Published:Updated:

சிவகாசியில் சின்ன ஆலைகளுக்கு வேட்டு?

ஆய்வுக் குழு மீது அதிரடிப் புகார்

பிரீமியம் ஸ்டோரி
##~##
சிவகாசியில் சின்ன ஆலைகளுக்கு வேட்டு?

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 39 பேர் பலியான விவகாரத்தின் சூடு இன்னமும் தணியவில்லை. வருவாய்த் துறை மற்றும் வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் கொண்ட 11 பேர் குழு, சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அதிரடியாக ஆய்வு செய்து வருகிறது. இதுவரை 28 பட்டாசு ஆலைகளின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 190 பட்டாசு ஆலைகளுக்கு உங்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு பெரிய நிறுவனமும் சிக்கவில்லை என்பதுதான் விவ காரமாக வெடித்துள்ளது. 

கடந்த 21-ம் தேதி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன், பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'பெரிய பட்டாசு ஆலைகளுக்கு ஆதரவாகவே அதிகாரிகள் ரெய்டு நடத்துகிறார்கள். சிறிய மற்றும் நடுத்தர ஆலைகளை ஒட்டுமொத்தமாக மூடப் பார்க்கிறார்கள்’ என்று குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக, சி.ஐ.டி.யு. பட்டாசுத் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகாலட்சுமியிடம் பேசினோம்.

சிவகாசியில் சின்ன ஆலைகளுக்கு வேட்டு?

''சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டாசுத் தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், அட்டைப்பெட்டி, திரி தயாரிப்பது போன்ற பட்டாசு சார்ந்த தொழிலில் இரண்டு லட்சம் தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள். வேறு எந்தத் தொழிலும் இந்தப் பகுதியில் இல்லாத காரணத்தால்தான், உயிரைப் பணயம் வைத்து இந்த வேலையைச் செய்கின்றனர். முதலிபட்டி பட்டாசு ஆலையில் நடந்த விபத்துக்குப் பிறகு ரெய்டு என்ற பெயரில் அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக, அப்பாவித் தொழிலாளர்கள்தான் பெரு மளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிவகாசியில் சின்ன ஆலைகளுக்கு வேட்டு?

வருவாய்த்துறை மற்றும் வெடிப்பொருள் கட்டுப் பாட்டுத் துறை அதிகாரிகள் சின்ன மற்றும் நடுத்தரப்

சிவகாசியில் சின்ன ஆலைகளுக்கு வேட்டு?

பட்டாசு ஆலைகளை மட்டுமே குறிவைத்து ரெய்டு நடத்துகின்றனர். சின்ன ஆலைகளில் பாத்ரூம் சரியில்லை, தொழிலாளர்கள் வருகைப் பதிவேடு இல்லை என்று ஆகாதபோகாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி, ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்கின்றனர். அதனால், ஏராளமானோர் வேலையை இழந்து ரோட்டுக்கு வந்து விட்டனர். பல ஆலைகள் ரெய்டுக்குப் பயந்து மூடப்பட்டு விட் டன. சின்ன பட்டாசு ஆலைகளில் 500 கிலோ வெடிகள் வைத்திருந்தால், 'அளவுக்கு அதிகமாக ஸ்டாக் இருக்கிறது’ என்று நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், பெரிய பட்டாசு ஆலைகளில் 5,000 கிலோவுக்கும் அதிகமாக வெடிகளை ஸ்டாக் வைத்திருக்கின்றனர். அதை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை.

சின்ன பட்டாசு ஆலைகளில் கடந்த 20 ஆண்டுகளாக விபத்து எதுவுமே நடக்கவில்லை. நடந்த விபத்துகள் எல்லாமே பெரிய ஆலைகளில் தான் நடந்துள்ளன. ஆனால், இதைக் கவனத்தில்கொள்ளாமல் சிறிய ஆலைகள் மீது மட்டுமே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். பெரிய ஆலைகளை விட, வெடிப்பொருட்களை குறைந்த விலைக்கு சின்ன பட்டாசு ஆலைகள் விற்பனை செய்கின்றன. இந்தத் தொழில் போட்டி காரணமாக... சின்ன ஆலைகளை ஒழிக்க நினைக் கிறார்கள் பெரும்முதலைகள். அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு சின்னப் பட்டாசு ஆலைகளை இயங்க விடாமல் தடுக்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆர்டர் வந்திருக்கிறது. ஆனால், பட்டாசுகளைத் தயாரிக்கவும் முடியாமல், அனுப்பவும் முடியாமல் தவிக்கிறார்கள். இந்த சமயத்தில் ஆலைகள் மூடப்பட்டால், இவர்களால் எந்தக் காலத்திலும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது. உயிர்ப் பாதுகாப்பு முக்கியம் என்பதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அது தொழிலையே நசுக்கிவிடக் கூடாது. அதிகாரிகள் தொடர்ந்து இதேபோன்று செயல்பட்டால், தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வெகுண்டு எழுந்து போராடும் நிலை வந்துவிடும்'' என்றார் கொதிப்புடன்.

இந்த விவகாரம் குறித்து விருதுநகர் கலெக்டர் ஹரிகரனிடம் பேசினோம். ''சிவகாசியைச் சுற்றியுள்ள பெரிய மற்றும் சின்னப் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது. பெரிய பட்டாசு ஆலைகளில் சிறு விதிமுறை மீறல்கள்தான் இருக்கின்றன. ஆனால், சின்ன மற்றும் நடுத்தரப் பட்டாசு ஆலைகளில் பெரிய விதிமுறை மீறல்கள் நடக்கின்றன. சங்கு சக்கரம் தயாரிக்க அனுமதி வாங்கிக்கொண்டு, அந்த அறையில் அணுகுண்டு தயாரிக்கிறார்கள். நான்கு பேர் வேலை செய்ய வேண்டிய அறையில் 10 பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்குழு எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை. அனைத்து பெரிய ஆலைகளிலும் நிச்சயம் ஆய்வு செய்யப்படும். விதிமுறை மீறல்கள் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு