ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

தூங்கி வழிந்த அமைச்சர்கள்... நொந்துபோன நிர்வாகிகள்!

முசிறி கிறுகிறு

##~##
தூங்கி வழிந்த அமைச்சர்கள்... நொந்துபோன நிர்வாகிகள்!

டந்த 12-ம் தேதி முசிறியில் 'தூங்குமூஞ்சிக் கூட்டம்’ நடந்தது என்று வர்ணிக்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்! 

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் நடப்பதாக இருந்தது. ஆனால், அமைச்சர் சிவபதி விருப்பத்தின் பேரில், அவரின் சொந்த ஏரியாவான முசிறியில் கூட்டம் நடந்தது. காலை 9 மணிக்குத் தொடங்கிய அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சிவபதி, செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், அரியலூர் எம்.பி. இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

முதலில் மைக் பிடித்த பாப்பா சுந்தரம், ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான கூட்டத்தை முசிறியில் கூட்டினோம். ஆனாலும், நாம் வெற்றி பெறாததற்குக் காரணம், நமக்குள் இருந்த ஒற்றுமையின்மைதான். இந்தமுறை அந்தக் குறைபாட்டைக் களைந்து, அம்மா கை காட்டும் நபரை எப்படியாவது எம்.பி-யாக்க வேண்டும்'' என்றார்.

தூங்கி வழிந்த அமைச்சர்கள்... நொந்துபோன நிர்வாகிகள்!

அடுத்தடுத்து பேசிய லோக்கல் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சிவபதி இருவரும், ''எங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம்'' என்று வீரம் கொப்பளிக்கப் பேசிய நேரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் கண் அசந்து விட்டார். அடுத்து அவரைப் பேச அழைத்ததும், தூக்கத்தைத் தூக்கிப் போட்டு மைக் பிடித்தார்.

''அம்மா எப்படிப் பிரதமராக முடியும் என்று கேட்பவர்களிடம் சொல்லுங்கள். 549 எம்.பி-க்களைக் கொண்ட இந்தியாவில், பிரதமரைத் தீர்மானிப்பது ஏழு மாநிலங்கள்தான். அதில் தமிழகமும் ஒன்று. மாபெரும் ஊழல்களைச் செய்த காங்கிரஸ் 60 இடங்களில்கூட ஜெயிக்காது. ஆளுக்கு ஆள் தலைவர்

தூங்கி வழிந்த அமைச்சர்கள்... நொந்துபோன நிர்வாகிகள்!

என்று சொல்லிக்கொள்ளும் பி.ஜே.பி-யின் ஜம்பமும் இந்தத் தேர்தலில் பலிக்காது. குடும்ப ஆட்சிக் குளறுபடியால் முலாயம் சிங்குக்கும் தற்குறித் தலைவர்களான மாயாவதிக்கும் மம்தாவுக்கும் வாய்ப்பே இல்லை. அம்மாதான் தவிர்க்க முடியாத தலைவராக விளங்குகிறார். கர்நாடகாவில் உள்ள செல்வியின் சொத்தைக் காப்பாற்றுவதற்காக காவிரி பிரச்னையில் கருணாநிதி மௌனசாமியாக இருக்கிறார். விஜயகாந்த் ஒரு கோமாளி நடிகர்; ராமதாஸ் ஒரு செல்லாக்காசு. அதனால்தான் சொல்கிறேன்... அம்மாதான் பிரதம மந்திரி'' என்று படபடவென பேசிக்கொண்டு இருந்தார்.

அவரது சரவெடிப் பேச்சுக்கு இடையில், எந்தத் தொந்தரவும் இல்லாமல் கே.பி.முனுசாமியும் செந்தில் பாலாஜியும் கண்கள் கிறங்கக் கிடந்தனர். இவர்களைப் பார்த்தோ என்னமோ, அடுத்து ஓ.பி.எஸ். கொஞ்சநேரம் கண் அயர்ந்து விட்டார். அமைச்சர்கள் வரிசையாகத் தூங்கி வழிவதைப் பார்த்த நிர்வாகிகள், தர்மசங்கடத்தில் நெளிந்த னர்.

''அடுத்தது நீங்கதான்'' என கட்சி நிர்வாகி ஒருவர் தட்டி எழுப்ப... அரைத் தூக்கத்தில் மைக் பிடித்தார் முனுசாமி. ''இப்போது தி.மு.க. கொடுக்கும் துண்டறிக்கையில், 'அம்மா அடிக்கடி அமைச்சர்களை மாத்துறாங்க’ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. பெற்ற பிள்ளைகளையே கட்டுப்படுத்த முடியாத கருணாநிதிக்கு, அம்மாவைக் குறை சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது? இங்கு அம்மா கை காட்டும் தொண்டன், அமைச்சராக முடியும். அமைச்சரானதும் மமதையில் ஆட்டம் போட்டால், பதவி இருக்காது. அப்படிப் பதவி பறிக்கப்பட்டாலும், அம்மாவின் பார்வைக்காக வருத்தம் இல்லாமல் வரிசையில் நின்று வணக்கம் சொல் கிற தொண்டர்கள் கொண்ட இயக்கம்தான் அ.தி.மு.க.. நான் ஜீரோதான். என் பக்கத்தில் ஒன்றைப் போட்டு என் மதிப்பைக் கூட்டி அமைச்சராக்குவது அம்மாதான். அவர்தான் அடுத்த பிரதமராக வேண்டும்'' என்றார். தூக்கக் கலக்கத்தில் பெரம்பலூரை அரியலூர் என்று அவர் கூறியதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அடுத்துப்பேசிய நத்தம் விஸ்வநாதன், ''அம்மாவின் திட்டத்தை மக்களிடம் சொல்லி, அவரை பிரதமர் ஆக்கணும் என ஓட்டு கேளுங்கள்'' என்று உரத்த குரலில் சொன்ன நேரத்தில் ஒரு நிர்வாகி, ''கரன்ட் பிரச்னைக்குத் தீர்வு இல்லையா?'' எனக் கேட்க, ''மின்சாரத்துக்கு மட்டுமில்லே... நீ போட்டிருக்கிற டாஸ்மாக் சரக்குக்கும் நான்தான் மந்திரி. விஜயகாந்த் என்னோட கஸ்டமர்தான். இதில் இருந்து தெரியுதுல்ல... நம்ம சரக்கு, நல்ல சரக்கு!'' என்று விஷயத்தைத் திசை திருப்பியதும் கூட்டத்தில் சிரிப்பொலி.

''தமிழகத்தில் உள்ள எல்லாத் தொகுதிகளிலும் அந்தந்தத் தொகுதி தலைநகரத்தில் கூட்டம் நடத்துறாங்க. இங்கே மட்டும் பெரம்பலூரில் நடத்தாமல், முசிறியில் நடத்துறாங்க அதோடு, எங்க குறைகளைக் கேட்க வேண்டிய அமைச்சர்கள் காலை நேரத்திலேயே மேடையில் தூங்குறாங்க. இப்படித் தூங்கினா எப்படி அம்மாவைப் பிரத மராக்க முடியும்?'' என்று நொந்துகொண்டே நிர்வாகிகள் கலைந்தனர்.  

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி,

க.விக்னேஷ்குமரன்