Published:Updated:

கண்ணாமூச்சி ரே... ரே..!

புதுவை உள்ளாட்சி உய்யலாலா

கண்ணாமூச்சி ரே... ரே..!

புதுவை உள்ளாட்சி உய்யலாலா

Published:Updated:
##~##
கண்ணாமூச்சி ரே... ரே..!

ள்ளாட்சித் தேர்தல் கண்ணாமூச்சி விளையாட்டால், புதுச்சேரி வாக் காளர்கள் தலை கிறுகிறுத்துப் போயுள்ளனர்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் காலம் தாழ்த்திக்கொண்டே வர, உயர் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்தத் தீர்ப்பு பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 'தொகு திகளை மறுசீரமைப்புச் செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது’ என்று என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த ஆனந்தலட்சுமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, '2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பெற இரண்டு மாதங்​களும், தொகுதி மறுசீரமைப்பு செய்த பிறகு, தேர்தல் நடத்துவதற்கு மூன்று மாதங்களும் என மொத்தம் ஐந்து மாதங்கள் புதுச்சேரி அரசுக்குக் கால அவகாசம் கொடுத்து தீர்ப்பு அளித்தது நீதி மன்றம்.

''தீர்ப்பை மேலோட்டமாகப் பார்த்தால், இதனுள் இருக்கும் நுணுக்கமான விஷயங்கள் தெரியாது. இந்தத் தீர்ப்பைக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை காலவரையறை இன்றி நடத்தாமலே இருக்கலாம். காரணம்,

கண்ணாமூச்சி ரே... ரே..!

தொகுதி மறுசீரமைப்புக்கு நீதிமன்றம் எந்த ஒரு காலக் கெடுவையும் விதிக்கவில்லை'' என்று கொதித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உச்ச நீதிமன்றத்​துக்குச் சென்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தொகுதி மறுசீரமைப்புக்கு இரண்டு மாத காலக்கெடு விதித்துள்ளனர். இந்தத் தீர்ப்பின்படி ஏழு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டிய சூழ்நிலைக்கு புதுச்சேரி அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.

பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்:

''காங்கிரஸ் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியில்தான் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், என்.ஆர்.காங்கிரஸின் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சியைப்போல மாற்றங்களே இல்லாமல் இருக்கிறது.

கண்ணாமூச்சி ரே... ரே..!

எத்தனைக் காலம் தேர்தலைத் தள்ளிப்போட்டாலும் அதிருப்திகளை ஏற்படுத்திய ஆட்சி யாளர்களுக்கு மக்கள் தக்க நேரத்தில் நிச்சயம் பதிலடி கொடுப்​பார்கள்.''    

அன்பழகன், அ.தி.மு.க. மாநிலச் செயலாளர்:

''உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை வாங்கியதன் மூலம் அரசியல் ஜன நாயகத்தை ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டி புதைத்து விட்டார் ரங்கசாமி. தொகுதி மறுசீரமைப்பு செய்து மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. இத்தனை குறுகிய காலத்துக்குள் தொகுதி மறுசீரமைப்பு என்பது சாத்தியம் இல்லாத விஷயம். இன்னும் ஒரு வருடம் வரை புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை. என்.ஆர். காங்கிரஸ் சந்திக்கும் கடைசித் தேர்தல் அனேகமாக உள்ளாட்சித் தேர்த​லாகத்தான் இருக்கும். ரங்கசாமியின் சர்வாதிகாரப் போக்கைத் தாக்குப்பிடிக்க முடியாமல், ஐந்து எம்.எல்.ஏ-க்கள் கட்சியில் இருந்து வெளியேறும் சூழல் நிலவுகிறது. கூடிய விரைவில் ஆட்சி கலை​வதோடு  மக்களின் அதிருப்தி காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கரைந்து​ போகும்.''  

எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன், தி.மு.க. மாநில அமைப்பாளர்:

''காந்திஜியின் கனவுத் திட்டமான பஞ்சாயத்து​ராஜ் திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த என்.ஆர். விரும்பவில்லை. அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்க அவருக்குத் துளியும் விருப்பம் இல்லை. அவருடைய ஆட்சியில் அமைச்சர்களுக்கே போதிய அதிகாரம் இல்லாதபோது, உள்ளாட்சிப் பிரநிதிகளுக்கு மட்டும் அதிகாரங்களை வாரி வழங்கி விடுவாரா என்ன? ரங்கசாமியின் ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களுக்குத் தேவையான எந்த ஓர் அடிப்படை விஷயத்தையும் என்.ஆர். செய்ய வில்லை. என்.ஆரின் நிர்வாகச் சீர்கேட்டால், திட்டங்கள் அனைத்தும் துண்டுத் துண்டாக நிற்கிறது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியும் சரி, இப்போதைய என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியும் சரி, இரண்டுமே மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதித்து இருக்கிறது.''

வெ.வைத்தியலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்:

''சரியாகத் திட்டம் போட்டு உள்ளாட்சித் தேர்​தலுக்குத் தடை வாங்கி விட்டார் ரங்கசாமி. கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல், திடீரென்று அவர்களிடம் ஓட்டு கேட்டுச் சென்றால் என்ன நடக்கும்? அதற்குப் பயந்துதான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையும் பெற்றார். என்.ஆரின் சர்வாதிகாரக் குணத்தால்தான் காங்கிரஸ் கட்சியைவிட்டு அவரை வெளியேற்றினோம். என்ன காரணங்களுக்காக காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டாரோ, இப் போதும் அதே நிலைதான் என்.ஆர்.காங்கிரஸில் நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடர உள்ளோம்.''

வி.பாலன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர்:

''தேர்தல் நடத்துவதற்கான 270 கோடியை மத்திய அரசு எங்களுக்குத் தர வேண்டும். கடந்த 2006-ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் நிதி தருகிறோம் என்று கூறியதால், தேர்தல் நடந்தது. ஆனால், ஒரு பைசாகூட நிதி கொடுக்கவில்லை. மத்தியில் இருந்து நிதி கொடுக்காததால் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு எங்களால் அப்போது நிதி ஒதுக்க முடியவில்லை. உழவர்கரை தொகுதியில் 105 சதவிகிதம் வாக்காளர்கள் பெருகி உள்ளனர். அதனால்தான் தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். நிதியே இல்லாமல் எவ்வாறு தேர்தல் நடத்துவது? இந்தச் சூழ்நிலையை மற்றக் கட்சிகளும் பயன்படுத்திக்கொண்டு என்.ஆரைக் குறை கூறி வருகின்றனர்.''

புதுவை அரசியல் எப்போதுமே தலை சுத்தும். இப்போ ரொம்ப!  

- நா.இள அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்