Published:Updated:

முற்றுகையில் சிக்கிய தூத்துக்குடி துறைமுகம்!

அணு உலை கிளர்ச்சி

பிரீமியம் ஸ்டோரி
##~##
முற்றுகையில் சிக்கிய தூத்துக்குடி துறைமுகம்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், கடலோரக் கிராமங்களில் இன்னமும் தீவிரமாகவே இருக்கிறது. 

எரிபொருள் நிரப்பக்கூடாது என்பதை வலி யுறுத்தி அணுஉலை முற்றுகைப் போராட்டம் நடத் தியதில், வன்முறை வெடித்து போலீஸார் தடியடி நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, நடந்த மோத லில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணப்பாடு மீனவர் அந்தோணி ஜான் என்பவர் இறந்தார். அதைத்தொடர்ந்து தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம், கடலுக்குள் நின்று போராடுவது, கடற்கரை மணலில் கழுத்து வரை புதைந்து போராடுவது என்று பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் 22-ம் தேதி படகுகள், கட்டுமரங்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடப் போவதாக மீனவ அமைப்புகள் அறிவிக்க... மத்திய, மாநில அரசுகள் இதை முறியடிக்கத் தீவிரம் காட்டின. அதிகாரிகள் பலகட்ட சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், போராட்டக் குழு வினர் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.

முற்றுகையில் சிக்கிய தூத்துக்குடி துறைமுகம்!

இந்தப் போராட்டத்தின்போது, காவல்துறை, கட லோரக் காவல் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை என்று, திரும்பிய பக்கம் எல்லாம் காக்கிகளே கண்ணில் பட்டனர். 700-க்கும் அதிகமான விசைப் படகுகளும் நாட்டுப் படகுகளும் துறைமுகம் நோக்கி அணிவகுத்தன. பெரியதாழை, அமலிநகர், தூத்துக்குடி, மணப்பாடு, வீரபாண்டியன்பட்டினம் என சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர்.

ஒவ்வொரு படகின் முன்பகுதியிலும் தேசியக் கொடியும் பின்பக்கத்தில் கறுப்புக் கொடியும் ஏற்றப்பட்டு இருந்தன. போராட்டக்காரர்கள் துறை முகத்துக்குள் நுழைந்துவிடக்கூடும் என உளவுத் துறை எச்சரித்து இருந்ததால், கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகுகள் உஷார் நிலை யில் இருந்தன. ஹெலிகாப்டர்களும் தாழ்வாகப் பறந்து கண்காணித்தன.

முற்றுகையில் சிக்கிய தூத்துக்குடி துறைமுகம்!

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகத்துக்கு வெகுஅருகில் நின்று கோஷங்களை எழுப்பினார்களே தவிர, உள்ளே நுழைய முயற்சி செய்யவில்லை. அதேபோல, பாதுகாப்புப் படையினரும் இவர்களை விரட்ட முயற்சிக்கவில்லை. காலை 9 மணிக்குத் தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணிக்கு முடிந்தது. போராட்டத்தின்போது பெண் களும் குழந்தைகளும் கடலுக்குள் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால்... அவர்கள் வந்தால் கைது செய்ய போலீஸ் திட்டம் போட்டிருந்தது.

இதைப் புரிந்துகொண்டதால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதற்குப்பதில், சொந்த ஊரிலேயே கடலுக் குள் மனிதச்சங்கிலி போராட்டம்  நடத்தினர். போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன், மைபா.யேசுராஜ் உள்ளிட்டோர் கூத்தங்குழி கிராமத்தில் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்றனர். மீனவ மக்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் போராட்டக் குழுவினர், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களாம்.

கடல் முற்றுகைப் போராட்டம் நடத்துவதால், மத்திய, மாநில அரசுகள் தங் களுக்குச் சாதகமான அறிவிப்புகள் எதையாவது வெளியிடக்கூடும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருக்கும் மீனவ மக்கள், 'அடுத்ததாக சென்னை ஜார்ஜ் கோட்டையை முற்றுகை இடுவோம். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்’ என்று ஆவேசப்பட்டனர். இதற்கிடையே, அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்பும் பணிகள் வேகம் பிடித்து இருக்கிறது. இது பற்றி சுப.உதயகுமாரனிடம் கேட்டதற்கு, ''கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதன் இறுதித்தீர்ப்பு சீக்கிரமே வர இருக்கிறது. மக்கள் போராட்டமும் தீவிரமாக இருக்கிறது. ஆனால், இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், இந்திய அணுசக்தித் துறை எதேச்சதிகாரப் போக்கில் செயல்படுகிறது. இப்போது அவசரமாக அணுஉலையில் எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியம் என்ன? இது, ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு ஒப்பானது. அணு உலையில் யுரேனியம் நிரப்பப்படுகிறது என்பதற்காக, நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். உலகில் பல நாடுகளில் எரிபொருள் நிரப்பப்பட்ட பிறகும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அணு உலை செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. சில நாடுகளில் மின்உற்பத்தி தொடங்கிய பின்னரும் மக்கள் போராட்டத்தால் அணு உலையை மூடி இருக்கிறார்கள். அதனால், நாங்கள் நம்பிக்கை இழக்க மாட்டோம்'' என்றார் ஆவேசமாக.

- ஆண்டனிராஜ், எஸ்.சரவணபெருமாள்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு