Published:Updated:

ஊர் முழுக்கக் குண்டர்கள்... கொலை மிரட்டல்!

கரூரில் நடக்கிறது கல் குவாரி ராஜ்ஜியம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஊர் முழுக்கக் குண்டர்கள்... கொலை மிரட்டல்!

'ஊர்ப்  பொதுக் கண்மாயை ஆக்கிரமித்து விட் டார்கள்.  ஊர் மக்களின் பொதுப் பாதைகளை அடைத்து விட்டார்கள். ஊரையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, நினைத்த இடத்தில் எல்லாம் கற்களை வெட்டி எடுக்கிறார்கள். இந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்டால், கொலை மிரட்டல் விடுகிறார்கள்’ என்று கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஆர்.டி. கல் குவாரி பற்றி ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) ஒரு புகார்க் குரல். 

குவாரி அமைந்திருக்கும் கடவூர் ஒன்றியம் மஞ்சநாயக்கம்பட்டிக்குச் சென்றோம். கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தேக்கமலை, ''எங்க ஊர்ல ராஜா சிதம்பரம் என்பவர் பரம்பரை நாட்டாமைனு சொல்லிட்டு, தனி அரசாங்கமே நடத்துறார். பல காலமாக அரசு அனுமதி இல்லாமலேயே கல் குவாரி நடத்திட்டு வந்தார். 2006-ல் ராஜேந்திரன் என்பவர் கல் குவாரியை நடத்த லைசென்ஸ் வாங்கினார். ராஜேந்திரன் குவாரியை நடத்த ஆரம்பிச்ச ஒரு வருஷத்திலேயே, அவரிடம் இருந்து ராஜா சிதம்பரம் குவாரியை வாங்கிட்டார். அரசு அனுமதி கொடுத்திருக்கும் இடத்தைத் தாண்டி, சுற்றியுள்ள இடங்களையும் ஆக்கிரமித்துக் கற்களை வெட்டி எடுத்தார்.

ஊர் முழுக்கக் குண்டர்கள்... கொலை மிரட்டல்!

இப்போ ராஜா சிதம்பரத்தின் பையன் மணிகண்டன்தான் குவாரியைக் கவனிக்கிறார். அவர் எங்க ஊர்ப் பாசனத்துக்குப் பயன்படும் கருரெட்டி குளத்துத் தண்ணீரை எல்லாம் மோட்டார் வைச்சு உறிஞ்சி எடுத்துட்டு, அங்கே இருக்கும் கற்களையும் வெட்டி எடுத்துட்டார். இதை தட்டிக்கேட்ட ஊர் மக்களை குண்டர்களை வைத்து அடிக்கிறார்.

கல் குவாரிக்கு அருகில் 25 அடி அகலம்கொண்ட பொதுப் பாதை இருக்குது. அதையும் இவங்க ஆக்கிரமிப்பு செஞ்சு, கல்லைத் தோண்டி எடுத்து இருக்காங்க. இதை யாராவது தட்டிக்கேட்டா... காவு வாங்கிடுவேன்னு சொல்லி மிரட்டுறார்.

ஊர் முழுக்கக் குண்டர்கள்... கொலை மிரட்டல்!

இதை மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் நம்பெருமாளிடம் முறையிட்டோம். கண்மாய் மற்றும்

ஊர் முழுக்கக் குண்டர்கள்... கொலை மிரட்டல்!

பாதை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செஞ்சு, அதைத் திரும்ப சரிசெய்ய 50 லட்ச ரூபாய் செலவாகும்னு குவாரிக்கு அபராதம் விதிச் சாங்க. ஆனா மணிகண்டனோ, 'நாங்கதான் இங்க அரசாங்கம். எங்களுக்கு அபராதம் போட நீ யார்?’னு சொல்லிட்டார். இங்கே நடக்கும் அநியாயத்தைப் பத்தி பல அதிகாரிகளுக்கும் மனுவா கொடுத்தாச்சு. யாரும் கண்டுக்கவே இல்லை. கல் குவாரி விஷயம்னாலே எங்களைப் பார்க்க முடியாதுன்னு கலெக்டர் ஷோபனாவும் விரட்டுறாங்க.

குவாரி முறைகேடுகளுக்கு எதிரா நான் போராடு றதால, ஒரு நாள் ராத்திரி மணிகண்டன் என்னை லாரி ஏத்திக் கொலை செய்யப்பார்த்தார். அதுல இருந்து தப்பிச்சு மாயனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அங்கே சப்-இன்ஸ்பெக்டரா இருக்கும் பரமசிவன், அந்தப் புகாரை எடுத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டார். அதோட, 'குவாரி பிரச்னையைக் கண்டுக்காத... இல்லைனா, பொய்க் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்’னு மிரட்டினார். அரசுதான் தலையிட்டு எங்களை இந்தக் கும்பல் பிடியில் இருந்து காப்பாத்தணும்'' என்றார்.

மஞ்சநாயக்கம்பட்டி ஊராட்சித் தலைவர் நம்பெருமாள், ''இந்த கே.ஆர்.டி. குவாரிக்காரங்க அட்டகாசம் தாங்க முடியலைங்க. ஊராட்சித் தலைவரான என்னையே மிரட்டுறாங்க. ஊரைச் சுற்றியுள்ள புறம்போக்கு இடத்தை எல்லாம் வளைச்சுப் போட்டுட்டாங்க. இவங்க கல் குவாரி மூலம் கற்களை கடத்துறதைத் தடுத்து நிறுத்த ஊருக்குள் செக்போஸ்ட் போடச் சொல்லி முன்னாள் கலெக்டர் உமா

ஊர் முழுக்கக் குண்டர்கள்... கொலை மிரட்டல்!

மகேஸ்வரி முதல் இப்போதைய கலெக்டர் ஷோபனா வரைக்கும் பலரிடமும் மனு கொடுத்துப் பாத்துட்டேன். யாரும் நடவடிக்கை எடுக்கலை. குவாரிக்காரங்க ஊர் முழுக்கக் குண்டர்களை வெச்சிக்கிட்டு தனி அரசாங்கமே நடத்துறாங்க. அபராதம் விதிச்சா அதைக் கட்ட முடியாதுங்கிறாங்க. இதை கலெக்டர் ஷோபனாவிடம் சொன்னா, 'நீங்க இதே மாதிரி எல்லா விஷயத்துலயும் நேர்மையா இருக்கீங்களா..? வேற வேலை இருந்தா பாருங்க’னு சொல்றாங்க. இவங்க அட்டூழியத்தை நீங்கதான் வெளிச்சம் போட்டுக் காட்டணும்'' என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க ராஜா சிதம்பரத் துக்குப் போன் செய்தோம். அவருடைய மகன் மணிகண்டன் பேசினார். ''கல் குவாரி ராஜேந் திரனுக்குச் சொந்தமானது. அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்க கண்மாயையும், மக்கள் பாதையையும் ஆக்கிரமிக்கவே இல்லை. தேக்கமலையை நாங்க ஒண்ணும் செய்யலை. வேணும்னா, போலீஸைக் கேட்டுக்கோங்க'' என்றார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்திடம் பேசினோம். ''தேக்கமலை யார் மீது புகார் கொடுத் தாரோ... அவர் மீது கேஸ் போட்டோம். அவர் யார்னு தேக்கமலையிடம் கேளுங்க. என்கிட்ட கேட்காதீங்க'' என்றார் தெனாவெட்டாக.

கலெக்டர் ஷோபனாவைத் தொடர்பு கொண்டோம். போனை எடுத்த அவருடைய உதவியாளர், ''என்ன விஷயமா மேடம்கிட்ட நீங்க பேசணும்'' என்று கேட்டார். அனைத்து விவரங் களையும் சொன்னோம். ''நான் மேடத்திடம் சொல்றேன். அவங்களே லைன்ல வருவாங்க...’ என்றார். ஆனால், மீண்டும் மீண்டும் நாம் தொடர்புகொண்ட பிறகும், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

மதுரையில் அசுர பாய்ச்சல் காட்டியதைப் போல், கரூரிலும் காட்டுமா அரசு?

- ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு