ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

அணு உலைக்கு எதிராக இரண்டாவது உயிர்!

உயிரைப் பறித்ததா விமானம்?

##~##
அணு உலைக்கு எதிராக இரண்டாவது உயிர்!

ணு உலை எதிர்ப்பாளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடந்த சாலை மறியலில் அந்தோணி ஜான் என்ற மீனவர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பரபரப்பு அடங்கு வதற்குள், இடிந்தகரையில் இன்னும் ஓர் உயிர் பறிபோயிருக்கிறது! 

அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது, அணு உலையில் யுரேனியம் நிரப்புவதைத் தடுத்து நிறுத்துவது, அணு உலையை நிரந்தரமாக மூடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13-ம் தேதியில் இருந்து இடிந்தகரை, கூந்தன்குழி மீனவக் கிராமங்களில் கடலுக்குள் இறங்கி நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர், அணு உலை எதிர்ப்பாளர்கள். இந்தப் போராட்டக் குழுவினரைக் கண்காணிக்க கடலில் இரண்டு கப்பல்கள் நின்றன. கடற்படை ரோந்து விமானமும் இடிந்தகரை பகுதியை வட்டமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது. அந்த விமானம் அடிக்கடி தாழ்வாகப் பறந்த வண்ணம் இருக்க, 'விமானத்தைப் பார்த்து யாரும் அச்சப்படத் தேவை இல்லை’ என்று போராட்டக்காரர்கள் அறிவித்த வண்ணம் இருந்தனர்.

அணு உலைக்கு எதிராக இரண்டாவது உயிர்!

காலை 11 மணிக்கு, விமானம் மிகவும் தாழ் வாகப் பறந்தபோது தூண்டில் வளைவின் மீது

அணு உலைக்கு எதிராக இரண்டாவது உயிர்!

நின்றுகொண்டு இருந்த இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர், விமானம் மோதி விடுமோ என்ற அச்சத்தில் நிலை குலைந்து விழுந்தார். உடனே, சகாயத்துக்கு முதல்உதவி செய்து, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி 14-ம் தேதி சகாயம் இறந்து விடவே, உச்சக் கட்டக் கொதிநிலையில் இருக்கிறார்கள் மக்கள்.

சகாயத்தின் உறவினர் அமலன் நம்மிடம் பேசினார். ''சகாயம் எனக்கு சித்தப்பா முறை. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து சவேரியார் கோயில் கடற்கரையில் இறங்கி அமைதியாகப் போராடிட்டு இருந்தோம். நானும் அவங்களோடதான் நின்னேன். அதுவரை உயரத்தில் பறந்த விமானம், திடீர்னு எங்களை நோக்கித் தாழ்வாகப் பறந்தது. முட்டுவது மாதிரி வேகமாக எங்களை நெருங்கி வந்தது. அந்த நேரம் காது கிழியிற மாதிரி பயங்கரச் சத்தம். நொடிப் பொழுதில் விமானம் எங்களைத் தாண்டிப் போயிருச்சு. அந்தப் பயத்தில் பலர் மயங்கி விழுந்துட்டாங்க. மற்றவங்க எல்லாம் கொஞ்ச நேரத்தில் முழிச்சுட்டாங்க. ஆனா, சித்தப்பா மட்டும் கண்ணைத் திறக்கவே இல்ல. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுடுச்சு. பதறிப்போய் ராதாபுரத்தில் ஒரு ஆஸ்பத்திரிக்குக் கூட் டிட்டுப் போனோம். அங்கே போதுமான வசதிகள் இல்லைன்னு, நாகர்கோவிலுக்கு கொண்டுபோகச் சொன்னாங்க. அங்கே இ.சி.ஜி., ஸ்கேன் எடுக்கச் சொன்னாங்க. அதிர்ச்சி காரணமா கீழே விழுந்ததில் மூளையில் ஒரு நரம்பு வெடிச்சு சித்தப்பா இறந்துட்டதா சொல்றாங்க. எங்க சித்தப்பா மரணத்துக்கு அந்த விமான பைலட்டும் அரசும்தான் பொறுப்பு'' என்று சீறினார்.

சகாயத்தின் மனைவி சமினா, ''எங்க மேல தடியடி, கண்ணீர்ப் புகைனு வீசுன காவல் துறை அதிகாரிங்க, என் கணவர் விமானத்தைப் பார்த்துப் பயந்து கீழே விழுந்தப்ப கண்டுக்கவே இல்ல. எங்க ஊர்க்காரங்கதான் தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. எங்க வாழ் வாதாரத்தைக் காப்பாத்திக்க நாங்க போராடுறது தப்பா? இப்போ, என் வீட்டுக்காரர் உயிரையே பறிச்சுட்டாங்க... எனக்கு நாலு குழந்தைங்க. இனி அவங்களுக்கு எப்படி நான் கஞ்சி ஊத்துவேன்?'' என்று கதறி அழுதார்.

அணு உலைக்கு எதிராக இரண்டாவது உயிர்!

மருத்துவமனையில் இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வரும் எழுத்தாளர் லட்சுமி மணிவண்ணன், ''தேசியப் பாதுகாப்பு மையத்தை மத்திய அரசு ஏற்படுத்த முனைந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. 'சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கும் மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு எப்படித் தலையிடலாம்’ என்று கேட்டவர் அவர். அப்படி இருக்கும்போது கடற்படை ரோந்து விமானத்தின் மூலம் மத்திய அரசு, இப்படி மக்களை அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்கிறாரா..? ஒருவேளை, அனுமதி பெறாமலேயே இப்படி அத்துமீறல் நடந்திருந்தால், மாநில அரசின் சுயாட்சியையும் தாண்டி தேசியப் பாதுகாப்பு மையத்தை மத்திய அரசு நிறுவ முயல்வதாக, ஜெயலலிதாவும் போராட்டக் களத்துக்கு வர வேண்டும்'' என்றார்.

சகாயம் இறந்த செய்தி இடிந்தகரையில் கடலில் இறங்கிப் போராடியவர்களுக்குத் தெரியவர... அன்றைய போராட் டத்தை முடித்துக் கொண்டு கறுப்புக் கொடிகளுடன் இடிந்தகரை தெருக்களில் மௌன ஊர்வலம் நடத்தினர். கூத்தங்குழி மீனவக் கிராமத்திலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கறுப்புக் கொடியுடன் ஊர்வலம் சென்றனர்.

சகாயம் மரணத்தை சந்தேகத்துக்கிடமான மரணம் என்று, கூடங்குளம் காவல் நிலையத்தில் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்தனர். 'விமானத்தைத் தாழ்வாகப் பறக்கச் செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கியதுதான் சகாயத்தின் மரணத் துக்குக் காரணம் என்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் வரை அவருடைய உடலை வாங்க மாட்டோம்’ என்று சகாயத்தின் உறவினர்கள் உறுதியாக இருக்க... அவ்வாறே வழக்குப் பதிவு செய்யப் பட்டது. அடுத்து, விமானத்தை ஓட்டிய கடற்படை விமானி மற்றும் அவருக்கு உத்தரவிட்ட அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அமைதி தென்படவே இல்லை!

- என்.சுவாமிநாதன்

படங்கள்: எல்.ராஜேந்திரன்