##~## |

தர்மபுரி மாவட்டத்தில் நான்கு கிராமங்கள் கொளுத்தப்பட்ட விவகாரம், இன்னமும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து விசிட் அடித்துக்கொண்டே இருப்பதால், பதற்றம் இன்னும் தணியவே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவம் குறித்து ராமதாஸ், திருமாவளவன் விடுத்த அறிக்கைகள், ஏரியாவை மேலும் சூடாகவே வைத்திருக்கிறது. அதனால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறுசிறு உரசல்களும் சிக்கல்களும் அரங்கேறி வருகின்றன.
சம்பவம்: 1
நிவாரணப் பணிகளை அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில் கலந்துகொண்ட மங்கை என்ற இளம்பெண் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இறந்தார். 'கலவர அதிர்ச்சியால்தான் அவர் இறந்தார்’ என்று அவர் சடலத்தை வாங்க மறுத்து மனித உரிமை அமைப்புகள் பெரும் போராட்டத்தில் இறங்கின. நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸ் உறுதி அளித்த பிறகே, அந்தப் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

சம்பவம்: 2
அரூர் அருகே நம்பியம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்ற தலித் இளைஞரும் பழையப்பேட்டையைச் சேர்ந்த ரம்யா என்ற வன்னியர் சமூகப் பெண்ணும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடி வெடுத்து, கடந்த 6-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். ரம்யா தரப்பினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரி வித்து போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும், உடன்பாடு ஏற்படாமல் இன்னமும் விவகாரம் தொடர்ந்து வருகிறது.

சம்பவம்: 3
தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டியைச் சேர்ந்த தலித் இளைஞர் கவியரசு, விருதகவுண்டனூரைச்

சேர்ந்த பள்ளி மாணவி பிரபாவைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 7-ம் தேதி பள்ளி முடித்து வீடு திரும்பிய பிரபாவை, கவி யரசு தன் நண்பர்களுடன் சென்று வழிமறித்து, காதலை ஏற்கும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஏரியாவாசிகள் விரட்டியதில் கவியரசு மட்டும் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் அடைத்து வைத்து, ஈவ்-டீசிங் வழக்கு பதிவு செய்யும்படி சாலை மறியலில் இறங்கினர் மக்கள். ஒருவழியாக போலீஸ் வந்து கவியரசுவை ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற பிறகே, மறியல் கைவிடப்பட்டது. ஆனாலும் கவியரசுவின் நண்பர்களைக் கைது செய்யாததால், மீண்டும் 9-ம் தேதி இரவும் தர்மபுரி - கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் மறியல் செய்தனர். இந்தச் சம்பவங்களால் பெரியாம்பட்டி பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
சம்பவம்: 4
கடந்த 9-ம் தேதி இரவு. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தர்மபுரியில் சாதி ஒழிப்பு மாநாடு நடந்தது. அப்போது, போதையில் சிலர் அங்கு வந்து மேடைக்குப் பின்புறம் பல்புகளை உடைத்து கலாட்டா செய்யவே, போலீஸ் அவர்களை அள்ளிச் சென்றது. அந்த மாநாடு முடித்து ஊர் திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்ததில் அந்தப் பகுதியிலும் பதற்றம் நிலவியது. மாநாடு முடித்து ஊர் திரும்பிய தலித் சமூகத்தினரைப் பல்வேறு ஊர்களில் மர்ம ஆசாமிகள் மிரட்டியும், வாகனங்கள் மீது கல் எறிந்தும் மிரட்டி உள்ளனர்.
சம்பவம்: 5
கடந்த 10-ம் தேதி நாய்க்கன்கொட்டாய் பகுதியில் 20 கிராமங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களும் மாணவிகளும் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 'வன்முறைச் சம்பவத்தில்
தொடர்பு இல்லாத ஆண்களுக்கு போலீஸ் தொல்லை தரக்கூடாது. தர்மபுரி மாவட்டக் கிராமங்களில் நிலவும் பதற்றமான சூழலை சீர்செய்து கலவரக் கிராமங்களில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையோடு உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் திரண்டதால் அங்கும் பரபரப்பு.
இதுதவிர, அவ்வப்போது ஏதாவது ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு கும்பல் தீ வைத்து விட்டதாக வதந்திகள் வருகின்றன. மேலும், தீயணைப்பு வாகனங்களை வர வழைத்து அலைக்கழிப்பதும் நடக்கிறது. கலவரம் நடந்து இத்தனை நாட்களாகியும், இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இந்த மாவட்டத்தில் முழு அமைதியை மீட்டெடுப்பது அரசின் தலையாய கடமை!
- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: வி.ராஜேஷ்