Published:Updated:

இன்ஸ்பெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?

மதுரை அலறல்

இன்ஸ்பெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?

மதுரை அலறல்

Published:Updated:
##~##
இன்ஸ்பெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?

'விசாரணை என்ற பெயரில் எங்களைத் துன்புறுத்தினால், வெடிகுண்டு வீசிக் கொல்வோம்’ - திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மாட​சாமியை இப்படி மிரட்டியதாக மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஏழு பேர் மீது பகீர் எஃப்.ஐ.ஆர். விழுந்து இருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதிமாட்டுத்​தாவணி டாஸ்மாக் பாரில் வெடித்ததில் தொடங்கி இந்த நவம்பர் 1-ம் தேதி திருப்பரங்​குன்றம் மலையில் எடுக்கப்பட்டது வரை ஆறு வெடிகுண்டுச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தை உலுக்கி இருக்கின்றன. 'எல்லாமே ஒரே குரூப் வேலைதான்’ என்று சொல்லப்பட்டாலும், முக்கியக் குற்றவாளிகள் யாரையும் இதுவரை போலீஸ் பிடிக்கவில்லை. இந்த நிலையில், தேவர் ஜெயந்தி அன்று மதுரை சிந்தாமணி அருகே சுமோ மீது பெட்ரோல் குண்டு வீசி ஏழு பேரின் உயிரைப் பறித்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான ராமர் உள்ளிட்ட 11 பேரைத் துரிதமாகக் கண்டுபிடித்து, அதில் 10 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் அடைத்தார் இன்ஸ்பெக்டர் மாடசாமி.

இன்ஸ்பெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?

அதனால், திருப்பரங்குன்றம் டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு குற்றவாளிகளைக் கண்டு​பிடிக்கும் பொறுப்பையும் மாடசாமியிடம் ஒப்படைத்​தாராம் எஸ்.பி. பாலகிருஷ்ணன். இது சம்பந்தமாக மாடசாமி சிலரை விசாரித்ததுதான், வில்லங்கமாகி இருக்கிறது.

நம்மிடம் பேசினார் மாடசாமி. ''திருப்பரங்குன்றம் வெடிகுண்டு வழக்கில் 50-க்கும் மேற்பட்ட நபர்களை விசாரித்து உபயோகமான சில தகவல்களையும் வாக்கு மூலமாக வாங்கிவிட்டேன். நாங்கள் சந்தேகிக்கும் ஒரு நம்பரில் இருந்து வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு காலனி பாபா உசேன் என்பவருக்கு போன் போயிருக்கிறது. விசாரித்ததில், பாபா உசேன், இந்து ஒருவரது பெயரில் சிம் கார்டு வாங்கி இருந்ததால் சந்தேகம் கூடியது. அவரைக் கேட்டபோது, 'அந்த நம்பர் யாருதுன்னே தெரியாது’னு சாதிச்சார். அவரிடம் விசாரணையை முடிச்சுட்டு எஸ்.பி. ஆபீஸுக்குக் கூட்டிட்டு வந்தேன். அப்போது ஆறேழு பேருடன் வந்த த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சேக் இப்ராஹிம், 'வெடிகுண்டு கேஸை நீ எப்படி விசாரிக்கலாம்? எங்களைப் பத்தி உனக்குத் தெரியாது. நீ எப்படி விசாரணை நடத்துறேனு பார்ப்போம். உன்னை வெடி குண்டு வீசிக் கொல்றோமா, இல்லையான்னு பாரு’னு மிரட்டிட்டு எஸ்கேப் ஆனாங்க. இதை அப்படியே எழுதி புகாராகக் கொடுத்திருக்கிறேன்.

ஏற்கெனவே, 'நரேந்திர மோடி மதுரைக்கு வந்தால், வெடிகுண்டு வைத்துக் கொல்வோம்’னு மர்ம ஆசாமி

இன்ஸ்பெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?

ஒருவன் போனில் மிரட்டல் விடுத்தான். அந்த செல்போன் த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் 'செல்’ சேக் என்பவருக்குச் சொந்தமானது. தனது செல்போன் திருடு போயிட்டதா ஏற்கெனவே அவர் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். மிரட்டல் விடுத்த நபர், அதில் வேறு ஒரு சிம்கார்டைப் போட்டுத்தான் மோடிக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். அதே ஆசாமி, அந்த செல்போனில் இன்னொரு சிம் கார்டைப் போட்டுத்தான் பாபா உசேனிடம் பேசி இருக்கிறான். இதை விசாரிக்கத்தான் பாபா உசேனை அழைத்து வந்தேன்'' என்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த மதுரை மாவட்ட த.மு.மு.க. தலைவர் சேக் இப்ராஹிமோ வேறு மாதிரியாகச் சொன்னார். ''த.மு.மு.க-வின் கிளைச் செயலாளரான பாபா உசேனை, 9-ம் தேதி காலையில் போலீஸ் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. தகவல் கிடைச்சதும் மாநில அமைப்புச் செயலாளரும் மஹபூப்பாளையம் ஜமாத் தலைவருமான முகமது கவுஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் நூருல் ஹக், கிளைத் தலைவர் அப்பாஸ் ஆகியோருடன் எஸ்.பி. ஆபீஸுக்குப் போனோம். அங்கே வந்த மாடசாமி, 'இந்த நம்பரில் இருந்து பேசினது யாருன்னு சொல்லச் சொல்லுங்க... பாபா உசேனை விட்ருவோம்’னு சொன்னார். 'குற்றவாளிக்கு நாங்க துணைபோக மாட்டோம், உங்களோட விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் குடுப்போம்’னு சொல்​லிட்டு, பாபா உசேனிடம் அந்த நம்பர் குறித்து விசாரித்தேன்.

25.4.12-ல் அந்த போன் வந்திருக்கு. ஏழு மாதங்​களுக்கு மேல் ஆனதால், அது யாருன்னே பாபாவுக்குத் தெரியலை. இதைச் சொன்​னதுக்கு, 'நீ விசாரணை அதிகாரியா, நான் விசாரணை அதிகாரியா?’னுஎங்களைத் திட்ட ஆரம்பித்தார் மாடசாமி. 'மரியாதை​யாகப் பேசுங்க சார்’னு என்கூட வந்தவங்க சொன்னதை அவர் கேட்கவே இல்லை.

அதனால், 'சரி சார், நீங்க பண்றதைப் பண்ணுங்க; எங்களால முடிஞ்சதை நாங்களும் பாத்துக்கிறோம்’னு கிளம்பினோம். உள்ளே அவர் என்ன சொன்னாரோ தெரியலை. ஏகப்​பட்ட போலீஸ்காரங்க ஓடிவந்து எங்களைச் சுத்திவளைச்சு வேனுக்குள் ஏத்தி, எஸ்.பி. ஆபீஸுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே வந்த ஏ.டி.எஸ்.பி. மயில்​வாகனன், 'ஏண்டா, நீங்க குண்டு வைப்பீங்க... அதை நாங்க விசாரிக்கக் கூடாதா?’னு கண்டபடி திட்டினார். அங்கே இருந்த போலீஸ்காரங்க என் வயித்தில் மிதிச்சு, அடிச்சாங்க. இந்த விஷயம் வெளியில் லீக் ஆனதுமே எங்க மக்கள் திரள ஆரம்பிச்சுட்டாங்க. அதனால், உடனே எங்களையும் பாபாவையும் விட்டுட்டாங்க. தங்களுக்குப் பிரச்னை வந்துரும்னு, நாங்க மாடசாமியை மிரட்டினதா பொய் கேஸ் போட்டிருக்காங்க. போலீஸ் அடிச்ச வேதனை தாங்க முடியலை. அதனால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிட்​டேன்'' என்கிறார் சேக் இப்​ராஹிம்.

ஏ.டி.எஸ்.பி. மயில் வாகனனோ, ''சந்தேகப்​படும் நபர்​களை விசாரிக்​கவே கூடாதுன்னு சொல்ல இவங்க யார்? மாடசாமியை ஒருமையில் பேசிருக்காங்க. பதிலுக்கு அவரும் கண்டிச்​சிருக்கார். அதுக்கு, வெடிகுண்டு வீசுவோம்னா மிரட்டுறது? செய்றதை எல்லாம் செஞ்சுட்டு, போலீஸ் அடிச்சதா நாடகம் போடுறாங்க'' என்றார்.

இந்த விவகாரத்துக்காக, ம.ம.க. தலைவர் ஜவாஹி​ருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் 14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதால், பிரச்னை சுலபத்​தில் முடியாது!      

- குள.சண்முகசுந்தரம்                                      

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism