ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''எங்க குழந்தையை அநியாயமாக் கொன்னுட்டாங்களே..''

திருவண்ணாமலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

##~##

ள்ளிக் குழந்தைகளுக்கு இது போதாத காலம். 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரைச் சேர்ந்த விவசாயி கங்காதரன்- ஜெயப்ரதா தம்பதியின் மூன்று வயது மகள் மோனிஷா. பெரணமல்லூரில் உள்ள சித்தார்த்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்தாள். கடந்த 10-ம் தேதி மாலை பள்ளி வேனில் வீட்டுக்குத் திரும்பிய போது, வீட்டுக்கு எதிரே வேனை நிறுத்தி மோனிஷாவையும் இன்னும் சில குழந்தைகளையும் இறக்கி விட்டனர். வீடு எதிர்ப்புறத்தில் இருப்பதால், சிறுமி மோனிஷா சாலையைக் கடக்க முயற்சித்து இருக்கிறாள். மோனிஷாவின் பாட்டி, 'வராதே... நான் வருகிறேன்’ என்று கத்தியபடி எதிரே வர, இதைக் கவனிக்காத டிரைவர் வேனை அவசரமாகக் கிளப்பியதும், அந்தக் கோரச்சம்பவம் நடந்தே விட்டது.

மோனிஷாவின் தலை மீது வேன் ஏறிஇறங்க, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிர் பிரிந்துபோனது. பயந்துபோன டிரைவர் உடனே வேனைவிட்டு இறங்கித் தப்பி ஓடிவிட்டார். ஆவேசம் அடைந்த மக்கள், வேன் கண்ணாடியை உடைத்தனர். சாலையில் மோனிஷாவின் சடலத்துடன்  மறியல் நடத்தி. 'விபத்துக்குக் காரணமான வேன் டிரைவரைக் கைது செய்ய வேண்டும்’ என்று கோஷமிட்டனர்.

''எங்க குழந்தையை அநியாயமாக் கொன்னுட்டாங்களே..''

காவல் துறையினர் வந்து, 'தவறுக்குக் காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்து, குழந்தையின் சடலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய ஏற்பாடு செய்தனர். அந்த நேரத்தில், ஆவேசம் கலையாத மக்கள் ஒன்று திரண்டு அந்த வேனை எரிக்க முயற்சி செய்தனர். சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸ்காரர்களும் அதிரடிப் படையினரும் வந்து சேர்ந்த பிறகுதான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

சோகத்தில் இருந்த மோனிஷாவின் தந்தை கங்காதரனிடம் பேசினோம். ''எங்களுக்கு அவதான் மொத புள்ளைங்க.  எல்லார்கிட்டேயும் சந்தோஷமா விளையாடுவா. படுபாவிங்க எங்க குழந்தையை அநியாயமாக் கொன்னுட்டாங்களே. பொறுப்பா ஒருத்தர் எங்க குழந் தையைக் கவனிச்சு கிராஸ் பண்ணி விட்டிருந்தா, உயிரோடு இருந் திருப்பா...'' என்றார்.

''எங்க குழந்தையை அநியாயமாக் கொன்னுட்டாங்களே..''

கண்ணீருடன் இருந்த தாய் ஜெயப்ரதா, ''காலையில் இந்தக் கையால தலைவாரிப் பூ வெச்சு அனுப்பின குழந்தையை, சாயந் திரம் பொணமாக்கிட்டாங்களே படுபாவிங்க... அன்னிக்கு அவ ஸ்கூல்ல மீட்டிங். அங்கே போய் என் பொண்ணோட மார்க்கைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். அப்போ அவ என்னோட வர்றேன்னு சொன்னா. நான்தான் தூக்கிட்டுப் போக முடியாதும்மா... நீ வேனில் வான்னு சொல்லிட்டு வந்தேன். நானே கூட் டிட்டு வந்திருந்தா, இப்போ என் குழந்தை உயிரோட இருந்திருக்குமே...'' என்றவரால் மேற்கொண்டு பேச முடிய வில்லை.

''எங்க குழந்தையை அநியாயமாக் கொன்னுட்டாங்களே..''

சம்பவ இடத்தில் இருந்த பாட்டி வைதேகி, ''நான்தாங்க எப்பவுமே கூட்டிட்டு வருவேன். வேனை வாராவதிக்கிட்டதான் எப்பவுமே நிறுத்துவாங்க. அன்னிக்கு தள்ளி நிறுத்திட்டு அவசர அவசரமா வேனை எடுத்து என் பேத்தியைக் கொன்னுட்டாங்க. இதுவரை ஸ்கூல் சார்பா ஒருத்தர்கூட வந்து பார்க்கலீங்க. அவ்வளவு கல் நெஞ்சுக்காரங்களா இருக்காங்களே...'' என்று கதறினார்.

சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் அண்ணாதுரையிடம் தகவல் கேட்டோம். ''அந்த டிரைவர் எங்ககிட்ட மூணு வருஷமா இருக்கார். அவரிடம் எல்லாத் தகுதியும் இருக்கு. எப்பவுமே குழந்தையின் பாட்டி அருகில் இருந்து கூட்டிட்டுப் போவாங்களாம். பாட்டி வருவதற்குள் குழந்தை அவசரப்பட்டு எதிரே சென்று விட்டது. டிரைவர் இதைக் கவனிக்காமல் வண்டியைக் கிளப்பி இருக்கிறார். எங்களிடம் வண்டிக்கான ஆவணங்கள் எல்லாம் சரியாகவே இருக்கிறது. நாங்கள் எப்படி இந்த விபத்துக்குக் காரணமாக முடியும்?'' என்றார்.

மாவட்டக் காவல்துறைக் கண் காணிப்பாளர் ரம்யபாரதி, ''குழந்தைகளின் வீடு ரோட்டின் எதிர்புறத்தில் இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையை ரோட்டை கிராஸ் செய்துவிட வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. ஆனால், இந்தச் சம்பவத்தில் குழந்தையை வேன் டிரைவரோ அல்லது வேன் உதவியாளரோ ரோட்டைக் கடக்க உதவி செய்யவில்லை. பள்ளி வேனை பெரணமல்லூர் காலனியைச் சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்துள்ளார். அந்த வேனில் உதவியாளராக வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவர் வந்துள்ளார். இரண்டு பேரையும் கைது செய்திருக்கிறோம். இந்த விபத்து, ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கவனக்குறைவால்தான் ஏற்பட்டிருக்கிறது'' என்றார்.

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அரசு கடுமையான விதிமுறைகளை அறிவித்திருக் கிறது. என்னதான் சட்டம் போட்டாலும், தனி மனிதக்கவனம் அவசியம் என்பதைத்தான் இந்த விபத்து கற்பிக்கிறது.

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்