண்டு இரண்டு பேர் பலியாகிவிட்டார்கள். இப்போதுகூட, போதிய விழிப்பு உணர்வு இல்லாததால்தான் நான்கு பேர் இறந்திருக்கிறார்கள்' என்றார் கவலையுடன்.

இந்த விபத்தில் இருந்து நிறுவனம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இனி ஒரு முறை இது போன்ற உயிர் சேதங்கள் நிகழாமல் இருக்கும்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: ஜெ.பிரதீப் ஸ்டீபன் ராஜ்