Published:Updated:

தண்ணீர்... தண்ணீர்!

கண்ணீர் சேலம்

தண்ணீர்... தண்ணீர்!

கண்ணீர் சேலம்

Published:Updated:
##~##
தண்ணீர்... தண்ணீர்!

மீண்டும் ஓர் உலகப்போர் வரும் என்றால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுவதை நிஜம் என்று நிரூபிக்கிறது, மேட்டூர் நிலவரம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததாலும், வானம் பொய்த்துப்போனதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. கூடிய சீக்கிரமே அணை மூடப்படும் நிலை. அதனால், குடிநீருக்காக மேட்டூர் அணையை மட்டுமே நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக் களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையிலும், சில தொழிற்சாலைகள் மோட்டார் வைத்து மேட்டூர் தண்ணீரை உறிஞ்சுவதுதான் வேதனையின் உச்சம்.

'சேலமே குரல் கொடு’ அமைப்பின் தலைவரான பியூஸ் மானஸ், ''தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீரை சேகரிக்கத் தவறியதும், மக்கள் மத்தியில் இயற்கை சார்ந்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தாததும்தான் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம். இதனால், அடுத்த மாநிலத்திடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்களின் அத்தியாவசியத் தேவை​யான குடிநீருக்கும், அடுத்து விவசாயத்துக்கும் கொடுத்தது போகத்தான், தொழிற்சாலைகளுக்குக் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால், சேலம் மக்களின் குடிநீருக்காக அணையின் உள்ளே இருக்கும் சேலம் மாநகராட்சி பம்பிங் ஹவு ஸில் தண்ணீர் எட்ட முடியாத அளவுக்குப் போய்விட்டது. அத னால், மிதவை மோட்டாரை வைத்து தொட்டியில் தண்ணீர் இறைத்து பம்ப் செய்யப்படுகிறது. ஆனால், மேட்டூரில் உள்ள சில கெமிக்கல் தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி மிதவை மோட்டார்களை வைத்துக்கொண்டு தினமும் பல கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றன. சேலம் மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கர்நாடகா தண்ணீர் விடாத காரணத்தால் தஞ்சை நெற்களஞ்சியமே அழிந்ததுபோல், மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளால் சேலம் மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கிறார்கள்'' என்றார் வேதனையோடு.

தண்ணீர்... தண்ணீர்!
தண்ணீர்... தண்ணீர்!

மேட்டூர் தொகுதியின் தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான பார்த்திபன், ''இப்போது மேட்டூர் அணையில் 30 அடி தண்ணீர்தான் இருக்கிறது. இதில் 20 அடிக்கு சேறுதான் படிந்திருக்கும். சேற்றைத் தூர்வாரச் சொல்லி சட்டமன்றத்தில் பலமுறை பேசிவிட்டேன். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது, குடிநீருக்கே பற்றாக்குறை. ஆனால், இந்த நேரத்தில் தொழிற்சாலைகளின் தேவைக்காக தினமும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதற்கு எப்படி அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. இதைப்பற்றி பேசினால் அரசு பொய் வழக்கு போடுகிறதே தவிர, நடவடிக்கை எடுப்பது இல்லை. அதனால் செயல்படாத தமிழக அரசைக் கண்டித்து கூடிய சீக்கிரமே மேட்டூரில் மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம்'' என்று கொந்தளித்தார்.

தண்ணீர்... தண்ணீர்!

தொழிற்சாலைகள் தரப்பில் பேசிய மேட்டூர் கெம்பிளாஸ்ட் கெமிக்கல் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வெங்கடேஷ், ''தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காகத்தான் நாங்கள் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கிறோம். மற்றபடி தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக நாங்கள் அணையின் தண்ணீரைப் பயன்படுத்துவது இல்லை'' என்கிறார்.

தமிழகப் பொதுப்​பணித்துறை அமைச்சர் கே.வி. ராம​லிங்கத்திடம் பேசியபோது, ''மக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு 10 நாட்களுக்கு முன்னரே, மேட்டூரில் உள்ள எந்தத் தொழிற்சாலைகளும் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்லி​விட்டோம். இப்போது யாரும் தண்ணீர் எடுப்பது இல்லை. கோடைக்காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் இருக்கும் என் பதால், மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீரைச் சேமித்து வைத்திருக்கிறோம். சேலம் மக்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொள்வோம்'' என்றார்.

கோடைக்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படுவது இருக்கட்டும். இப்போது வந்திருக்கும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பனிடம் கேட்டோம். ''சேலம் மக்களின் குடிநீர்த் தேவைக்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். மக்கள் யாரும் கவலைப்படவே வேண்டாம். அம்மாவின் பொற்கால ஆட்சியில் கண்டிப்பாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது. மக்களின் குடிநீர்த் தேவையை நிச்சயம் தீர்த்து வைப்போம்'' என்கிறார்.

அதுதான் எப்படி?

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்