ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஆறடி நிலத்துக்கும் ஆபத்தா?

பதறும் சென்னை

##~##
ஆறடி நிலத்துக்கும் ஆபத்தா?

'கோடிக்கணக்கில் சொத்து சேர்த் தாலும், ஆறடி நிலம்தான் சொந்தம் என்பார்கள். பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சூளை மாநகரில், இடுகாட்டை ஆக்கிரமித்து அந்த ஆறடி நிலத்துக்கும் ஆப்பு வைக்கிறார்கள்’ என்று, ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) கொதித்திருந்தார் நம் வாசகர். 

விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சி யின் 194-வது வட்டத்துக்குள் அமைந்துள்ள சூளை மாநகர் பகுதிக்குச் சென்றோம்.

திறந்தவெளியில் இரண்டு கிரவுண்ட் அளவில் ஒரு சில கல்லறைகளுடன் காட்சி அளித்தது அந்த இடுகாடு. இடுகாட்டைச் சுற்றி வீடுகள், கோயில் போன்றவை இருக்கின்றன. இந்த இடுகாட்டுக்கான இடம்தான் ஆக்கிரமிக்கப் பட்டு இருப்பதாகப் புகார்.  

ஆறடி நிலத்துக்கும் ஆபத்தா?
ஆறடி நிலத்துக்கும் ஆபத்தா?

பி.கே. குடியிருப்போர் நலச்சங்கத் தலைவரும் அ.தி.மு.க. பிரமுகருமான எல்.பாலசுப்ரமணிய ராஜா, ''மேட்டுக்குப்பம், வி.பி.ஜி.அவென்யூ, செக ரேட்டரியேட் காலனி, சந்திர சேகரன் தெரு, திரு.வி.க. நகர், முட்டைக்காரன் சாவடி, வ.உ.சி. தெரு, பி.டி.சி. குவார்ட்டர்ஸ், ஆலிகண்டேஸ்வரர் நகர்னு பல்வேறு இடங்களில் இருந்து வரும் சடலங் களை இந்த இடுகாட்டில்தான் புதைத்து வருகிறார்கள். இப்போது இடுகாட்டின் நிலம் சுருங்கிப்போகும் அளவுக்கு ஆக்கிரமிப்பு நடந்து உள்ளது.

தவிர, திறந்தவெளியில் பலர் சீட்டு விளையாடுவதும், மது அருந்திவிட்டுக் கலாட்டா செய்வதுமாக இருக்கிறார்கள். அதனால், இந்தப் பகுதியைக் கடக்கும்

ஆறடி நிலத்துக்கும் ஆபத்தா?

பெண்கள் பயத்துடனேயே செல்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், சமூகக்கேடுகள் நடக்காமலும் தடுக்கவும் இடுகாட்டைச் சுற்றி மதில் சுவர் எழுப்பி, கேட் போடணும். இதுகுறித்து எங்கள் அசோஸியேஷன் சார்பாக முதலமைச்சர், கலெக்டர், மேயர், வார்டு கவுன்சிலர் என்று பலருக்கும் மனு கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

பாலாஜி நகர், பாரதியார் நகர், கிருஷ்ணா நகர் உள்ளடங்கிய கிழக்கு மேட்டுக்குப்பம் குடியிருப்போர் நலச்சங்கச் செயலாளரும் தே.மு. தி.க. பிரமுகருமான ஏ.டி.டிக்காராம், ''நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்தப் பகுதியில்தான் வசிக்கிறோம். இடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் இல்லாததால் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடக்கிறது. இந்த ஏரியாவில் இலவச மனைப் பட்டா கொடுக்கப்படுகிறது. அதனால், இடுகாட்டு இடத் துக்கும் சேர்த்து பட்டா வாங்க சிலர் முயற்சிக்கி றார்கள். இடுகாட்டு நிலத்தை முழுவதும் பட்டா போட்டு வாங்கி விட்டார்கள் என்றால், அதன்பிறகு பிணங்களைப் புதைக்கவே இடம் இருக்காது. உடனே, இங்கு மதில் சுவர் எழுப்பி கேட் போடவில்லை என்றால், எங்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம்'' என்றார் ஆவேசத்துடன்.

194-வது வார்டு உறுப்பினர் பாஸ்கரன், ''இந்த இடுகாடு மேய்க்கால் புறம்போக்கில்தான் வருகிறது.

ஆறடி நிலத்துக்கும் ஆபத்தா?

இப்போது சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். நான் கவுன்சிலராக வந்ததும் புதர் மண்டிக்கிடந்த இடுகாட்டு இடத்தைச் சுத்தப்படுத்திக் கொடுத்தேன். மதில் சுவர் எழுப்பித் தரவும் தயாராக இருக்கிறேன். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது வருவாய்த் துறையினரின் பணி. இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த மனுநீதி நாளில் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டவர்களுக்கு மனு கொடுத்திருக்கிறேன். அவர்கள் இடுகாட்டை அளந்து கொடுத்து விட்டால், மதில் சுவர் கட்டித்தருவேன்'' என்றார்.

தாசில்தார் கோவிந்த ராஜிடம் பேசினோம். ''நான் அந்த இடத்தைப் பார்வையிட்டேன். அந்த இடம் மேய்க்கால் புறம்போக்கு என்று ஆவணங்களில் பதிவாகி உள்ளது. இடுகாடு என்று குறிப்பிடவில்லை. ஐந்து வருடங்கள் ஒரே இடத்தில் குடியிருந்தால் பட்டா வழங்கலாம் என்று, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டதின் பேரில், அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குப் பட்டா கொடுத்திருக்கிறோம். அந்த இடம் இடுகாடு என்று எதிர்ப்பு கிளம்பியதால், பட்டா கொடுப்பதை நிறுத்தி இருக்கிறோம். மாநகராட்சி சார்பில், அந்த இடத்தை இடுகாடாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டால், முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வான கே.பி.கந்தன், ''மக்களுக்கு இடுகாடு தேவை என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

இடுகாடு காணாமல் போவதற்குள், காப் பாற்றுங்கள்!

- மு.செய்யது முகம்மது ஆசாத்