ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

குப்பையைக் கொட்டிக் கொல்றாங்க...

அலறும் அமராவதி புகார்!

##~##
குப்பையைக் கொட்டிக் கொல்றாங்க...

'செத்துப்போனாத் தான் வாயைக் கட்டுவாங்க... ஆனா, உசுரோடு இருக்கிறப்பவே, நாங்க வாயைக் கட்டிக்கிட்டு வசிக்கிற நிலைமையாகிருச்சு’ என்று, சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கருப்பையா ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) குமுறலைப் பதிவு செய்திருந்தார். 

காரைக்குடிக்கும் தேவகோட்டைக் கும் இடையில் அமைந்துள்ளது அம ராவதி புதூர் ஊராட்சி. காரைக்குடி நக ராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கழிவுகளும் நகராட்சி எல்லைக்குள் அம ராவதி புதூருக்கு அருகில் கொட்டு கிறார்கள். இதனால், அமராவதி புதூர் மற்றும் அதன் அருகில் உள்ள சங்கராபுரம் ஊராட்சிப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு அங்கு வசிக்கும் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுநோய், சுவாசக் கோளாறுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறார்கள். இங்கே குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி, பல போராட்டங்களை நடத்தி விட்டனர் மக்கள். எதற்குமே அதி காரிகள் செவிசாய்க்காத நிலையில், தேவ கோட்டை நகராட்சியின் குப்பையையும் இங்கே கொட்டிக்கொள்ள, 'நோ அப்ஜெக்ஷன்’ கொடுத்திருக்கிறது காரைக்குடி நகராட்சி. சும்மா இருப்பார்களா மக்கள்? மூன்று கட்டப் போராட்டங்களை அறிவித்து, முதல்கட்டமாக கடந்த 9-ம் தேதி, மாஸ்க் அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

குப்பையைக் கொட்டிக் கொல்றாங்க...

ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருந்த கருப்பையாவைத் தனியே அழைத்துப் பேசினோம். ''காரைக்குடி நகராட்சிக்குள் ரெண்டு இடங்களில் ஏற்கெனவே குப்பைக் கிடங்குகள் இருந்துச்சு. நகரவாசிகளுக்கு பாதிப்பு வரும்னு 1980-ல் அந்தக் குப்பைகளை எல்லாம் இங்கே கொண்டாந்து கொட்ட ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்த்துக்கொண்டே இருக் கிறோம்.

குப்பையைக் கொட்டிக் கொல்றாங்க...

சமீபத்தில் இதுக்காக அதிகாரிகள் மூன்றுமுறை அமைதிக் கூட்டம் போட்டுப் பேசினாங்க. காரைக்குடி நகராட்சிக் குப் பைகளை நகருக்கு உள்ளேயே 24 இடங்களில் தரம் பிரித்து உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கிறோம். தேவகோட்டைக்கு மூணு மாசத்துக்குள் மாற்றுஇடம் பார்த்துருவோம்’னு சொன்னாங்க. ஆனா, இன்னும் எதுவும் நடக்கவில்லை. அதனால்தான், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். முடிவு கிடைக்கவில்லையென்றால், குப்பை லாரிகளை மறிப்பது மற்றும் பஸ் மறியல் செய்வது என்று திட்டம் போட் டிருக்கிறோம்'' என்றார்.

தொடர்ந்து பேசிய ம.தி.மு.க-வின் விவசாய அணி மாவட்டத் துணைச் செயலாளர் தாமரைச்செல்வனும் மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பாண்டிமீனாளும், ''குப்பைகளோட குப்பையா நாய், பன்றி போன்ற செத்துப்போன மிருகக் கழிவுகளையும் கொண்டாந்து கொட்டுறதால, ஈ மற்றும் கொசுத் தொல்லை தாங்க முடியலை. குப்பையால் ஏற்கெனவே இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டுப்போச்சு. போதாததுக்கு, தேவகோட்டை நகரின் குப்பையைக் கொட்டுறதுக்கு கண்மாய் புறம்போக்குல அனுமதி குடுத்துருக்காங்க. இதனால இந்தப் பகுதி யில் இருக்கிற கண்மாய்களுக்கு நீர்வரத்து பாதிச்சு, சுமார் 300 ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிச்சிருக்கு'' என்று ஆதங்கப்பட்டனர்.

குப்பையைக் கொட்டிக் கொல்றாங்க...

ஊராட்சி மன்றத் தலைவி பொன்னம் மாளிடம் பேசினோம். ''எங்கேயோ இருக்கிற குப்பையை இங்கே கொட்டி. எங்களை சாகடிக்கிறது நியாயமாய்யா?'' என்று கேட்டவர், ''போராட்டக் குழு எடுக்கும் எந்த முடிவுக்கும் ஊராட்சி மன்றம் முழு ஒத்துழைப்பு தரும்'' என்றார்.

காரைக்குடி நகரமன்றத் தலைவர் கற்பகத்திடம் இதுகுறித்துப் பேசியபோது, ''அந்த மக்கள் அச்சப் படுவதில் நியாயம் இருக்கு. அதனால்தான் காரைக்குடி நகராட் சிக்குள் சேகரிக்கும் மக்கும் குப்பைகளை 28 மையங்களில் பிரிச்சு எடுத்து உரம் தயாரிக்கப் போறோம். மிஞ்சி இருக்கிற குறைந்த அளவிலான மக்காத குப்பைகள் மட்டுமே இனி அமராவதிப் புதூருக்குப் போகும். அதுவுமே ரீ-சைக்கிளிங் செய்யப்பட்டு விடும். இதற்காக, 'சாலிட் லிக்விட் மேனேஜ்மென்ட் பிளான்’னு ஒரு திட்டம் போடப்பட்டு அரசாங்கத்தில் இருந்து பணமும் ஒதுக்கி வேலை ஆரம்பிச்சுட்டாங்க. அதனால் காரைக்குடிக் குப்பைகளால் இனிஅந்த மக்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது'' என்றார்.

தேவகோட்டை நகராட்சித் தலைவர் சுமித்ரா, ''ரெண்டு வருஷத்துக்கு முந்தியே நகரமன் றத்துல தீர்மானம் போட்டு, அந்த இடத்தில் குப்பை கொட்டுறதுக்கு அனுமதி வாங்கி இருக்காங்க. இருந்தாலும், காரைக்குடி நகராட்சி மாதிரியே நாங்களும் மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு தனித்தனியாப் பிரிச்சு, குறைந்த அளவிலான குப்பைகளை மட்டுமே அமராவதிக்கு அனுப்புறதுக்காக திட்டம் தயார் செய்து விட்டோம். அத்துடன், குப்பைக் கிடங்குக்கு மாற்றுஇடம் ஒதுக்கச் சொல்லி கலெக்டரிடம் கேட்டு இருக்கிறோம்'' என்றார்.

   மாவட்ட வருவாய் அலுவலரான தனபால், ''தேவகோட்டை குப்பைதான் இப்ப பிரச்னை. ஏற்கெனவே, அரசாணை எல்லாம் போட்டுத்தான் அந்த இடத்தில் தேவகோட்டை நகராட்சிக் குப் பைகளைக் கொட்ட அனுமதி வாங்கிருக்காங்க. அதை உடனடியா மாத்துறதுல நிர்வாகச் சிக்கல் இருக்கிறது. மாற்று இடம் ஒதுக்குவது குறித்து அரசுக்கு எழுதி இருக்கிறோம்'' என்று சொன்னார்.

நல்ல தீர்வு கிடைக்கட்டும்!

   - குள.சண்முகசுந்தரம்

  படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்