Published:Updated:

''சாதிக்கு ஒரு காடுவெட்டி குரு...!''

திகில் கிளப்பும் சாதி அமைப்புகள்

''சாதிக்கு ஒரு காடுவெட்டி குரு...!''

திகில் கிளப்பும் சாதி அமைப்புகள்

Published:Updated:
##~##
''சாதிக்கு ஒரு காடுவெட்டி குரு...!''

''தாழ்த்தப்பட்ட இளைஞர்​களுக்கு குறவர் இனப் பெண்கள் மீது காதல் ஏற்படுவது இல்லை. அப்படி காதல் ஏற்பட்டு அந்த இனப் பெண்ணைத் தூக்கிச் சென்றால், அவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். துப் பாக்கியை எடுத்து டுமீல் என சுட்டுவிடுவார்கள். அதனால்தான் நரிக்குறவர்களைப் பார்த்தால், அவர் களுக்குப் பயம். நாம் நடத்தப்போகும் அடுத்த கூட்டத்துக்கு நரிக்குறவர்களையும் அழைத்து வரு வோம்'' - இப்படிப் பேசிக் கைதட்டல்களை வாங்கி​னார் டாக்டர் ராமதாஸ். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 27-ம் தேதி, சேலம் எல்.ஆர்.என். ஹோட்​டலில் அனைத்துச் சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம், டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. சுமார் 40 சாதிச் சங்கத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அனல் அடித்தது.

யாதவர் சமுதாயத்தின் பிரதி நிதியாகப் பேசிய நரேஷ் யாதவ், ''நம்மைப் பார்த்து அவர்கள் பயந்த காலம் போய்விட்டது. நாம் அவர்களைப் பார்த்து பயந்துகொண்டு இருக்​கிறோம். எனக்குத் தெரிஞ்சு காடுவெட்டி குருவைப் பார்த்தால் மட்டும்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், ஒவ்வொரு சாதியிலும் காடுவெட்டி குருவைப் போல ஒரு ஆள் உருவாக வேண்டும்'' என்று தீயை மூட்டி​னார்.

''சாதிக்கு ஒரு காடுவெட்டி குரு...!''

தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் பேசும்போது, ''தமிழகத்திலேயே எங்க சாதியில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை வீரன் எங்க சாதிப் பெண் பொம்மியைத் தூக்கிட்டுப் போயிடுவான். அதை அவர்கள் விழாவாகக் கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க சாதிப் பெண் கள் வேறு சாதிக்காரனோடு போயிடுச்சுன்னா, செத்துப்போனவங்களுக்கு சுடுகாட்டில் எப்படிச் சடங்குகள் செய்வாங்களோ, அப்படிப்பட்ட சடங்குகளைச் செஞ்சுடுவோம். மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டோம். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை இருக்கிறது. இதை யார் மீறவும் நாங்க அனு​மதிக்க மாட்டோம்'' என்று கர்ஜித்தார்.

தேவர்கள் கூட்டமைப்​பின் செயலாளர் முரு கன்ஜி, ''கலப்பினம் உருவாக்க நினைக்கிறார்கள். நாம் அகில இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும். பெரியார், ஜனநாயகம், கம்யூனிஸ்ட் என்று சொல்லி சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். அட சண்டாளர்களே... சாதி இல்லை என்றால் அண்ணன், தம்பி உறவே இருக்காதுடா. ஜனவரி 24-ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடுவோம்'' என்று சீறினார்.

அவரைத் தொடர்ந்து, ஃபார்வர்ட் ஃபிளாக் கட்சி​யின் தலைவர் அரசகுமார் மைக் பிடித்தார். ''மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, ' இனி நீ மாட்டுக் கறிதான் சாப் பிடணும். தப்பு அடிக்கணும்’னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், 'எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்’னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷ​யத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்​பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியேவெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்'' என்று தனது பகீர் பராக்கிரமத்தைச் சொன்னார்.

இறுதியாக ராமதாஸ் பேசினார். ''ஓநாய்களிடம் இருந்து நம் பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களிடம், வெளியில் பதுங்கி இருக்கும் ஓநாய்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு சாதி அமைப்பும் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கும் நம் போராட்டத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்து விடும். இல்லை என்றாலும் நீதிமன்றத்தை நாடியாவது அனுமதி வாங்கி விடுவோம். இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன்'' என்று முழங்கினார்.

அரசியலில் சாதி புகுந்து பாடாய்ப்படுத்த ஆரம்பித்து விட்டது!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்