Published:Updated:

ரோடும் போச்சு... வீடும் போச்சு!

அலறும் குமரன்குடில் வாசிகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
ரோடும் போச்சு... வீடும் போச்சு!

'மழை நீர் வெளியே செல்வதற்குக் கட்டப்படும் கால்வாயால் நாங்கள் படும் அவஸ்தையை நீங்களே வந்து பாருங்கள்’ - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) அழைத்தனர் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள குமரன் குடில்வாசிகள். விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் 194-வது வார்டுக்கு உட்பட்ட  குமரன்குடில் பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள சக்தி சீனிவாசன் சாலையில்தான் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடக்கின்றன. வீட்டில் இருந்து எப்படி வெளியே வருவீர்கள் என சவால்விடும்படி வீட்டு வாசலை ஒட்டி நான்கு அடி அகலத்துக்கு பொக்லைன் பள்ளம். பள்ளத்துக்குள் தயாரித்து வைக்கப்பட்ட 'ப’ வடிவ சிமென்ட் தொட்டிகளை இறக்கி அதை முக்கால் அடி சிமென்ட் தளத்தால் மூடி வைத்திருக்கிறார்கள். இந்தத் தொட்டி, சாலையை விட சுமார் இரண்டு அடி உயரத்துக்கு நிற்கிறது. வீட்டுக்குள் இருந்து வெளியே வந்ததும் தடுப்புச் சுவர் போல நிற்கிறது  கால்வாய் சுவர்கள். 

தட்டுத்தடுமாறி சிமென்ட் கால்வாய் மேல் ஏறி வீட்டைவிட்டு வெளியே வந்த முதியவர் வெங்கட்ராமன், ''இந்த ஏரியாவுக்கு வந்து 26 வருஷம் ஆச்சு. சவுக்குத் தோப்பா இருந்த இந்தப் பகுதியில் இப்போ வீடுகள் பெருகிடுச்சு. சாலைகளை உயர்த்திய போது, வீடும் சாலையும் ஒரே மட்டமாக மாறிவிட்டன.  இப்போ மழை நீர் கால்வாய்க்காக சிமென்ட் தொட்டிகளைப் போட்டு வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி செய்துட்டாங்க'' என்றார் குமுறலுடன்.

ரோடும் போச்சு... வீடும் போச்சு!

அந்தப் பகுதியைச் சேர்ந்த காயத்ரி, அபிராமி சுந்தரி ஆகியோர், ''கால்வாய்க்காகக் குழி வெட்டுகிறேன்னு சொல்லி, குடிதண்ணீர் பைப், தொலைபேசி இணைப்பு, கேபிள் இணைப்பு எல்லாவற்றையும் அறுத்து விட்டனர். குடிதண்ணீர் சரியாகக் கிடைப்பதும் இல்லை. உடைந்த குடிதண்ணீர்க் குழாய் வழியா சாக்கடை நீர் வருவதால் அவஸ்தைப்படுறோம்'' என்றனர்.

ரோடும் போச்சு... வீடும் போச்சு!

குமரன் குடில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சுவாமிநாதன், நரசிம்மன், ராஜசேகரன், பாண்டியன் ஆகியோர், ''வார்டு எண் 194, மண்டலம்-15 என்ற அறிவிப்புப் பலகைகளில் மட்டும்தான் எங்கள் பகுதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டது என்று தெரிகிறது. மற்றபடி, மாநகராட்சியால் எந்த உதவியும் இல்லை. பேரூராட்சியாக இருந்தபோது 'நமக்கு நாமே’ திட்டப்படி எங்கள் சங்கம் செயல்படுத்திய குடிதண்ணீர்தான் இந்த ஏரியா மக்களுக்குக் கிடைக்கிறது. எங்கள் அமைப்பு வைத்த கோரிக்கையின் பேரில் தனியார் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் போட்டுக் கொடுத்த சிமென்ட் சாலைதான் சக்தி சீனிவாசன் சாலை. இப்போது, தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கையின் பேரில் இந்தப் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மழை நீர்க் கால்வாய் பணி முறைப்படி நடைபெறவில்லை. சாலை மட்டத்தைவிட கூடுதல் உயரத்தில் சிமென்ட் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மூடி போடும் போது இன்னும் உயரம் அதிகரிக்கும். இதனால், வீட்டில் இருந்து வெளியில் வர முடியவில்லை. கார், பைக் போன்ற வாகனங்களை வெளியே எடுக்க முடியவில்லை. மெயின் ரோட்டைத் தொடுகிற குறுக்குத் தெருக்களும் இந்தப் பள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.

ரோடும் போச்சு... வீடும் போச்சு!

'சிமென்ட் தொட்டிகளை ஏன் இவ்வளவு உயரம் வைக்கிறீர்கள்?’ என்று அதிகாரிகளிடம் கேட்டால் சாலையையும் உயர்த்த இருக்கிறோம் என்கிறார்கள். நல்ல நிலையில் இருக்கும் சாலையை ஏன் உயர்த்த வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அரசுப் பணத்தைத்தான் வீணடிக்கிறார்கள்'' என்றனர்.

194-வது வார்டு கவுன்சிலர் பாஸ்கரனிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில் மழை நீர் கால்வாய் கொண்டுவருவதற்காக மண்டலக் குழுக் கூட்டத்தில் போராடித்தான் அனுமதி வாங்கி, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு ஒரு நல்ல திட்டம். அவர்கள்தான் சரியாகப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்'' என்றார்.

பணிகள் குறித்து, உதவிப் பொறியாளர் கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''குமரன் குடில், செகரெட்ரியேட் காலனி, மவுன்ட்பேட்டன் ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மழை நீர் வடிகால், சாலை அமைத்தல், நடைபாதை அமைத்தல், மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆகியவை நடைபெறுகின்றன. இதற்காக, நவீனத் தொழில்நுட்பத்தில் சிமென்ட் தொட்டிகளை இறக்கிக் கட்டி வருகிறோம். சக்தி சீனிவாசன் சாலையில் சரியாகப் பள்ளம் தோண்டாததால், சிமென்ட் தொட்டிகள், ரோட்டை விட உயரமாக உள்ளன.  அதை சரிசெய்ய கான்ட்ராக்டரிடம் கூறி இருக்கிறோம். முதியவர்களும் நடக்கும் வகையில் சாலையில் இருந்து அரை அடி அளவுக்கே கால்வாய் உயரமாக இருக்கும். இந்தக் கால்வாய் மூடியின் மீது, டைல்ஸ் பதிக்கப்பட இருக்கிறது. இது நடைபாதையாகவும் இருக்கும். ஒரு பெரிய குழாய் இதன் அருகில் பதிக்கப்பட்டு அதன் வழியே மின்சாரம் மற்றும் தொலைபேசி கேபிள்களும் செலுத்தப்படும். இது, முன்மாதிரித் திட்டம். இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும்தான் இதன் தரம் மக்களுக்குத் தெரியும்'' என்றார்.

நடப்பது நல்லதாக இருந்தால் சரி!

- மு.செய்யது முகம்மது ஆசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு