ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

திகில் கிளப்பும் ரத்தம்!

கீழ்ப்பாக்கம் அலட்சிய மருத்துவமனை!

##~##
திகில் கிளப்பும் ரத்தம்!

'கீழ்ப்பாக்கத்தில் இருந்து பேசுறேங்க. எங்க சொந்தக் காரர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தாங்கன்னு பார்க்கப் போயிருந்தேன். ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை அறையில் இருந்து ரத்தம் வெளியே வந்து, அந்த ஏரியாவே நாறிக்கிடக்குது. பார்க்கவே பகீர்ன்னு இருக்குது. நேரே வந்து பாருங்களேன்...’ என்று நமது வாசகர் ஒருவர் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் சொல்லி இருந்தார். 

உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று பிரேத பரிசோதனை அறையைப் பார்வை யிட்டோம். அந்த அறையில் இருந்து ரத்தம் வெளியேறி தேங்கிக் கிடந்தது. அதில் தண்ணீரும் கலந்துவிட்டதால், ரத்தம் உறையாமல் சிவப்பு நிறத்தில் திகில் கிளப்புவதாக இருந்தது. ஈக்களும், கொசுக்களும் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கிடக்க காக்கைக் கூட்டமும், நாய்களும் அந்த இடத்தையே வட்டமடித்து வந்தன.

பிரேதப் பரிசோதனைக் கூடத் தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ''பொணத்தை அறுக்கும்போது ரத்தம் வருங்க. அது வெளியே சாக்கடையில் கலக்குறதுக்கு ஒரு குழாய் இருக்குது. அந்தக் குழாய் லீக் ஆகி இருக்குது. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இங்கே ஒரு புல்டோசரைக் கொண்டுவந்து மண் அள்ளினாங்க. அப்போதான் குழாய் உடைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். எங்களுக்கு இந்த நாத்தத்துலயே இருந்து பழகிப்போச்சு. அதனால எதுவும் தெரியலை. நீங்க புதுசா வர்றீங்க... அதான் கேள்வி கேட்குறீங்க'' என்றார் சாதாரணமாக.

திகில் கிளப்பும் ரத்தம்!
திகில் கிளப்பும் ரத்தம்!

இறந்து போன ஒருவரின் உடலை வாங்குவதற் காகப் பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே காத்துக் கொண்டிருந்த உறவுக் கூட்டத்தினர் வேறு வழியில்லாமல் அந்த ரத்தத்தைக் காலில் மிதித்தபடிதான் நின்று கொண்டு இருந்தார்கள்.

''என்ன கொடுமைன்னு பாருங்க. இதை எல்லாம் கேட்க யாருக்கும் நாதி இல்ல. நாங்க கேள்வி கேட்டா பாடியைக் கொடுக்க மாட்டேன்னு இழுத்தடிப்பாங்க. செத்துப் போனவங்க மேல இவ்வளவு அலட்சியம் காட்டுறதைப் பார்க்கவே வேதனையா இருக்கு'' என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் ராமகிருஷ்ணனை சந்தித்தோம். ''நீங்க சொல்ற விஷயம் என்னோட கவனத்துக்கு வந்தது. அதை உடனே சரி செய்யச் சொல்லிடேனே. இப்போ அப்படி எதுவும் இல்லையே!'' என்ற வரிடம், நாம் எடுத்திருந்த படங்களைக் காட்டினோம். ''இந்தப் படம் இப்போ எடுத்த மாதிரி தெரியலையே'' என்றவர்...  சுதாரித்துக்கொண்டு, ''எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதுக்குப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தான் பொறுப்பு. அவர்களிடம் கேட்டுக்கோங்க'' என்று நழுவினார்.

பொதுப்பணித் துறை அதிகாரி களிடம் விசாரித்தோம். ''பிரேத பரிசோதனை அறையில் ஏற்படும் கசிவுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கூடிய சீக்கிரமே சரி செய்து விடுவோம்'' என்று சொன்னார்கள்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய்யிடம் ஒட்டு மொத்தத் தகவலையும் கொட்டினோம்.

''அப்படியா? நீங்க சொல்ற விஷயம் இதுவரைக்கும் என்னோட கவனத்துக்கு வரவில்லை. நான் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரிக்கச் சொல்றேன். மருத்துவமனையில் ஏற்பட்டு இருக்கும் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கிறேன். அரசு மருத்துவமனையில் மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கத்தான் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பிரச்னைக்கு யார் காரணம் என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.

சாதாரண விஷயத்தைத் தீர்ப்பதற்குக் கூட அமைச்சர்தான் வரவேண்டும் என்றால், அரசு மருத்துவமனைகளில் பொறுப்பில் இருப்பவர்கள் என்னதான் செய்கிறார்கள்? இது போன்ற இடங் களுக்கு வரும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சுற்றுப் புறம் சுத்தமாக இருக்கட்டும்!

- அ.ஸ்ரீவித்யா

படங்கள்:   செ.நாகராஜன்