Published:Updated:

ஜப்திக்கு பாரதியார் பல்கலைக்கழகம்?

கோவை ஷாக்!

ஜப்திக்கு பாரதியார் பல்கலைக்கழகம்?

கோவை ஷாக்!

Published:Updated:
##~##
ஜப்திக்கு பாரதியார் பல்கலைக்கழகம்?

கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை​யை விவசாயிகளுக்கு வழங்​காததால், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 11 பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பல்கலைக்​கழகத்தில் இருந்து ஒரு பஸ்ஸை போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி​செய்து நீதிமன்றத்துக்கு விவசாயி​கள் எடுத்துவர, கோவையே அதிர்ந்து போனது. 'விரைவில் பல்கலைக் கழ கமும் ஜப்தியாகக்கூடும்’ என்று கூடுதல் அதிர்ச்சியைக் கொடுக்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு கட்டடங்கள் கட்டுவதற்காக,  வடவள்ளி, சோமையம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 400 விவசாயிகளிடம் இருந்து சுமார் 900 ஏக்கர் விளைநிலங்கள் 1982-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டன. எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மிகக்குறைவான இழப்பீடு வழங்கியதால், உரிய தொகை வழங்கக் கோரி நீதிமன்றத்துக்குச் சென்றனர் விவசாயிகள். கோவை சார்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக 20 வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், 'ஒரு சென்ட்டுக்கு 2,300 முதல் 3,300 ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் 12 சதவிகிதம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை, 30 சதவிகிதம் கருணைத் தொகை, ஆண்டுக்கு 15 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

ஜப்திக்கு பாரதியார் பல்கலைக்கழகம்?

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், விவசாயிகள் மாரியப்பன், முருகேஷ் ஆகியோர் கோவை இரண்டாவது சார்பு நீதிமன்றத்தில், 'நீதிமன்றம் உத்தர​விட்டும் இன்னும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை’ என மனுத்தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்துதான் பல்கலைக்​கழகத்துக்கு சொந்தமான வாகனங்களை ஜப்திசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வழக்கறிஞர் விஜயகுமாரி​டம் பேசினோம். ''நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டோம். ஆனால், அப்போது பல்கலைக்கழக நிர்வாகம் ஜப்தி நடவடிக்கைக்கு ஒத்து ழைப்பு கொடுக்கவில்லை. அதனால்தான் நாங்கள் காவல்துறை உதவியோடு பஸ்ஸை ஜப்தி செய்தோம்'' என்றார்.

ஜப்திக்கு பாரதியார் பல்கலைக்கழகம்?

பல்கலைக்கழகத்துக்காக நிலம் இழந்தோர் சங்கத் தலை​வர் சிவஞானசுந்தரத்திடம் பேசினோம். ''கடந்த 35 ஆண்டுகளாக இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் பல் கலைக்கழகம் இழுத்தடித்து வருகிறது. நாங்களும் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினோம். எதற்குமே

ஜப்திக்கு பாரதியார் பல்கலைக்கழகம்?

பல்கலைக்கழகம் அசைந்து கொடுக்கவில்லை. இப்போதும், பல்கலைக்கழகத்தின் பணிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, எச்​சரிக்கை செய்யும்​ விதமாக ஒரு பஸ்ஸை மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி செய்து இருக்கிறோம். 11 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவு உள்ளது என் றாலும் நாங்கள் அதைச் செய்ய​வில்லை. கடந்த அக்டோபர் வரை விவசாயிகளுக்குத் தரவேண்டிய பாக்கித்தொகை மட்டுமே 208 கோடி ரூபாய். இனியும் இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்தால், பல்கலைக்கழகத்தை ஜப்தி செய்ய அனுமதி வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை!'' என்கிறார்.

அடுத்துப் பேசிய நிலம் இழந்தோர் சங்கச் செயலாளர் கணேசன், ''1982-ம் ஆண்டு ஒரு சென்ட் நிலத்தை 33.90 ரூபாய் மட்டுமே கொடுத்து கையகப்படுத்தினர். நீதிமன்றத்தை நாடியதன் விளைவாக சென்ட் ஒன்றுக்கு 2,300 முதல் 3,300 ரூபாய் வரை நிலத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இப்போது, நிலம் இழந்த விவசாயிகளில் பெரும்பாலோர் இறந்து விட்டனர். வாரிசுகளிலும் பலர் இறந்து​ விட்டனர். ஆனால், இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. 208 கோடி ரூபாயை பாரதியார் பல்கலைக்கழகத்தால் கொடுக்க முடிய​வில்லை என்றால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்குக் கிடைக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

இதற்கிடையில், ஜப்தி நடவடிக்கையைத் தொடர்ந்து விவசாயிகளைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகி​கள் சிலர் மிரட்டுவதாகவும் விவசாயிகள் தரப்பில் சொல்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசியவர்கள், ''நிலம் இழந்தவர்களில் சிலரது வாரிசுகளுக்குப் பல்கலைக்கழகத்தில் வேலை வழங்கப்​பட்டது. தற்காலிக அடிப்படையில் சுமார் 60 பேர் அங்கு பணியாற்றி வருகின்றனர். பஸ் ஜப்தி செய்யப்​பட்டதைத் தொடர்ந்து அங்கே பணிபுரியும் ஊழியர்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டியுள்ளது. இழப்பீடு வேண்டும் என்று இனியும் போராடிக்கொண்டு இருந்தால், வேலையை விட்டுப் போகவேண்டி இருக்கும் என்று மிரட்டியுள்ளனர். வேலையும் கொடுத்து இழப்பீடும் கொடுக்க முடியாது. பஸ்ஸை ஜப்தி செய்தவர்களிடம் சமா தானம் பேசுங்கள் என்று ஊழியர்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்'' என்று விவசாயிகள் வருத்தப்​பட்டனர்.

இழப்பீடு வழங்குவதில் தாமதம், பல்கலைக்கழக பஸ் ஜப்தி, விவசாயிகளுக்கு மிரட்டல் தொடர்பாக பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சையிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னை தொடர்பாக தொடர்ந்து அரசுக்கு எங்கள் நிலைமையைத் தெரிவித்து வருகிறோம். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பான பணிகள் கடந்த மூன்று மாதங்களாக வேகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் எந்தச் சிக்கலும் இன்றி பிரச்னை தீர்க்கப்படும். மேற்கொண்டு ஜப்தி நடவடிக்கை தொடராது என நம்புகிறோம். நீதிமன்ற நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தற்காலிகப் பணியாளர்களை நாங்கள் மிரட்டவில்லை. அவர்கள் தொடர்ந்து பணிக்கு வருகின்றனர். இப்போது நாங்கள் விவசாயிகளுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது. அதை உணர்ந்து அமைதி காத்தால் நல்லது நடக் கும்'' என்றார்.

- ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்