Published:Updated:

நாடோடிகளுக்கும் வேண்டும் நலத் துறை!

நெல்லையைக் கலக்கிய யாத்திரை

நாடோடிகளுக்கும் வேண்டும் நலத் துறை!

நெல்லையைக் கலக்கிய யாத்திரை

Published:Updated:
##~##

பாம்பு, கீரி, அணில், முயல், எலி, ஆமை போன்ற பல்வேறு உயிரினங்களைக் கையில் ஏந்தியபடி வித்தியாசமாக யாத்திரை வந்த பழங்குடி நாடோடி மக்களைப் பார்த்து திகைத்து நின்றது நெல்லை! 

யார் இவர்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகப் பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பின் சார்பாக, சர்வதேச மனித உரிமைத் தினமான டிசம்பர் 10-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய யாத்திரைதான் அது. அடுத்து விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை வழியாகச் சென்று, 17-ம் தேதி சென்னையை அடைகிறது. நெல்லையில் மாவட்ட ஆட்சியர் செல்வராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்​தனர்.

அவர்களின் கோரிக்கை குறித்து பழங்குடி மக்கள் மேம்பாட்டு இயக்கத்தின் செயலாளரான மகேஸ்வரியிடம் கேட்டோம். ''ஆதி காலத்தில் மலைகளில் வசித்த எங்கள் சமூகத்து மக்களை, வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மலைகளில் இருந்து சமவெளிப் பகுதிக்கு விரட்டினர். அதனால் காடுகளில் நிம்மதியாக வாழ்ந்த மக்கள் வயிற்றுப்​பாட்டுக்காக நாடோடிகளாகத் திரியும் கொடுமைக்கு ஆளானார்கள். இங்கே கல்வி கற்பிப்பவர் முதல் கழிவறையைச் சுத்தம் செய்பவர் வரை, ஆளுக்கு ஒரு சாதி வைத்து சலுகைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் சொந்த மண்ணை இழந்த எங்களை மட்டும் அரசாங்கம் எந்தச் சாதியிலும் சேர்க்கவே இல்லை. நாடோடிகளான நாங்கள் குடுகுடுப்பை அடிப்பது, சாமி வேடம் போடுவது, பாம்பு பிடிப்பது, சாட்டையால் உடலில் அடித்துக் கொண்டு பணம் பெறுவது, பூம்பூம் மாட்டுக்காரராக வருவது, கழைக்​கூத்​தாடிகளாக இருப்பது, நரிக் குறவர்கள், குருவி பிடிப்பது என 40 வகையான தொழில்களைச் செய்து வயிற்றைக் கழுவுறோம்.

நாடோடிகளுக்கும் வேண்டும் நலத் துறை!

எங்களைப் பற்றிச் சிந்திக்கவோ எங்களுக்காகக் குரல் கொடுக்கவோ, எந்த அரசியல் கட்சியும் இதுவரை வரலை. எங்களுக்குக் கைப்பிடி அளவுக்குக்கூட சொந்த நிலம் கிடையாது என்பதால், போகிற இடங்களில் எல்லாம் கொட்டகை அமைத்துத்தான் குடி இருக்கிறோம். முகவரியே இல்லாமல் சுமார் எட்டு லட்சம் பேர் தமிழகம் முழுவதும் சுற்றுகிறோம்.

வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு கொடுக்கும் அரசாங்கம் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடு கட்டித் தரவேண்டும். அப்போதுதான் நாங்கள் நிலையாக ஒரே இடத்தில் தங்கி, குழந்தைகளுக்குக்

நாடோடிகளுக்கும் வேண்டும் நலத் துறை!

கல்வி கற்பிக்க முடியும். இப்போது எங்கள் பிள்ளைகளுக்குச் சாதிச் சான்று கிடைப்பதிலும் நிறைய சிரமங்கள். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வருவாய்த் துறையினர் எங்களைப் பற்றி விசாரித்துவிட்டு சாதிச் சான்றிதழ் தருகிறார்கள். ஆனால் நெல்லையில் அப்படிக் கொடுப்பது இல்லை. இந்த நிலைமையும் மாறவேண்டும்.

சில மாவட்டங்களில் எங்களைப் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலிலும் சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் பட்டி​யலிலும் ஒரு சில இடங்களில் மலைவாழ் மக்கள் என்றும் சான்று கொடுக்கிறார்கள். எங்கள் சமூகத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்கள்கூட யாரும் இல்லை என்பதுதான் இப்​போதைய நிலைமை. எங்களை பிற சமூகத்தினருடன் சேர்த்துவைத்தால் எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்? அதனால் எங்களைப் பழங்குடி நாடோடிகள் (நொமாடிக் டிரைப்ஸ்) எனத் தனியாக என்.டி என்ற பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு மாநில அரசாங்கம் பரிந்துரைசெய்ய வேண்டும்.

கடந்த 2005-ல் மத்திய அரசு, ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட பழங்குடி நாடோடிகள் ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நாடோடிகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால் தமிழக அதிகாரிகள் 'எங்கள் மாநிலத்தில் நாடோடிகள் யாருமே இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எங்களுக்கு எந்த நலனும் கிடைக்கவில்லை.

எங்களைத் தனிச் சாதியாக அங்கீகரித்து ஐந்து சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் நிலை என அனைத்திலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நாங்கள் கொஞ்சமாவது மீண்டுவர முடியும். இதனை வலியுறுத்தியே நாங்கள் ரத யாத்திரை மேற்​கொள்கிறோம். செல்லும் வழி நெடுகிலும் எங்கள் மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து மனுவும் கொடுக்கிறோம்.

வரும் 17-ம் தேதி எங்கள் யாத்திரை சென்னையைச் சென்றடையும். அப்போது முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு இருக்​கிறோம். அவரைச் சந்தித்து பேசினாலே எங்கள் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கால்நடைத் துறை, பால்வளத் துறை, ஜவுளித் துறை, மீன் வளத் துறை என பல்லேறு துறைகளை அமைத்து அந்தந்தத் தொழில்களில் ஈடுபடும் மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்து வரும் தமிழக அரசு, நாடோடிகளான எங்கள் மீதும் கருணை வைத்து தனியாகத் துறை அமைத்து எங்கள் சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும்' என்றார்.

நியாயமான கோரிக்கை!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism