Published:Updated:

சென்னையை கலக்கிய இரட்டைக் கொலை!

தூண்டிவிட்டது ஆளும் கட்சிக்காரரா?சென்னை மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

'தலைநகரிலேயே சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ என்று

##~##
ஏற்கெனவே எதிர்க் கட்சிகள் புழுதி கிளப்பிவரும் நிலையில்... கடந்த வியாழன் இரவு அந்தச் சம்பவம். எப்போதும் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் மயிலாப்பூரில், அடுத்தடுத்து இரண்டு பேரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்துவிட்டு, சாவகாசமாகத் தப்பித்திருக்கிறது ரவுடிக் கும்பல்!

 குடிசைக் குடியிருப்புகள் நிரம்பிய சென்னை மயிலாப்பூர் சிலேட்டர்புரம் (அம்பேத்கர் பாலம்) பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் பில்லா என்ற சுரேஷ், விஜி. மனைவி, குழந்தைகளுடன் சந்​தோஷத்​துடன் குடித்தனம் நடத்திவந்த இவர்களை பலர் முன்னிலையில், வெட்டிக் கொன்ற சகோதரர்களான நிர்மல் - சிவக்குமார், தமிழ் உள்ளிட்ட கும்பலைச் சேர்ந்தவர்களும் இதே பகுதியில் வசிப்பவர்கள்தான்.

சென்னையை கலக்கிய இரட்டைக் கொலை!

தெலுங்கு சினிமாக்களையும் மிஞ்சும் வகையில், நட்டநடு ஊருக்குள்ளேயே அரங்கேறிய இந்த ரத்த விளையாட்டைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை மயிலாப்பூரால். இரண்டு குழந்தைகளோடு குடிசை வீடு ஒன்றில் முடங்கிக்கிடந்த பில்லாவின் மனைவி லதாவை சந்தித்தோம்.

''15 வருஷங்களுக்கு முன்னாடி நடந்த ஒரு பிரச்னையில், சிவக்குமாரை முகத்தில் வெட்டிட்டார் எம் புருஷன். ஆனாலும், அதை எல்லாம் மனசில் வெச்சுக்காத மாதிரி ஒண்ணுமண்ணா எம் புருஷனோட பழகினவன் சமயம் பார்த்து இப்படி வஞ்சம் தீர்த்துட்டானே படுபாவி!

சென்னையை கலக்கிய இரட்டைக் கொலை!

நடு ராத்திரியில் வீட்டு ஆஸ்பெடாஸ் ஷீட்டை உடைச்சு, அவர் கழுத்தைப் புடிச்சுமேலே தூக்கிப் போட்டு வெட்டினாங்க. 'அவரைக் கொன்னுடாதீங்​க’ன்னு அவங்க காலைப் புடிச்சுக் கெஞ்சினேன். ஈவு இரக்கம் இல்லாமல் என் பச்சைப் புள்ளைங்க கண்ணு முன்னாடியே, அவரை வெட்டிக் கூறு போட்டதோட, 'உம் புருஷனை துப்பாக்கியால் சுட்டே கொன்னுருப்​பேன். ஆனா, அவன் உடனே செத்துடுவான். அவனை கொஞ்சம் கொஞ்சமா கொல்லணும்னுதான் இப்படிக் கத்தியால் வெட்டி சாகடிக்குறோம். இதையெல்லாம் நீ வெளியே போய் சொல்லணும்ல... அதனால்தான் உன்னைக் கொல்லாம விடுறோம்’னு சொல்லிச் சிரிச்சாங்க சிவக்குமாரும், அவன் தம்பி நிர்மலும். அதுக்கப்புறமா, 'விஜியையும் வெட்டிக் கொல்லணும்டா’ன்னு கத்திக்கிட்டே பக்கத்துத் தெருவுக்கு ஓடினாங்க. இவ்வளவு நடந்தும் ஒரு போலீஸ்கூட வந்து எங்களைக் காப்பாத்​தலையே....'' என்றவர் குழந்தைகளைக் கட்டிக்கொண்டு கதறினார்.

சிலேட்டர்புரம், காந்தி நகர் பகுதிகளில் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற, அசாத்திய அமைதி. தெரு முழுக்க காக்கித் தலைகள்... இருந்தும், அவ்வப்போது கிளம்பும் புரளிகளால் பதற்றத்தில் படபடத்துக்கொண்டே இருக்கிறது ஏரியா!

சென்னையை கலக்கிய இரட்டைக் கொலை!

கலவர பயத்துடனேயே பேசிய தெருவாசிகள் சிலர்,

''பில்லாவை வெட்டும்போது சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியது கும்பல். அப்புறமா சிவக்குமார் வீட்டு வாசலில் பீர் பாட்டிலை உடைச்சு தெருவெங்கும் பீய்ச்சி அடிச்சி வெடி வெடிச்சாங்க. அதே ஆவேசத்தோடு பக்கத்துத் தெரு விஜி வீட்டுக்கு ஓடினாங்க... தூங்கிக்கொண்டு இருந்த விஜி, தப்பிக்கிறதுக்கு வழி தெரியாம பாத்ரூமுக்குள் ஓடி பதுங்க... அங்கேயே அவரை அரைகுறையா வெட்டிச் சாய்ச்சுட்டு ஓடிட்டாங்க...'' என்று பயத்துடன் திக்கித் திணறி விவரித்தவர்கள்,

''சிவக்குமார் குடும்பத்தில் நிர்மல், நித்யா, ஜீவான்னு மொத்தம் நான்கு அண்ணன் தம்பிங்க. கந்துவட்டி, கட்டைப் பஞ்சாயத்து, கஞ்சா, சாராய விற்பனைதான் அவங்களோட முழுநேரத்தொழில். ஏற்கெனவே, குண்டாஸ்லேயும் ஜெயிலுக்குப் போயிருக்காங்க. லோக்கல்ல ஓடுற மீன்பாடி வண்டியில் ஆரம்பித்து ஆட்டோ, கார்னு எல்லோருமே அவங்களுக்கு மாமூல் கொடுத்தாகணும். சொந்த வீட்டை விக்கிறதா இருந்தாக்கூட, குறிப்பிட்ட தொகையை அவங்களுக்கு கமிஷனா கொடுத்தே ஆகணும். இது மட்டுமில்லை... வீடு புகுந்து பொண்ணுங்களைச் சீண்டுவதும், கல்யாணம் ஆன பெண்ணைக் கூட நிம்மதியாக இருக்க விடாமல் தொந்தரவு செய்வதும் நடந்தது...'' என்று பகீர் கிளப்பினார்கள்.

இன்னும் சிலரோ, ''போலீஸுக்கு மாமூல் கொடுத்துவிட்டு போலிமது, கஞ்சான்னு அத்தனை சரக்குகளையும் வித்துக்கிட்டு இருந்தாங்க.  லோக்கல் அரசியல்​வாதிங்ககிட்டேயும் அவங்களுக்கு ரொம்ப நெருக்கம். அதனால், யாருமே அவங்களைத் தட்டிக் கேட்க முடியாது. செத்துப் போன பில்லா, விஜி, கொலையாளிங்க எல்லோருமே ஒரே சாதிதான். ஆனாலும், ஏரியாவில் நடக்கும் கட்டைப் பஞ்சாயத்து, அடிதடி பிரச்னைகளில் 'யார் பெரிய ஆள்’ என்பதில், கொலையாளிகளுக்கும், இறந்து போனவர்களுக்கும் இடையே பெரிய போட்டியே நடந்தது. விஜிக்கும், கொலையாளி தமிழுக்கும் நீண்ட நாட்களாகவே சின்னச் சின்னத் தகராறு வந்து அடிதடி வெட்டுக் குத்தும் நடந்தது. அப்போது விஜிக்கு சப்போர்ட்டாக பில்லா இருந்தான். ஆனாலும், சிலேட்டர்புரம் பகுதியில் சிவக்குமார் கையே ஓங்கி இருந்ததால், இவ்வளவு காலமும் பில்லா இங்கே குடிவரவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று இரண்டு தரப்பும் ராசியாக... இந்த வருட ஆரம்பத்தில்தான் பில்லா இந்தப் பகுதிக்கே வந்தான். ஆனால், பில்லாவையும் விஜியையும் ஒரேயடியாகப் போட்டுத் தள்ளத்தான் சிவக்குமாரும், தமிழும் இப்படி உறவாடிக் கெடுத்திருக்கிறார்கள் என்ற விஷயமே இப்போதுதான் தெரிகிறது...'' என்கின்றனர் விலகாத அதிர்ச்சியுடன்.

சென்னையை கலக்கிய இரட்டைக் கொலை!

''பில்லா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும், விஜி காங்கிரஸிலும் வளர்ந்து வருவது பிடிக்காமல், லோக்கலில் உள்ள ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவரது தூண்டுதலில்தான் இந்தக் கொலைகளே நடந்துள்ளன. ஆனாலும், இதில் முக்கியமாக குறி வைக்கப்பட்ட பில்லாவின் உறவினர் ஒருவர் மட்டும் தப்பிவிட்டார்...'' என்று அதிர்ச்சிக் கொலைகளுக்கு அரசியல் முடிச்சும் போடுகிறார்கள்.

''ஏற்கெனவே, என் வீட்டுக்காரர் கை விரல்களை சிவக்குமார் வெட்டி எறிஞ்சுட்டான். அப்பவே இந்த ஊரைவிட்டு போயிடலாம்னு சொன்னேனே.... இப்ப மூணு பொட்டைப் புள்ளைங்களோட என்னைத் தவிக்கவிட்டுட்டு போயிட்டாரே.... இதுங்களை எப்படி வளர்த்து கரையேத்தப் போறேன்?'' என்று கண்ணீரும் கம்பலையுமாக சுருண்டு கிடந்தார் விஜியின் மனைவி மஞ்சுளா.

இதற்கிடையில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளான தமிழ், சிவக்குமார் உள்ளிட்ட

சென்னையை கலக்கிய இரட்டைக் கொலை!

ஐந்துபேர் கடந்த ஞாயிறன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டனர்.

மயிலை அம்பேத்கர் பாலம் பகுதியில், பாதுகாப்புப் பணியில் நின்றுகொண்டு இருந்த உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ், துணை கமிஷனர் பெரியய்யாவிடம் பேசினோம்.

''சம்பவம் நடந்த இரவு முகரம் பண்டிகை காவல் பணியில் இருந்தோம். ஆனாலும், தகவல் கிடைத்தவுடன் விரைவாக செயல்பட்டு சம்பவ இடத்திலேயே ஆறு பேரைக் கைது செய்தோம். உயிருக்குப் போராடிய விஜியையும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனாலும், மறுநாள் காலை மருத்துவமனையிலேயே விஜி இறந்துவிட்டார். விசாரணையின் அடிப்படையில், மேலும் மூன்று பேரை இப்போது கைது செய்திருக்கிறோம். சரணடைந்து இருப்பவர்களிடம் விசாரணை செய்ததும்தான் மற்ற விவரங்கள் தெரியவரும்!'' என்றனர்.

'கடந்த ஆண்டு க்ரைம் ரிப்போர்ட்டில் எகிறிப்போன கொலை எண்ணிக்கையை நடப்பு ஆண்டில் நிச்சயம் கட்டுப்படுத்துவோம்’ என்று ஆண்டின் தொடக்கத்திலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டது சென்னைக் காவல் துறை! ஆனாலும், மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே, தமிழக சட்டசபையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே, அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரட்டைக் கொலைகளை அரங்கேற்றிவிட்டுத் தப்பி ஓடும் துணிச்சலைக் கொலையாளிகளுக்குத் தந்தது யார்?

சென்னை போலீஸைப் பார்த்தால் ரவுடிகளுக்கு பயம் வரவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது!

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு