Published:Updated:

கரும்பு விவசாயிகளைக் கசக்கும் ஆலை!

கரும்பு விவசாயிகளைக் கசக்கும் ஆலை!

கரும்பு விவசாயிகளைக் கசக்கும் ஆலை!

கரும்பு விவசாயிகளைக் கசக்கும் ஆலை!

Published:Updated:
##~##
கரும்பு விவசாயிகளைக் கசக்கும் ஆலை!

'விளைஞ்ச கரும்பை வெட்ட முடியா​மல், இரண்டு சர்க்கரை ஆலை​களின் எல்லைப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறோம்’ என்று புலம்புகிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த ஊரில் சர்க்கரை ஆலை ஆரம்பித்தாலும், அதைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் விளை​விக்கும் கரும்பை அந்த ஆலைக்குத்தான் தர வேண்​டும். எந்தெந்த ஊர்களில் இருந்து அந்த ஆலைக்குக் கரும்பு வருகிறதோ, அவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலைக்கான எல்லையாக அரசு நிர்ணயித்து இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் காட்டாத்தி, களியராயன் விடுதி, கந்தர்வக்கோட்டை பகுதியைச் சுற்றி இருக்கும் கிராமங்களை குருங்குளம் சர்க்கரை ஆலைக்கான எல்லைப் பகுதியாக அறிவித்திருக்கிறது அரசு. அதன்படி குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்பை அனுப்பினர் விவசாயிகள். ஆனால்,

கரும்பு விவசாயிகளைக் கசக்கும் ஆலை!

குருங்குளம் சர்க்கரை ஆலையின் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு திருப்தி அளிக்காததால், புதுக் கோட்டை மாவட்டம் குரும்பூரில் இயங்கி வரும் தனியார் ஆலையான ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்குக் கரும்பைக் கொடுக்க ஆரம்பித்தனர். அதுதான் இப்போது பிரச்னையாக வெடித் திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் காட்டாத்தி கிரா மத்துக்குச் சென்றோம். நம்மிடம் பேசிய ராமசாமி என்ற விவசாயி, ''ஏழு வருஷத்துக்கு முன்னாடி வரை குருங்குளம் ஆலைக்குத்தான் கரும்பு அனுப்பினோம். ஆனா, அவங்களோட அணுகுமுறை சரியில்லை. 11-வது மாசமே கரும்பு வெட்டுறதுக்கு கட்டிங் ஆர்டர் தரணும். ஆனா, குருங்குளம் ஆலையில் 15 மாசத்​துக்கு இடையில் கட்டிங் ஆர்டர் தர மாட்​டாங்க. அப்பக்கூட கரும்பு அலுவலருக்கு கமிஷன் கொடுத்தாத்தான், ஆர்டர் தருவாங்க. கரும்பு ஆலையில் இருந்துதான் கரும்பு வெட்ட ஆள் வரணும்.

கரும்பு விவசாயிகளைக் கசக்கும் ஆலை!

ஆனா, ஆட்களே தர மாட்டாங்க. கேட்டா, நீங்களே ஆட்களை ஏற்பாடு செஞ்சுக்கோங்கன்னு சொல்வாங்க. அந்த ஆலையோட அரைவைத் திறன் ஒரு நாளைக்கு இரண்டரை டன் மட்டும்தான். அதனால், அதைத் தாண்டிக் கொண்டுபோற கரும்பை நாள்கணக்குல லாரியோட நிப்பாட்டி வெச்சிருவாங்க. இதை எல்லாம் கேட்டா, 'எங்களுக்குத் தேவையான கரும்பை நாங்க எங்க ஆலைக்குப் பக்கத்திலேயே வாங்கிக்கிறோம். நீங்க இனிமே கரும்புப் பயிரிட வேணாம்’னு எடுத்தெறிஞ்சு பேசிட்டாங்க'' என்று நிறுத்தினார்.

தொடர்ந்த அண்ணாதுரை என்பவர், ''இது நடந்தது 2006-ம் வருஷம். அதுக்குப் பிறகுதான் அறந்தாங்கியில் இருக்கும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து, எங்க கரும்பை வெட்டி எடுத்துக்கிட்டுப் போனாங்க. அப்பல்லாம் பிரச்னை செய்யாத குருங்குளம் சர்க்கரை ஆலை, இப்ப விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கு. அதில், 'நீங்கள் குருங்குளம் சர்க்கரை ஆலைக்குத்தான் கரும்பைத் தரணும். மீறி வேறு ஆலைக்குக் கரும்பு கொடுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’னு சொல்லி இருக்காங்க. கடந்த ஏழு வருஷமா எங்களைப்பத்தி நெனைச்சுக்கூட பார்க்காம இருந்த குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு, இப்ப கரும்பு சரியா வர்றது இல்லை. அதனாலதான் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கு'' என்றார்.

அடுத்துப்பேசிய முருகேசன் என்பவர், ''விளைஞ்ச கரும்பை நாங்க வெட்ட ஆரம்பிச்சப்ப, குருங்குளம் சர்க்கரை ஆலையைச் சேர்ந்தவங்க தடுத்து நிறுத் திட்டாங்க. நாங்க கரும்பு பயிரிட்ட காலம் தொடங்கி அதுக்கு வர்ற நோய், அதுக்கான தீர்வு, எப்ப கரும்பை அறுவடை செய்யணும்னு பாரி ஆலையைச் சேர்ந்த களப் பணியாளர்கள் வந்து சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அங்கே கரும்பு கொண்டுபோற லாரிக்கான வாட கையை அவங்களே தந்துருவாங்க. கரும்புக்கான பணத்தையும் அறுவடை செஞ்ச 15 நாட்களுக்குள் தருவாங்க. தேவைப்பட்டா முன்பணம்கூட தர்றாங்க. இவ்வளவு வசதியான பாரி சர்க்கரை ஆலைக்குத்​தான் கரும்பைத் தருவோம்னு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கோம்'' என்றார்.

இதுகுறித்து குருங் குளம் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் ஆலிவரிடம் பேசினோம். ''நாங்கள் விவசாயிகளை மையப்படுத்தித்தான் செயல்படுகிறோம். இந்த வறண்ட பகுதியை மாற்றியதே எங்கள் ஆலைதான். எங்கள் ஆலைக்கு உட்பட்ட பகுதிக்குள் கொள்முதல் செய்வது தவறு என்பதை, அப்போது இருந்த அதிகாரிகளே பாரி ஆலை நிர்வாகத்துக்கு எழுதி இருக் கிறார்கள். சர்க்கரை விலை கூடுத​லாக இருக்கிறது என்பதற்காகவே, அவர் கள் எங்கள் எல்லைப் பகுதிக்குள் வரு கிறார்கள்.

எங்கள் ஆலையில் 2006-ல் குறைகள் இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போது எந்தக் குறையும் இல்லாதவாறு ஆலையை நிர்வகிக்கிறோம். அந்த ஆலையைச் சேர்ந்தவர்கள் இதுவரை 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் அத்துமீறி வந்திருக்கிறார்கள். நாளையே சர்க்கரை விலை குறைந்து போனால், அவர்கள் போய்விடுவார்கள். ஆனால் நாங்கள் போக மாட்டோம்'' என்றார்.

ஈ.ஐ.டி. பாரி நிர்வாகத் தரப்பில் பேசினால். ''நாங்கள் அந்த விவசாயிகளைத் தேடிப் போகவில்லை. அவர்கள்தான் எங்களைத் தேடி வந்து கரும்பு தருவதாக சொன்னார்கள். அதனால்தான் நாங்கள் வாங்குகிறோம்'' என்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோ கரனிடம் பேசினோம். ''இரண்டு ஆலை நிர்வாகிகளும் கலந்து பேசி ஒரு முடிவெடுக்கச் சொல்லி இருக்கிறேன். விரைவிலேயே நல்ல முடிவு கிடைக்கும்'' என்றார்.

ஏழு வருஷமா என்னதான் செய்தார்களோ?

- வீ.மாணிக்கவாசகம்