Published:Updated:

சிற்றரசுவைத் காப்பாற்றுகிறதா காவல் துறை?

அரியலூர் பஞ்சாயத்து

சிற்றரசுவைத் காப்பாற்றுகிறதா காவல் துறை?

அரியலூர் பஞ்சாயத்து

Published:Updated:
##~##
சிற்றரசுவைத் காப்பாற்றுகிறதா காவல் துறை?

'நில மோசடி வழக்குகளில் தி.மு.க-வினர் மீது மட்டும் நடவ​டிக்கை எடுக்கும் காவல் துறை, அ.தி.மு.க-வின் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது’ என்று, கொந்தளிக்கிறார் அரியலூர் மாவட்ட தி.மு.க. பொருளாளர் துரை.முத்துக்குமாரசாமி. டெல்டா மாவட்டங்களில் பலம் வாய்ந்த நபராக விளங்கும் அகில இந்திய முக் குலத்தோர் பாசறையின் நிறுவனர் சிற்றரசு மீது தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை இல்லை என்பதுதான் இவரது குற்றச்சாட்டு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மிடம் பேசிய முத்துகுமாரசாமி, ''20 வருடங்​களுக்கு முன், பாப்பாக்குடி மெயின் ரோட்டில் 26 ஏக்கர் நிலத்தை நானும் என்னுடைய சென்னை நண்பரான சண்முகமும் சேர்ந்து, கல்லூரி கட்டு​வதற்காக வாங்கினோம். நிலம் ஒருவருடைய பெயரில் இருந்தால்தான் கல்லூரி ஆரம்பிக்க முடியும் என்பதால், சண்முகத்தின் பெயரிலேயே நிலத்தை எழுதினோம். சில காரணங்களால் கல்லூரி கட்ட

சிற்றரசுவைத் காப்பாற்றுகிறதா காவல் துறை?

முடியவில்லை. அதனால் நான் கொடுத்த பணத்துக்காக செட்டில்மென்ட் பேசி நிலத்தில் சவுக்கு, ஆர்.எஸ்.பதி மரங்களை நட்டேன். இதைப்பொறுத்துக் கொள்ளாத சண்முகத்தின் நண்பரான சிற்றரசு, கடந்த 2010-ம் ஆண்டு அடியாட்களுடன் வந்து எல்லா மரங்களையும் அழித்து நாசம் செய்தார். அப்போதே, போலீஸிலும் புகார் கொடுத்தேன். கூடவே, அரியலூர் சப்-கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தேன். அந்த வழக்கில் நீதிமன்றம், 15 வருடங்களுக்கும் மேலாக என்னுடைய பராமரிப்பில் இருக்கும் நிலம், எனக்கே சொந்தம் என உறுத்துக் கட்டளை (இன்ஜெக்ஷன்) வழங்கியது. ஆனால், சிற்றரசு நீதிமன்ற உத்தரவை மறைத்து, சண்முகத்திடம் கமிஷன் வாங்கிக்கொண்டு, நெய்வேலியை சேர்ந்த ராஜனுக்கும் அவருடைய உறவுக்காரர்களுக்கும் நிலத்தை விற்பனை செய்தார்.

இதற்காக, அரியலூர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தொடர்ந்தேன். ஆனால் சிற்றரசு, நான் அரியலூரில் வக்கீலாக பிராக்டீஸ் செய்வதாகவும் அங்கு வழக்கு நடந்தால் வழக்கின் தீர்ப்பு எனக்கே சாதகமாக அமையும் எனவும் காரணங்களைச் சொல்லி வழக்கை பெரம்பலூருக்கு மாற்றினார். இதற்கிடையில், நிலத்தை விற்ற சண்முகம் இறந்து விட்டார். ஆனாலும், வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. அரியலூர் நீதிமன்ற ஆணைப்படி, கிட்டத்தட்ட 18 வருடங்களாக நிலத்தைப் பராமரித்து வருகிறேன்.

சிற்றரசுவைத் காப்பாற்றுகிறதா காவல் துறை?

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி, பயங்கர ஆயுதங்​களோடு வந்த சிற்றரசுவின் ஆதரவாளர்கள், மரங்களை நாசப்​படுத்தியதோடு இல்லாமல் நான் கட்டியிருந்த வீடுகளையும் இடித்துத் தரைமட்டம்

சிற்றரசுவைத் காப்பாற்றுகிறதா காவல் துறை?

ஆக்கிவிட்டனர். என்னைத் தாக்கு​வதற்கும் ஆயுதங்களோடு வந்தனர். பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிற்றரசுவுக்குப் பயந்து, அன்றைக்கே மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை. இதுகுறித்து, டி.எஸ்.பி-யிடம் புகார் கொடுக்கலாம் என்று போனால், அவர் ஆபீஸில் இருந்து​கொண்டே லீவில் இருப்பதாகச் சொல்லி அனுப்பினார். ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி. என எல்லாருக்கும் புகார் கொடுக்க நடந்ததுதான் மிச்சம். சிற்றரசுவைக் காப்பாற்ற நினைக்கிறது காவல் துறை'' என்றார் சலிப்புடன்.

இந்தத் தோட்டத்தில் வேலை செய்யும் அஞ்சாயம்மாள், ''அந்த நிலத்தில் வீடு கட்டி, நிலத்தைப் பராமரிக்கிற வேலை செய்துக்கிட்டு இருக்கேங்க. அன்னைக்கு வேலைக்குப் போயிட்டுத் திரும்பிவந்து பார்த்தபோது, என் வீட்டை இடிச்சுத் தள்ளி இருந்தாங்க. பிள்ளைகளுக்காக சேர்த்துவெச்சிருந்த நகை, பணத்தை எல்லாம் திருடிட்டாங்க. வீட்டை இடிச்சவங்க அப்பப்ப வந்து மிரட்டுறாங்க. ஒவ்வொரு நிமிஷமும் பயந்து பயந்து வாழ்றதா இருக்கு'' என்றார் மிரட்சியுடன்.

நிலத்தை வாங்கிய ராஜன் வெளி யூரில் இருப்பதால், அவர் சார்பாக சிற்றரசு பேசினார். ''ஆரம்பத்தில்

சிற்றரசுவைத் காப்பாற்றுகிறதா காவல் துறை?

நாங்க மூவரும் நண்பர்களாகத்தான் இருந்தோம். முத்துகுமாரசாமியின் சொந்தக்காரர்களிடம் இருந்து சண்முகம் நிலத்தை வாங்கினார். ஆனால், அவரால் கல்லூரி கட்ட முடியவில்லை. சும்மா இருந்த நிலத்தில் சவுக்கு, ஆர்.எஸ்.பதி கன்றுகளைப் பயிரிட்டார் முத்துக்குமாரசாமி. அதைக் கண்டுகொள்ளவில்லை என்றதும், நிலம் தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இது பிடிக்காத நான் இவர்களிடம் இருந்து ஒதுங்கி விட்டேன்.

அதன்பிறகு, என்னைத் தொடர்பு​கொண்ட சண்முகம், நிலத்தை விற்றுத்​தரும்படி கேட்டார்.  நிலத்தை விற்றுக் கொடுத்தேன். நிலத்தை வாங்கியவர்கள் மரங்களை அப்புறப்படுத்தியபோது, என் பெயரையும் சேர்த்து போலீஸில் புகார் கொடுத்து விட்டார். ஒரு ரூபாய்கூட செலவு செய் யாமல், 26 ஏக்கர் நிலத்தை இவர் சொந்தம் கொண்டாடும்போது, பணம் கொடுத்து நிலத்தை வாங்கியவர் சும்மா இருப்பாரா? இந்த விவகாரத்தில் என்னை வம்புக்கு இழுப்பது சரியில்லை. எனக்கு அவரைப் போல கிரிமினலாக யோசிக்கத் தெரியாது'' என்றார் தடாலடியாக.

ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி செல்லமுத்து, ''நான் பாரபட்சமாக நடந்து கொள்கிறேன் என்பது சரியல்ல. முத்துக்குமாரசாமி கொடுத்த புகாரின் பேரில், சட்டப்படி வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். இது சிவில் வழக்கு என்பதால் கோர்ட் முடிவுப்படி நடவடிக்கை இருக்கும்'' என்றார்.

மேல் நடவடிக்கையைப் பொறுத்து, முழு உண்மை வெளிவரும்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி, க.விக்னேஷ்குமரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism