Published:Updated:

உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை!

சிக்கலுக்குக் காரணம் என்.ஆர்.காங்கிரஸா?

உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை!

சிக்கலுக்குக் காரணம் என்.ஆர்.காங்கிரஸா?

Published:Updated:
##~##
உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை!

நீதிமன்றம் தலையிட்டதும் ஒருவழியாக புதுச்சேரியில், உள்ளாட்சித் தேர்தலுக்​கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்தன. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திடீரென வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கைத் தாக்கல் செய்து இருப்பவர், முன்னாள் சுயேச்சை பெண் கவுன்சிலரான ஆனந்த லட்சுமி. இவருக்குப் பின்னால், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்ற கொதிப்புக் குரல்கள் புதுச்சேரியில் கேட்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் இந்த ஆனந்த லட்சுமி?

புதுச்சேரி தி.மு.க-வின் முக்கியப் புள்ளியான ரங்கநாதன் என்பவரின் மருமகள்தான் ஆனந்த லட்சுமி. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சக்தி நகர் வார்டு காங்​கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், மருமகளை சுயேச்சையாகப் போட்டியிட வைத்தார். வெற்றி பெற்றதும் தி.மு.க-வில் இணைந்தார் ஆனந்த லட்சுமி. ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கியபோது, தி.மு.க-வில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் ஐக்கியமானார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை!

அவர்தான் இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்குத் தடை கேட்டு வழக்குத் தொடர்ந்து இருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசா ரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறையையும் தேர்தல் துறையையும் விளக்கம் கொடுக்க உத்தர விட்டு இருக்கிறார்.  

உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் போராடி உத்தரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தத் தடை விவ காரத்தால் ஏகத்துக்கும் கொதிப்பில் உள்ளது. அந்தக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் பெருமாள், ''புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தடை கேட்டு முன்னாள் பெண் கவுன்சிலர் உயர் நீதிமன்றம் சென்றதன் பின்னணியில், ரங்கசாமிதான் இருக்கிறார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான துணிவு இல்லாத ரங்கசாமியின் தூண்டுதலில்தான், அவருடையக் கட்சியைச் சேர்ந்தவரே நீதிமன்றம் சென்றுள்ளார். ஆளும் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், தோற்று விடுவோம் என்ற அச்சம் அவருக்கு இருக் கிறது. அதனால்தான், இதுபோன்ற ஜனநாயக விரோதமான, வெட்கக்கேடான செயல்களை ரங்கசாமி செய்து வருகிறார். புதுவையில் உள்ள பெரும் அரசியல் கட்சிகள்கூட ரங்கசாமியின் இந்த வெட்கக்கேடான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை!

இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடியாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒருவேளை, உள்ளாட்சித் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்தால், மேல்முறையீடு செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல், இடஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு போன்ற பணிகள் முடிந்த பிறகும், மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறது. தேர்தல் நடத்தக்கூடாது என்ற அரசின் நோக்கத்துக்கு தேர்தல் கமிஷன் உதவி செய்வதுபோல் நடந்து கொள்கிறது'' என்று சீறினார்.  

வழக்கு தொடர்ந்துள்ள ஆனந்த லட்சுமி​யிடம் பேசினோம். ''புதுச்சேரியில் கடந்த 2001-ல் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக்​கொண்டு தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு ஒரு முறைதான் வார்டுகளில் சுழற்சி முறை பின் பற்றப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வார்டுகள் சுழற்சி முறை செய்யப்படுகிறது. இதன்விளைவால், கடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு, இந்தமுறை பொது வார்டு ஆகிவிட்டது. அதற்கு என்னுடைய சக்தி நகர் வார்டே உதாரணம். அது மட்டும் அல்லாமல், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் சரியாகப் பின்பற்றவில்லை. என்னைப்போன்ற பல கவுன்சிலர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் சார்பாகத்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்'' என்றார்.

''வழக்குத் தொடுப்பதற்கு பின்புலமாக என்.ஆர்.காங்கிரஸ் இருப்பதாக சொல்லப்படுகிறதே?'' என்ற கேள்விக்கு, ''நான் வழக்குப் போட்டதற்கும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாதிக் கப்பட்ட பெண் கவுன்சிலர் என்ற முறையில்தான் வழக்குத் தொடர்ந்து உள்ளேன்'' என்றார் நிதானமாக.  

''இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் எப்படிப் போட்டியிடுவீர்கள்... சுயேச்சையாகவா அல்லது என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராகவா?'' என்று கேட்டோம்.

''இந்த முறை போட்டியிடுவது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது'' என்றார்.

மாநிலத் தேர்தல் ஆணையர் உதிப் தாரேவிடம் பேசினால், ''உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் எல்லாமே திட்டமிட்டபடி நடக்கின்றன. இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு அனைத்திலும் சட்ட விதிமுறையை சரியாகப் பின்பற்றி வருகிறோம். நீதிமன்றம் தடை விதிக்காவிட்டால், தேர்தல் விரைவில் நடக்கும்'' என்றார் உறுதியாக.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே, உள்ளாட்சித் தேர்தலின் விதி தீர்மானிக்கப்படும்!

- நா.இள அறவாழி, ஆ.நந்தகுமார்

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism