Published:Updated:

அன்சாரி அப்பாவியா?

புயல் கிளப்பும் அ.மார்க்ச்

பிரீமியம் ஸ்டோரி
##~##
அன்சாரி அப்பாவியா?

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த இருந்த தான குற்றச்சாட்டில், க்யூ பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரிக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் களம் இறங்கி உள்ளனர். பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான குழுவினர், 'உண்மை அறியும் குழு’ என்ற பெயரில் விசாரணை நடத்தித் தகவல்களைத் திரட்டி வருவதால், டென்ஷன் ஆகியுள்ளது க்யூ பிரிவு காவல் துறை.

 தமீம் அன்சாரியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீஸார், 22-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்குக் கொண்டுசென்றனர். சிறைக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய தமீம் அன்சாரி, 'தயவுசெய்து உண்மையை எழுதுங்கள். இலங்கையைச் சேர்ந்த ஹாஜி என்பவருடன் தொழில் ரீதியாக மட்டும்தான் எனக்குப் பழக்கம். வேறு எந்தத் தொடர்பும்

அன்சாரி அப்பாவியா?

அவருடன் இல்லை. பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது’ என்று கூறினார். அவரை மேற்கொண்டு பேசவிடாமல் இழுத்துச் சென்றனர் போலீஸார்.

உண்மை அறியும் குழுவின் தலைவரான பேராசிரியர் அ.மார்க்ஸிடம் பேசினோம். ''தமீம் அன்சாரி சமூகப் பொறுப்பு உணர்வுடன் பல்வேறு அமைப்புகளில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர் என்று கேள்விப்பட்டோம். போலீஸ் சொன்ன தகவல்களைப் பார்க்கும்போது இது புனையப்பட்ட வழக்கு என்று தோன்றியதால், நாங்களாகவே முன்வந்து உண்மையை அறிந்து வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். என்னுடன் புதுச்சேரி சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி, எஸ்.வி.ராஜதுரை ஆகியோர் இணைந்து விசாரணை நடத்துகின்றனர்.

தமீம் அன்சாரியை செப்டம்பர் 16-ம் தேதி காலை 7.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தின் உள்ளே கைது செய்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அவரது விமான டிக்கெட்டில் விமான நிலைய போர்டிங் பாஸ் முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஆனால், அன்று இரவு 8 மணிக்கு டி.வி.எஸ் டோல்கேட் அருகே அவரைக் கைது செய்ததாக போலீஸார் கூறுவது ஏன்?

அன்சாரி அப்பாவியா?

க்யூ பிரிவு போலீஸ் விசாரணையில் அன்சாரி இருந்தபோது, அவரை என்கவுன்ட்டர் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். அவருடைய செல்போனில் இருந்தே, வீட்டுக்கு வரும் ரவி என்ற போலீஸ்காரரிடம் லேப்டாப்பைக் கொடுக்கும்படி பேசச் சொல்லி உள்ளனர். அப்படி ரவி என்பவர் வாங்கிச் சென்ற லேப்டாப்பை இதுவரை கோர்ட்டில் ஒப்படைக்கவில்லையே... அது ஏன்?

ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ அகாடமியையும், கூகுள் மேப்பில் இருந்து வேறு சில இடங்களையும் அன்சாரி தனது செல்போன் மூலம் படம் பிடித்து, அதை பாகிஸ்தான் உளவாளிக்குத் தர இருந்ததாகச் சொல்கின்றனர். கூகுள் மேப்பில் இருந்து பதிவிறக்கம் செய்த படங்களைக் காசு கொடுத்து வாங்குவதற்கு பாகிஸ்தான் உளவாளிகள் என்ன முட்டாள்களா? அதுபோக கூகுளில் கிடைக்கும் விஷயங்கள் ரகசியமும் அல்ல. பாகிஸ்தானுக்கு இலங்கை அரசுடன் நல்லுறவு உள்ளது. வெலிங்டனில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு நமது அரசே பயிற்சி அளித்து வருகிறது. அங்கே பயிற்சிக்கு வந்து செல்லும் இலங்கை வீரர்களை வைத்து வெலிங்டன் நிலையத்தின் உள் கட்டமைப்புகளையே படமெடுத்து பாகிஸ்தான் வாங்கிவிட முடியும். அப்படியிருக்க வெறும் வெளிப்புறத்தைப் படம் பிடிக்க உளவுப்பிரிவு ஆட்களை பாகிஸ்தான் நியமிக்கும் என்பது நம்பும்படியாக இல்லை.

வல்லத்தைச் சேர்ந்த ராதா என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, ராணுவ ரகசியங்களை அன்சாரிக்குக் கொடுத்ததாக போலீஸார் சொல்கின்றனர். அவரை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை? இலங்கையில் உள்ள ஒரு வங்கியில் அன்சாரிக்கு வங்கிக் கணக்கும் கிரெடிட் கார்டும் உள்ளது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றுமதி தொழில் செய்துவந்த அன்சாரி வரவு செலவு விவகாரங்களை விரைவாக மேற்கொள்வதற்காக அங்கே வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளார். இதற்கு, ஹாஜி என்பவர் உதவி செய்துள்ளார். எங்களுடைய விசாரணையில் தெரியவந்த உணமைகள் இவை'' என்றார்.

'க்யூ பிரிவு போலீஸ், தமீம் அன்சாரி மீது குறிவைத்து வழக்குப் பதிவுசெய்ய காரணம் என்ன?'' .

''தமிழகத்தில் கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தால் கடலோரப் பகுதி மக்களின் கொந்தளிப்பு அதிகமாகி உள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் காவலைப் பலப்படுத்தத் திட்டமிட்ட போலீஸ் அதற்குக் காரணம் காட்டுவதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கை வழியாக பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைக் கடத்துவதாகச் சொல்லி, இவரைக் கைது செய்துள்ளது. அன்சாரி வியாபார நிமித்தமாக அடிக்கடி இலங்கைக்குச் சென்றுவந்தது, போன் மூலம் பேசியது, அங்குள்ள ஒரு வங்கியில் கணக்குத் தொடங்கியது போன்றவை, அவரை போலீஸ் தேர்வு செய்யக் காரணமாக இருந்திருக்கலாம்'' என்றார்.

க்யூ பிரிவு போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய ஒரு அதிகாரி, ''அன்சாரியை ஒரு நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்கும்போது, வழக்கறிஞர்களின் குறுக்கீடு அதிகமாக இருந்ததால் அவரை சரிவர விசாரிக்க முடியவில்லை. அவரை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால் மறுபடியும் போலீஸ் விசாரணைக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அணுகுவோம். அவர் மீது நாங்கள் பதிந்திருக்கும் வழக்கு முழுக்க முழுக்க உண்மையானது என்பதை சட்டத்தின் முன் நிரூபிப்போம்'' என்றார் உறுதியாக.

பார்க்கலாம்.

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு