Published:Updated:

பெண்கள்... தி.மு.க-வின் ரெண்டு கண்கள்!

சேலம் கலாட்டா!

பெண்கள்... தி.மு.க-வின் ரெண்டு கண்கள்!

சேலம் கலாட்டா!

Published:Updated:
##~##
பெண்கள்... தி.மு.க-வின் ரெண்டு கண்கள்!

'என் உடல்நிலை மோசமாகிட்டே இருக்குது. திரும்ப நான் வீட்டுக்கு வருவேனானுகூடத் தெரியலை. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிட்டா, நீங்க எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும். எதுக்காவும் சண்டை போடாதீங்க. யார் மனசையும் நோகடிக்காதீங்க’ - வேலூர் ஜெயிலில் இருந்தபோது தன்னைச் சந்திக்கவந்த குடும்பத்தினரிடம் வீரபாண்டி ஆறுமுகம் உதிர்த்த வார்த்தைகள் இவை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் இறந்து 30 நாட்கள்கூட முடியவில்லை. அதற்குள் குடும்பத்துக்குள் பிரச்னைகள் ஆரம்பம். அத்தனை பிரச்னை​களுக்கும் காரணமாக மகேஸ்வரி, சாந்தி என்ற இரண்டு பெண்களைத்தான் சொல்கிறார்கள்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகள், மகேஸ்வரி. ஆறுமுகத்தின் முதல் வாரிசு என்பதால், அப்பா செல்லம். சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த காசி என்பவருக்கு மகேஸ்வரியை மணம் முடித்துக்கொடுத்தார் ஆறுமுகம். மகேஸ்வரியை யாரும்... எந்த வகையிலும் புண்படுத்திவிடக்

பெண்கள்... தி.மு.க-வின் ரெண்டு கண்கள்!

கூடாது என்பதில் ஆறுமுகம் மிகவும் கவனமாக இருந்தார். அதனால், மகேஸ்வரி சொல்லும் எதற்குமே ஆறுமுகம் மறுப்பு சொன்னது இல்லை. வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோதும்... இப்போதும் அந்தக் குடும்பத்தின் அதிகார மையம் மகேஸ்வரிதான்.

அடுத்தவர் ராஜாவின் மனைவி சாந்தி. வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகள். இவரும் உறவுக்காரப் பெண் என்பதால், மகேஸ்வரியுடன் சாந்தி நெருக்கமாகி விட்டார். ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது, நில அபகரிப்புப் புகாரில் நேரடியாகவே சிக்கினார் சாந்தி. இந்த இரண்டு பேரும்தான் இப்போது சர்ச்சையின் நாயகிகள்.

இதுபற்றி, தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை மகேஸ் வரியும் சாந்தியும் வெச்சதுதான் சட்டம். கட்சிக்​காரங்களும் 'அக்கா.. அக்கா’னு அனைத்தையும் பொறுமையா ஏத்துக்கிட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் பரிந்துரை செய்றவங்களுக்குத்தான் கட்சிப் பதவிகளும் கொடுத்தாங்க. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்றோம்... கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட நைனாம்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் ஸீட் கேட்டிருந்தார். அவர் கட்சி​யில் மூத்தவர். வீரபாண்டியாரின் தீவிர விசுவாசி. வாய்ப்பு கொடுத்திருந்தால், நிச்சயம் ஜெயித்து இருப்பார். ஆனால் அவருக்கு ஸீட் கொடுக்காமல் தடுத்து, தன் வீட்டுக்காரரின் தம்பி ராமச்சந்திரனுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தார் மகேஸ்வரி. அதனால், கோபம் அடைந்த சிவகுமார் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜெயித்து, அ.தி.மு.க-வில் சேர்ந்து விட்டார். மகேஸ்வரி சொன்னால் மட்டுமே கட்சிப் பொறுப்புகள் கிடைக் கும் என்ற நிலைதான் ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு, சாந்தியின் பெயரும் சேர்ந்து கொண்டது.

வீரபாண்டியார் இறந்த பிறகாவது இவர்கள் ஆட்டம் அடங்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், சிவலிங்கத்தை மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்ததையே, மகேஸ்வரியால் பொறுக்க முடியவில்லை. கட்சியில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளை வீட்டுக்கு வரச்சொல்லி கூட்டம் நடத்தினார். 'யாரைக் கேட்டு சிவலிங்கத்தை மாவட்டச் செயலாளராகப் போட்டாங்க. இதை நீங்க யாரும் ஏத்துக்கக் கூடாது. உடனே எல்லோரும் ராஜினாமா பண்றோம்னு சொல்லுங்க. நாளைக்கே நாம எல்லோரும் சென்னைக்குக் கிளம்பிப்போய் கலைஞரை சந்திப்போம்’னு பேசினாங்க. எங்களுக்கு உடன்பாடு இல்லைன்​னாலும், வேற வழி இல்லாம சென்னைக்குப் போனோம். அங்கே தலைவரைச் சந்திக்கும்போது, மகேஸ்வரி, சாந்தியோடு கட்சிப் பொறுப்பாளர்கள் நான்கு பேரை மட்டும்தான் உள்ளே அனுமதித்தனர். 'எங்கள் குடும்பத்தில் இருந்து யாருக்காவது மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுங்க’ என்றுதான் மகேஸ்வரி தலைவரிடம் கேட்டார். தலைவருக்குப் பயங்கர கோபம் வந்தது. 'வீரபாண்டியோட உடலை அடக்கம் பண்ற வரை உங்க வீட்டுலயே ரெண்டு நாளா ஸ்டாலின் உட்கார்ந்து இருந்தாரே. அவரைப் பார்த்து நன்றி சொல்ல​ணும்னு உங்க யாருக்காவது தோணுச்சா? அதுக்குள்ள பதவி கேட்டு வந்துட்டீங்க. அதெல்லாம் எதுவும் மாற்ற முடியாது’ என்று கடுமையாகச் சொல்லி அனுப்பி விட்டார்.

சேலத்துக்கு வந்த மகேஸ்வரி, மாவட்டப் பொறுப்பாளர் சிவலிங்கத்தை வீட்டுக்கு வரவழைத்து, 'நீங்க உங்க பதவியை ராஜினாமா பண்ணுங்க. அவங்க கொடுத்தா, நீங்க வாங்கிக்கு​வீங்களா? எங்களைக் கேட்க மாட்டீங்களா?’ என்று திட்டி இருக்கிறார். அதுக்கு சிவலிங்கம், 'எனக்குக் கட்சித் தலைமை பொறுப்பு கொடுத்திருக்கு. அவங்க சொன்னா ராஜினாமா செய்றேன். நீங்க சொல்றதுக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அக்காவையும் மனைவியையும் எதிர்த்துப் பேசுவதற்குத் தைரியம் இல்லாமல் ராஜா அமைதியாக இருக்கிறார். இதுதான் சேலத்தின் நிலைமை'' என்று சொல்கிறார்கள்.

இதுபற்றி மகேஸ்வரியிடம் கேட்டோம். ''ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்... நாங்களே ரொம்பவும் நொந்து போயிருக்கோம். இந்த நேரத்தில் பதவியைப் பற்றி எல்லாம் எனக்குப் பேச விருப்பம் இல்லை. ஆனால் அவர்கள் சொல்வதில் எதுவும் உண்மை இல்லை'' என்றார்.

சேலம் தி.மு.க. இன்னமும் தடுமாற்றத்தில்தான் இருக்​கிறது!

- வீ.கே.ரமேஷ், படம்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism