Published:Updated:

சி.பி.ஐ-க்கு மாறுமா சமூக சேவகர் கொலை வழக்கு?

திருவண்ணாமலை திகுதிகு

பிரீமியம் ஸ்டோரி
##~##
சி.பி.ஐ-க்கு மாறுமா சமூக சேவகர் கொலை வழக்கு?

'சமூக சேவகர் கொலை வழக்கை உள்ளூர் போலீஸ் விசாரிக்கக் கூடாது, சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்ற குரல்தான் திருவண்ணாமலையில் திரும்பிய பக்கமெல்லாம் கேட்கிறது. 

  திருவண்ணமலை கிரிவலப் பாதையில் சமூக சேவகர் ராஜ்மோகன் சந்திரா, கடந்த ஜூலை 2-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தை, 'கவுன்சிலர் மட்டும் காரணமல்ல... சமூக சேவகர் கொலை... திருவண்ணாமலை திகில்!’ என்ற தலைப்பில் கடந்த 11.7.12 ஜூ.வி. இதழில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அந்தக் கொலை சம்பவத்தில் கவுன்சிலர் வெங்கடேசனைக் கைதுசெய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது போலீஸ்.

ஆனால், 'கவுன்சிலர் வெங்கடேசனைக் கைது செய்திருப்பது மட்டும் போதாது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகளும் வக்கீல்களும் இருக்கிறார்கள். அதனால், இந்த வழக்கை உள்ளூர் போலீஸ் விசாரிக்கக் கூடாது. அவர்கள் உண்மையான குற்றவாளியைத் தப்பிக்கவைத்து விடுவார்கள்’ என்று ராஜ்மோகன் சந்திரா குடும்பமும் மனித உரிமை இயக்கங்களும் குரல் கொடுக்கின்றன. இதற்கான கோரிக்கை போஸ்டர்களும் நோட்டீஸ் களும் ஊரெங்கும் பரபரக்கின்றன.

சி.பி.ஐ-க்கு மாறுமா சமூக சேவகர் கொலை வழக்கு?

கடந்த 20-ம் தேதி, திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் வழக்கறிஞரும் மனித உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளருமான வளன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றும் இந்தக் கோரிக்கைக்காகவே நடத்தப்பட்டது.  

கூட்டத்தில் பேசிய ஆம்பூர் சட்டமன்ற உறுப்பி னர் அஸ்லம் பாஷா, ''இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு உருப்படியாக இரண்டே காரியங்கள்தான் செய்யப்பட்டன. ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம். மற்றொன்று கட்டாயக் கல்விச் சட்டம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, அரசு அதிகாரிகள் தொடங்கி காவல்துறை உயர் அதிகாரிகள் வரை பலரும் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தினார் ராஜ்மோகன் சந்திரா. அவர்களைத் தட்டிக்கேட்ட காரணத்தால்தான் அவர் கொலை செய்யப்பட்டார். சொத்து தக ராறுக்காக கொல்லப்படவில்லை. மக்கள் நலனுக்காக, நாட்டின் நலனுக்காகப் போராடியவரைத்தான் சமூக விரோதிகள் கொலை செய்திருக்கிறார்கள். சமூக விரோதிகள் ஒரு ராஜ்மோகன் சந்திராவைக் கொலை செய்திருக்கிறார்கள். இனி, ஆயிரம் ஆயிரம் ராஜ்மோகன் சந்திராக்கள் உருவாவார்கள். அத்தனை பேரையும் அழிக்க முடி யுமா?  மனித உரிமைப் போராளிகளை யாராலும் அடக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. மனித உரிமைப் போராளிகளைக் கொலை செய்தவர்களைத் தண்டிக்கக் கடுமையான ஒரு சட்டம் இயற்றினால்தான், இந்தத் தேசம் உருப்படும்'' என்று ஆவேசப்பட்டார்.

சி.பி.ஐ-க்கு மாறுமா சமூக சேவகர் கொலை வழக்கு?

அடுத்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ''இந்தக் கூட்டத் தின்

சி.பி.ஐ-க்கு மாறுமா சமூக சேவகர் கொலை வழக்கு?

கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். உள்ளூர்க் காவல்துறையின் கையில் இருக்கும் இந்தக் கொலை வழக்கை மத்திய அரசின் சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்பதுதான். இந்தக் கொலை வழக்கில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருக்கிறது என் பதை, உண்மை அறியும் குழுவினர், கள ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆகவே, காவல் துறையினர் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்கை, அவர்களே விசாரித்து எப்படி உண்மையான குற்ற வாளியைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருவார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான் தமிழக அரசின் தலையீடு இல்லாத, உள்ளூர்க் காவல் துறையின் தலையீடு இல்லாத சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ராஜ்மோகன் சந்திரா ஒற்றை மனிதர் என்று நினைத்து, கொலை யாளி தவறு செய்து விட்டான். இப்படி எதிர்விளைவு வரும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.

இதேபோல், சென்னையில் வழக்கறிஞர் சங்கர சுப்புவின் மகனைக் கடத்திக் கொலை செய்து விட்டனர். அந்தக் கொலையிலும் காவல்துறையினர், ரவுடிகள், கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால்தான், சி.பி.ஐ. விசாரணை நடந்தது. அதேபோன்று இந்த வழக்கையும் உள்ளூர் போலீஸாரின் தலையீடு இல்லாமல் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவதற்கான அதிகாரம் முதல்வருக்கு இருக்கிறது. ஆனால், எந்த முதல்வரும் உடனே மாற்ற மாட்டார்கள். எங்கள் காவல் துறைக்கு ஆற்றல் இல்லையா என்று கேட்பார்கள். ஆனால், தொடர்ந்து போராடினால், நிச்சயம் சி.பி.ஐ. விசாரணை கிடைக்கும்'' என்றார்.

இதுகுறித்து, திருவண்ணாமலை எஸ்.பி. ரம்ய பாரதியிடம் பேசினோம். ''இந்தக் கொலை சம்பந்தமான அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து விட்டோம். அதில் முக்கியக் குற்றவாளியான வெங்கடேசன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதில், நாங்கள் எந்த பாரபட்சமும் யாருக்கும் காட்டவில்லை. வழக்கை சி.பி.ஐ. விசாரித்தாலும், இவர்களைத்தான் குற்றவாளிகள் என்று சொல்லப்போகிறார்கள்'' என்றார்.

காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பமும் மனித உரிமை அமைப்புகளும் உறுதிபடச் சொல்லும்போது, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினால்தான் என்ன?

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு