Published:Updated:

யார் இந்த 'போலீஸ்' சேட்?

விருதுநகர் திடுக்

யார் இந்த 'போலீஸ்' சேட்?

விருதுநகர் திடுக்

Published:Updated:
##~##
யார் இந்த 'போலீஸ்' சேட்?

'டிரான்ஸ்ஃபர், நில அப​கரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று எந்தப் பிரச்னை என் றாலும் முடித்துக்​கொடுக்கிறார். காவல் துறையில் தனி ராஜாங்​கமே நடத்​துகிறார். அந்த மனிதரைக் கண்​காணியுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்​லுக்குப் (044-​6680​8002) புகார் வந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாரித்தோம். அவர், சிவ காசியில் பேப்பர் கப் தொழில் நடத்தி வரும் ஆனந்த் சிங்வி. காக்கி உடை அணியாமலேயே போலீஸ் செய்யும் அத்தனை பணிகளும் செய்கிறார். அவரை 'போலீஸ் சேட்’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.

''ராஜஸ்தானில் இருந்து 30 ஆண்டு​களுக்கு முன், ஆனந்த் சிங்வியின் குடும்​பம் சிவகாசிக்குக் குடியேறியது. இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளும் அத்துப்படி. சிவகாசியில் உதவி எஸ்.பி-யாகப் பதவியேற்கும் வட மாநில அதிகாரிகளைச் சந்தித்து, 'நான் உங்க பிரதர் மாதிரி. எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்க’ என்று இந்தியில் சரளமாக உரையாடுவார். மொழிப் பிரச்னையால் திணறிக்கொண்டு இருக்கும் வடமாநில அதிகாரிகள், இவரது

யார் இந்த 'போலீஸ்' சேட்?

பேச்சில் அசந்து போவார்கள். பிறகு, அந்த அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்​களது தேவை களைக் குறிப்பால் உணர்ந்து, அனைத்தும் செய்து கொடுப்பார் சிங்வி. அதனால், 'போலீஸ் அதிகாரிக்கு வேண்டியவர்’ என்று சொல்லி, கீழ்மட்ட அதிகா ரிகளும் அவருக்கு சலாம் போடுவார்கள். அதைவைத்து வேண்டிய காரியங்​கள் எல்லாம் செய்து கொள்வார்.

குற்றாலம், கொடைக்கானலில் இருக்கும் இவருடைய பங்களாவில்தான், வடமாநில அதி காரிகளுக்கு வழக்கமாக விருந்து நடக்கும். வாரம்தோறும் விருந்து, வைபோகங்கள் உண்டு. அதிகாரிகளை மட்டுமின்றி அவர்​களின் மனைவி, குழந்தைகளின் பிறந்த நாட்களைத் தெரிந்து​கொண்டு, பிறந்த நாள் விருந்​துக்கு ஏற்பாடு செய்வார். விழா​வில், தங்கப் பரிசுகளைக் கொடுத்து அசத்துவார். இங்கு வரும் அதிகாரிகள் மூலம் மற்ற வடமாநில ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் நட்பும் கிடைக்க... சிங்வியின் எல்லை சிவகாசியைத் தாண்டி பல திசைகளிலும் விரிந்துள்ளது'' என்று சொன்னவர்கள், அவர் தலையிட்ட சில விவகாரங்கள் பற்றியும் சொன்னார்கள்.

''சிவகாசியைச் சேர்ந்த ஒரு தனியார் இன்ஜினீ​யரிங் கல்லூரியில் அண்ணன், தம்பி இருவரும் தாளாளர்கள். மதுரையைக் கலக்கிய போலீஸ் அதிகாரி ஒரு மாதம் விருதுநகர் மாவட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தார். அப்போது, கல்லூரித் தாளாளர்கள் மீது நிலமோசடி வழக்குப் பதிவு​செய்யப்பட, இருவரும் தலைமறைவானார்கள். மதுரை அதிகாரியின் கூடுதல் பொறுப்பு முடிந்த பிறகு, மீண்டும் வடமாநில அதிகாரி விருதுநகருக்கு வந்தார். தாளாளர்களைச் சந்தித்துப்பேசிய சிங்வி, 'நில மோசடி வழக்கு மீது மேற்கொண்டு நடவ​டிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார். அந்த அதிகாரி மூலம் பிரச்னையை சுமுகமாக முடித்துக்கொண்டார்.

யார் இந்த 'போலீஸ்' சேட்?

சமீபத்தில், சிவகாசியில் சிறுகுளம் கண்​மாயைச் சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலை நடந்தது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக போலீஸாரைச் செயல்பட வைத்தது, சிவகாசி சேட்டு சிங்விதானாம். இதற்காக அந்தத் தரப்பினரிடம் இருந்து கணிசமான கவனிப்பும் இருந்ததாம். சமீபத்தில் தென் மாவட்ட எஸ்.பி-க்களில் ஒருவர் ஹெல்மெட் பிசினஸ் காரணமாக டிரான்ஸ்ஃபர் ஆனார். ஹெல்மெட் டீலர்களை அந்த எஸ்.பி-யிடம் கொண்டுபோய் பிசினஸ் பேச வைத்தது சிங்விதான். இதைவிடக் கொடுமை... அந்த அதிகாரியை வேறு மாவட்டத்தில் போடுவதாகத்தான் திட்டமாம். சிங்வியின் வடமாநில லாபியால், தலைநகரத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் மூத்த வடமாநில அதிகாரி, 'அவர் சென்னைக்கு வேண்டும்’ என்று கேட்டு வாங்கினாராம். சமீபத்தில் சென்னைக்கு மாற்றலாகிச் சென்ற தென் மண்டல உயர் அதிகாரி முதல் 30 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிங்வியிடம் மிகநெருக்கமாக இருக்கின்றனர். சிங்விவின் தாஜா செல்லுபடி ஆகாத ஒரு இடம் மதுரையை கலக்கிய எஸ்.பி-யிடம்தான். வழக்கம்போல் அவரையும் சந்தித்தார் சிங்வி. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு சிங்வியின் தொடர்பைத் துண்டித்தார்'' என்கின்றனர் விவரம் அறிந்த போலீஸார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஆனந்த் சிங்வியைச் சந்தித்தோம். போட்டோ வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய அவர், ''சிவகாசியில் வடமாநிலத்தைச் சேர்ந்த​வர்களுக்கு என்று ஒரு சங்கம் நடத்தி வருகிறோம். அதன் மூலம் ஏழைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் பல உதவிகள் செய்து வருகிறேன். அதற்காக கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து இருக்கிறேன். வடமாநிலத்தைச் சேர்ந்த யாருக்காவது பிரச்னை என்றால், அது தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்து சட்டத்துக்கு உட்பட்ட உதவிகளைப் பெறுவோம். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் சிலர் வேண்டும்என்றே குற்றம் சுமத்துகின்றனர். நில ஆக்கிரமிப்பு, கண்மாய் விவகாரங்களில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது'' என்றார் நிதானமாக.

நெருப்பு இல்லாமல் புகையுமா?

- எம்.கார்த்தி

படம்: ஆர்.எம்.முத்துராஜ்