Published:Updated:

கொலை மிரட்டலுக்குக் காரணம் அமைச்சரா?

முக்கூர் சுப்பிரமணியம் மீது பாயும்

கொலை மிரட்டலுக்குக் காரணம் அமைச்சரா?

முக்கூர் சுப்பிரமணியம் மீது பாயும்

Published:Updated:
##~##
கொலை மிரட்டலுக்குக் காரணம் அமைச்சரா?

'ஆரணி தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ. தாமாகவே வந்து அ.தி.மு.க-வில் சேர வேண்டும். இல்லை என்றால், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்’ என்று மிரட்டல் கடிதம் வந்திருப்பதால், கொந்தளிக்கிறது தே.மு.தி.க. வட்டாரம். இந்த மிரட்டல் விடுத்திருப்பது அமைச்சர் ஒருவரின் ஆட்கள்தான் என்று சொல்லப்படுவது, மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் கையை நீட்டியும் நாக்கைத் துருத்தியும் பேசியதால், அ.தி.மு.க-வுடன் இருந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. அதில் இருந்து இரண்டு கட்சிகளும் மோதிக்​கொள்ளத் தொடங்கின. கடந்த மாதம் மதுரை மத்தியத் தொகுதி சுந்தர்ராஜன், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், பேராவூரணி அருண் பாண்டியன் ஆகிய நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களும் திடீரென ஜெயலலிதாவைச் சந்தித்து விஜயகாந்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அந்த நான்கு பேருக்கும் சட்டசபையில் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.

நான்கு எம்.எல்.ஏ-க்களும், 'எங்கள் தொகுதிப் பிரச்னைகளைத் தெரிவிக்கத்தான் முதல்வரைச் சந்தித்தோம்’ என்று சொன்​னாலும் அவர்களைப் போல் இன்னும் பலர் அ.தி.மு.க. பக்கம் இழுக்கப்படுவார்கள் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது.

கொலை மிரட்டலுக்குக் காரணம் அமைச்சரா?

இந்த நிலையில்தான், திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்​பாளர் முத்தரசியிடம், 'எனக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து இருக்கிறார் ஆரணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான பாபுமுருகவேல்.

அவரிடம் பேசினோம். ''நான் கடந்த 10-ம் தேதி காலை ஆரணி எம்.எல்.ஏ. அலுவலகத்தில்

கொலை மிரட்டலுக்குக் காரணம் அமைச்சரா?

பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு ஒரு கடிதம் வந்தது. 'பாபுமுருகவேல் அவர்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தானாகவே அ.தி.மு.க-வில் வந்து இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இணையாவிட்டால், கண்டிப்பாக ஆரணியில் இடைத்தேர்தல் வரும். கேப்டன் என்று சொல்லிக்கொண்டு ஊரில் எங்கேயாவது பிரசாரம் செய்தால், எங்கள் அண்ணன் உங்கள் கதையை முடிக்கச்சொல்லி இருக்கிறார்’ என்று எழுதி இருந்தது. இந்தக் கடிதத்தில் செய்யாறு தபால் நிலையத்தில் அஞ்சல் செய்யப்​பட்டதற்கான முத்திரை இருந்தது. மேலும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில் எங்கள் அண்ணன் என்ற வார்த்தைக்கு அடுத்து முக்கூரார் என்று எழுதப்பட்டு, அதை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்தக் கடிதத்தை எழுதியவர் கையெழுத்துப் போடாமல் மொட்டைக் கடுதாசியாக அனுப்பி இருக்கிறார். எங்கள் தலைவரிடம் இது சம்பந்த​மாகக் கூறியபோது, அவர் உடனே போலீஸில் புகார்அளிக்கச் சொன்னதால் இங்கே புகார் கொடுத்து இருக்கிறேன். என் உயிருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்றார்.

கடிதத்தில் பெயர் மறைக்கப்பட்டு இருக்கும்போது முக்கூரார் என்று இருப்பதாக எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ''மறைக்கப்பட்ட இடத்தில் லைட் அடித்து பின்பக்கமாகப் பார்த்தேன். அதில் முக்கூரார் என்று இருப்பது தெளிவாகத் தெரிந்தது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களை அ.தி.மு.க-வுக்கு இழுப்பதற்கு அவர்கள் செய்யும் பலவித முயற்சிகளில் இதுவும் ஒன்று. நான்கு எம்.எல்.ஏ-க்களைத் தவிர வேறு யாரையும் அவர்களால் அசைக்க முடியவில்லை. எங்களை இழுப்பதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்​வியில்தான் முடிகின்றன. அதனால் இப்போது கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். சாம, பேத, தான, தண்டம் என்பதுபோல் ஒவ்வொரு ஆயுதமாகக் கையில் எடுக்​கிறார்​கள். எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்​களுக்குப் போனில் பேசிப் பார்ப்பது, அடுத்து நேரில் பேசுவது, அடுத்து மிரட்டல் விடுவது என்று இறங்கி இருக்கிறார்கள். ஆனால் என்னிடம் இதுவரை யாரும் நேரிலோ, போனிலோ அ.தி.மு.க-வுக்கு வரச்​சொல்லி பேசவில்லை. அதுபோல் என்னிடம் பேசினால் எடுபடாது என்பது தெரிந்துதான், இப்படி முதலிலேயே கொலை மிரட்டலில் இறங்கி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் நான் இல்லை; அங்கே செல்லவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவேன்'' என்றார்.

அமைச்சர் ஆட்கள்தான் இப்படி மிரட்டல் கடிதம் விடுத்ததாகச் சொல்லப்படுவது குறித்து அமைச்சர் முக்கூர் சுப்பிர​மணியத்திடம் கேட்டோம். ''இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யார் மிரட்டல் விட்டிருந்​தாலும் காவல் துறையினர் கண்டு​பிடித்து தக்க நடவடிக்கை எடுக்கட்டும். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன், தனக்கு கமிஷன் கிடைக்கவில்லை என்று ஆரணியில் தடுப்பணை பணியைத் தடுத்து நிறுத்தி நாடகம் ஆடினார். இப்போது இந்த நாடகத்தை எதற்காகப் போடுகிறார் என்று தெரியவில்லை'' என்றார்.

நிஜமா... நாடகமா என்பதை காவல் துறையினர்தான் கண்டு​பிடிக்க வேண்டும்!.

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism