Published:Updated:

''இந்தியா முழுக்கவே சாதி ஆட்சிதான்!''

ராமதாஸின் சேலம் அதிரடி

''இந்தியா முழுக்கவே சாதி ஆட்சிதான்!''

ராமதாஸின் சேலம் அதிரடி

Published:Updated:
##~##
''இந்தியா முழுக்கவே சாதி ஆட்சிதான்!''

ராமதாஸ் கூட்டங்களுக்கு புதிய பரபரப்பு கிளம்பி இருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'புதிய பாதை, புதிய நம்பிக்கை, புதிய அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்’ என்ற முழக்கத்​தோடு சேலம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் பா.ம.க. களம் இறங்கியது.

19-ம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில் ஆரம்பம் முதலே சாதிய அனல் பறந்தது.

முதலில் மைக் பிடித்த மாநில அமைப்புச் செயலாளர் செல்வகுமார், ''இந்தியா முழுக்க சாதி அரசியல்தான் நடக்கிறது. கேரளாவில் நாயரும் மேனனும்தான் முதல்வராக முடியும். கர்நாடகாவில் கவுடாவும் லிங்காயத்தும்தான் முதல்வராக முடியும். ஆந்திராவில் ரெட்டியும் நாயுடுவும்தான் முதல்வராக முடியும். ஆனால், தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மை உள்ள வன்னியர்கள் முதல்வராக முடியவில்லை. வன்னியர்களுக்குச் சூடு, மானம் கிடையாது. தமிழ்நாட்டை ஆண்ட முதல் வர்களில் ஒருவர்கூட வன்னியர் கிடையாது.

''இந்தியா முழுக்கவே சாதி ஆட்சிதான்!''

நாம் நினைத்தால் தமிழ்நாட்டில் ஒரு வன்னியரை முதல்வராக்க முடியும். 67-ல் இருந்து கூத்தாடிகள்தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். வன்னியருக்கு மானமும் வீரமும்தான் தனிக்குணம். தர்மபுரியில் ஒரு வன்னியன் தன்மானம் போனது என்று, நாண்டுகொண்டு செத்தான். நாங்கள் ராணுவத்தையும் போலீஸையும் பார்த்தவர்கள். இது வன்னிக்காட்டு நெருப்பு. அதர்மத்தை அழிக்கத் தோன்றியவர்கள். எங்களை யாராலும் ஜெயிக்க முடியாது'' என்றார் அனல் பறக்க.

மாநில இளைஞர்அணிச் செயலாளர் அருள், ''தர்மபுரியில் நடக்காத சம்பவத்தைப் பெரிதுபடுத்துகிறார்​கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்மை வன்முறை சாதி என்கிறார். ஜெயலலிதா நம்மை நசுக்கப்பட வேண்டிய சாதி என்கிறார். அய்யா நமக்குத் தலைவர் அல்ல... இரண்டரைக் கோடி வன்னியர்களின் காவல் தெய்வம்'' என்றார்.

''இந்தியா முழுக்கவே சாதி ஆட்சிதான்!''

துணைத் தலைவர் கோ.க.மணி, ''வன்னியன் ஆள வேண்டும் - இதுதான் வன்னியர்களின் மந்திரம். இதை தினமும் காலையும் மாலையும் உச்சரிக்க வேண்டும். வன்னியன் வாழ வேண்டும் என்றால், வன்னியன் ஆள வேண்டும். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாக குடிசை​யில் அன்றாடம் கஞ்சிக்கு அலையும் சாதியாக இருக்கிறோம். தமிழகத்தில் ஏழரைக் கோடி மக்களில் இரண்டரைக் கோடி தனிப் பெரும்பான்மையாக வன்னியர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் தத்துவம் பெரும்பான்மை இனம் ஆள வேண்டும். சிறுபான்மை இனம் அதற்குக் கீழ் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனால், பெரும்பான்மை இனமான வன்னியர்கள்தான் இனி தமிழகத்தை ஆள வேண்டும்'' என்றார்.

இறுதியாக மைக் பிடித்த ராமதாஸ், ''அ.தி.மு.க-​காரன் ரெக்கார்ட் டான்ஸ் போட்டு கூட்டம் கூட்டுகிறான். தி.மு.க. கூட்டம் போட்டால், யாரும் வருவதில்லை. ஆனால், நமக்கு லட்சக்கணக்கில் வருகிறார்கள். உளவுத்துறையும் போலீஸும் எதிர்பார்க்காத அளவுக்குக் கூட்டம் கூடுகிறது. நாம்தான் அடுத்து ஆளும் கட்சி. ஜெயலலிதா வாய்தா மேல் வாய்தா வாங்குகிறார். பெங்களூரு கோர்ட்டில் அல்ல; தமிழக மக்களிடம். மின்சாரம் அடுத்த மூன்று மாதங்களில் வரும் என்று ஏழு முறை வாய்தா வாங்கி விட்டார். மின்வாரியத் துறை திவால் ஆகிவிட்டது. சென்னைக்கு மட்டும் ஒரு மணி நேரம் மின்தடை. மற்ற மாவட்டங்களில் 16 மணி நேரம் மின்தடை. ஜெயலலிதாவுக்கு நிர்வாகத் திறமை இல்லை. பகிர்ந்து கொடுக்கும் ஆற்றல் இல்லை. அ.தி.மு.க. என்பது அடிமைகளுக்கான கட்சி. இரண்டு திராவிடக் கட்சிகளும் வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டிய கட்சிகள். 2016-ல் பா.ம.க-வைச் சார்ந்தவர்தான் கோட்டையில் முதல்வராக இருப்பார்.

திராவிடன் என்று சொல்லி ஏமாற்றுகிறார் கருணா​நிதி. பெங்களூரு போய், 'நாம் திராவிடர்... காவிரி தண்ணீர் விடு’ என்று கேட்டுப் பார். கேரளாவில் போய் 'நாம் திராவிடர்... பெரி யாறைத் திற’ என்று கேட்டுப் பார்... யாரை ஏமாற்றுகிறாய்?

'அவர்கள் நம்முடன் கூட்டணிக்கு வரணும்’ என்கிறார். என்னை மனதில் நினைத்துதான் சொல்லி இருக்கிறார். உதயசூரியன் மேற்கே உதித்தாலும் இனி உங்களுடன் கூட்டணி கிடையாது. திராவிடம் என்பது தீரா விஷம். அ.தி.மு.க. என்பது அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு ரசிகர் மன்றம். தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகியதும் ரசிகர் மன்றத்தை வைத்துக் கட்சி ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அவரோடு நடித்த ஜெயலலிதா தலைவர் ஆகிவிட்டார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை.

45 வருஷங்களாக தமிழ்நாட்டை சீரழித்து விட்டனர். கடல் நீரே வற்றிப்போனாலும் இனி இவர்களோடு கூட்டணி கிடையாது.  ரெட்டியார், முதலியார், நாயக்கர், கவுண்டர் என 40, 45 சாதி சங்கத் தலைவர்களுடன் கடந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தினோம். எல்லோரும் 'நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் ஆதரவு தருகிறோம்’ என்கிறார்கள்.

இந்தியா முழுக்க சாதி அரசியல்தான் நடக்கிறது. நம் ஜனாதிபதி பிரணாப் 'முகர்ஜி சாதி’. பிரதமர் மன்மோகன் 'சிங் சாதி’. எல்லாம் சாதி அரசியல்தான். ஆனால், அங்கு ஊடகங்கள் சாதிக்கூட்டணி என்று எழுதுவது இல்லை. 'சோஷியல் இன்ஜினீயரிங்’ என்று எழுதுகிறார்கள். அப்படியானால், எங்களையும் 'சோஷியல் இன்ஜினீயரிங்’ என்றே எழுதுங்கள்'' என்றார்.

நாடு என்ன ஆகும் என்றே தெரியவில்லை!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism