Published:Updated:

சாமிக்குக் காவல் இல்லையா?

பெரம்பலூர் வேதனை

சாமிக்குக் காவல் இல்லையா?

பெரம்பலூர் வேதனை

Published:Updated:
##~##
சாமிக்குக் காவல் இல்லையா?

சாமியைக் காப்பாற்றும் காரி​யத்தில் பக்தர்கள் இறங்கி உள்ளார்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரம்பலூர் மாவட்டம் பேரளி - மருவத்தூர் கிராமங்களுக்கு இடையே முட்புதரில் மறைந்து இருந்த 1,000 வருடப் பழைமையான சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து 29.8.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில் 'சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?’ எனத் தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்தக் கோயில்களில் விலைமதிப்பற்ற சாமி சிலைகள் இருப்பதால், கோயிலைப் பாதுகாப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டு இருந்தோம். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அந்தக் கோயில்களில் இருந்து ஐந்து சாமி சிலைகள் கொள்ளைபோய் உள்ளன.

கோயில் அர்ச்சகரான சீனி​வாச அய்யங்கார், ''இந்தக் கோயில்களைப்​பற்றி உங்கள் பத்திரிகையில் வெளியானதும், கோயிலைப் பார்வை​யிட்ட கலெக்டர், தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட்டார். இந்தக் கோயில் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்திலேயே பல சிலைகள் காணாமல் போயிருந்தன. அதனால் காணாமல்போன சிலைகள் குறித்தும், கோயிலுக்குச் சொந்தமான நிலம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதோடு முக்கியப் பிரமுகர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்​தனர்; பொதுமக்கள் வருகையும் அதிகரித்தது.

சாமிக்குக் காவல் இல்லையா?

இந்த நிலையில், போன மாதம் என் அப்பா விபத்துக்கு உள்ளா​னார். அதனால் என்னால் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து வர முடியவில்லை. திடீரென, 'கோயிலில் இருந்த பைரவர், துர்க்கை, விநாயகர் உள்ளிட்ட ஐந்து சிலைகளைக் காணவில்லை’ என்று பொதுமக்கள் சொல்லவே பதறிப்போனேன். புகார் கொடுத்திருக்கிறோம். மற்ற சிலைகளையாவது 'பாலாலயம்’ செய்து ஊருக்குள் பாதுகாப்பாக வைத்தால், கோயில் கும்பாபிஷேகம் செய்யும் வரை, பாதுகாப்பாக இருக்கும்'' என்றார்.

சாமிக்குக் காவல் இல்லையா?

ஊர்க்காரரான ராயப்பன், ''ஏற்கெனவே கொள்ளைபோன அம்பாள் சிலைகள் உள்ளிட்ட சாமி சிலைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயைத் தாண்டும். அப்படி இருந்தும் அதிகாரிகள் அசட்டையாகவே இருந்தார்கள். அதனால்தான் மீண்டும் ஐந்து சிலைகளைக் காணோம். இதுகுறித்து போலீஸில் கேட்டால், யாரும் புகார் கொடுக்​காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அலட்சியமாகச் சொல்கிறார்கள். கோயில் நிலங்களில் வரும் வருமானத்தை ஒழுங்குபடுத்தினாலே, கோயிலை நன்றாகப் பராமரிக்க முடியும்'' என்றார்.

கோயில் சிலைத் திருட்டு விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டர் தாரேஷ் அகமதுவிடம் பேசினோம். ''அந்தக் கோயில்களின் நிலை குறித்து நீங்கள் எனது கவனத்துக்குக் கொண்டுவந்த பிறகு, சிலைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய தகவல்களை வி.ஏ.ஓ-க்கள் மூலம் சேகரித்து வருகிறேன். இந்த நிலையில் மீண்டும் சிலைகள் திருடுபோய் இருப்பது வருத்தத்துக்கு உரியது. இதுகுறித்து கோயில் அர்ச்சகர் என்னிடம் புகார் கொடுத்தார். இப்போது காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைத் திருட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்'' என்றார் உறுதியாக.  

சாமிகளைக் காப்பாற்றுங்கள்!

- சி.ஆனந்தகுமார், படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism