Published:Updated:

மீண்டும் அப்ரோ மோசடி!

அலறும் ராமநாதபுரம்

மீண்டும் அப்ரோ மோசடி!

அலறும் ராமநாதபுரம்

Published:Updated:
##~##
மீண்டும் அப்ரோ மோசடி!

குறைந்த வட்டியில் கடன் தருவதாக பொது​மக்களிடம் பல கோடிகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் 'அப்ரோ’ யேசுதாஸ் இப்போது 'உள்ளே’ இருக்கிறார். அதே அப்ரோவின் பெயரைச் சொல்லி ராமநாதபுரம் மாவட்டத்திலும் மெகா சுருட்டல் நடந்துள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்த பூசேரி மல்லிகை மகளிர் மன்றத்​தைச் சேர்ந்த சிவபதி, சிங்கனேந்தல் முத்துமாரி மகளிர் மன்றத்தைச் சேர்ந்த ராணி, ராமநாதபுரம் லட்சியப் பூக்கள் மகளிர் மன்றத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகியோரிடம் பேசினோம். ''நாங்க எல்லோரும் எங்கள் பகுதிகளில் சுய உதவிக் குழுக்​களை நடத்துகிறோம். எங்கள் பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி என்பவர், ஒரு பெண்ணை எங்களிடம் அழைத்து வந்தார். 'இவர் பெயர் சாந்தி. தூத்துக் குடியில் ஒரு டிரஸ்ட் நடத்துகிறார். இவரிடம் முன்பணமாக ஒரு தொகை கொடுத்தால், மூன்று மாதங்களுக்குப் பிறகு கொடுத்த தொகைக்குப் பத்து மடங்கு லோன் தருவார். வட்டியும் ஐம்பது பைசா​தான்’ என்றார். ஒரு திருமண மண்டபத்தில் விழா நடத்தி, தேனொழுகப் பேசினார். இதை நம்பி எங்கள் உறுப்பினர்கள் பணம் கட்ட ஆரம்​பித்தனர். நாங்களும் எங்கள் மகளிர் மன்ற சேமிப்பில் இருந்த பணத்தை எல்லாம் அவரிடம் டெ​பாசிட் செய்தோம். அதற்காக பாஸ்புக் கொடுத்தார்.

மீண்டும் அப்ரோ மோசடி!
மீண்டும் அப்ரோ மோசடி!

பொதுமக்களும் குறைந்த வட்டிக்கு ஆசைப்பட்டு சொந்தப் பணத்தை 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று கட்டினர். நாங்கள் எல்லோரும் எங்கள் ஊர்ப் பெண்ணான மகேஸ்வரியிடம்தான் பணத்தைக் கொடுத்தோம். அவர் அதை, சாந்தியிடம் கொடுத்தார். ஆறு மாதங்கள் கடந்தும் யாருக்கும் கடன் கிடைக் கவில்லை. விசாரித்தபோதுதான், இந்த சாந்தி பல ஊர்களில் மோசடி செய்தவர் என்ற உண்மை தெரிந்தது. உடனே நாங்கள் பயந்துபோய், 'லோனும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். நாங்கள் கொடுத்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்’ என்று மகேஸ்வரியிடம் கேட்டோம். அவரும், 'இதோ வந்துடும்... அதோ வந்துடும்’ என்று நாளைத்தான் கடத்துகிறார். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில்தான் புகார் கொடுக்க வந்துள்ளோம். இப்போது, 22 மகளிர் குழுக்கள் வந்துள்ளன. எங்களுக்கு மட்டுமே 10 லட்சம் ரூபாய் வரை தரவேண்டி இருக்கிறது. இன்னும் நிறையப் பேர், ஏமாந்துபோனதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களும் சீக்கிரம் புகார் கொடுக்க வருவார்கள்'' என்றனர் அழுதபடி.

பாதிக்கப்பட்ட பெண்களுடன் தூத்துக்குடி சாந்தியிடம் பணிபுரிந்த மகேஸ்வரியும் வந்திருந்தார். அவரிடம் பேசினோம். ''ராமநாதபுரத்தில் சாந்தி நடத்திய டிரஸ்ட் அலுவலகத்தில் மாதம் 5,000 சம்பளத்துக்குத்தான் நான் வேலை பார்த்தேன். மற்றபடி நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. சாந்தி ஃபவுண்டேஷனின் கீழ் அப்ரோ சோஷியல் டிரஸ்ட்டை, தூத்துக்குடியில் சாந்தி நடத்தினார். அவர் வீட்டுக்காரர் பெயர் முருகராஜ். தன்னிடம் நிறையவே பணம் இருப்பதாகவும், அதைக் குறைந்த வட்டிக்குக் கொடுக்கப் போவதாகவும் கூறினார்.

அவரிடம் வேலை பார்த்ததால் பல ஊர்களுக்கும் சென்றேனே தவிர, என்னிடம் யாரும் பணம் கொடுக்கவில்லை. இப்போது எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள். நான் என்ன செய்வது? இவர் களுக்காக நான் பல தடவை தூத்துக்குடிக்குச் சென்று அவரிடம்

மீண்டும் அப்ரோ மோசடி!

முறையிட்டேன். சாந்தியோ, 'வசூல் செய்த பணத்தை எல்லாம் அப்ரோ யேசுதாஸிடம் கொடுத்து விட்டேன். அவர் கைது செய்யப்பட்டதால், லோன் வாங்க முடியவில்லை’ என்கிறார்.

ஆரம்பத்தில் இது தனி டிரஸ்ட் என்று சொல்லியவர் இப்போது அப்ரோ யேசுதாஸ் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். கடந்த மாதமே, போலீஸில் புகார் கொடுக்கப்போவதாக அவரிடம் கூறினேன். டிசம்பருக்குள் எல்லோருக்கும் பணத்தை செட்டில் செய்து விடுகிறேன் என்றார். இப்போது அவர் நம்பருக்கு போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. பதறி அடித்து தூத்துக்குடிக்குப் போனால், அவர் வீட்டையும் ஆபீஸையும் காலி செய்துவிட்டுப் போய்விட்டார். இப்போது எங்கே இருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை'' என்று அவரும் ஏமாந்தவர்களோடு சேர்ந்து அழ ஆரம்பித்தார்.

''அந்த சாந்தி சாதாரண ஆள் இல்லை. போலீஸ் அதிகாரி​களையும், அரசியல்வாதிகளையும் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார். கொஞ்ச நாளைக்கு பாதிக்கப்பட்​டவர்கள் போலீஸ், புகார் என்று அலைவார்கள். அப்புறம் மறந்துவிடுவார்கள். அதற்குள் பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்து சுகபோக வாழ்க் கை வாழத் தொடங்கி​விடு​வார்கள்'' என்​கிறார்கள் காவல் துறை வட்டாரத்தில்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ராமநாதபுரம் எஸ்.பி-யான மயில்வாகனன், ''ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வட்டிக்கு மேல் நிதி நிறுவனங்கள் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் பான் புரோக்கர் லைசென்ஸ் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் டெபாசிட் வசூலிப்பது சட்டப்படி குற்றம். இது சம்பந்தமாக பொது மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். ஈமு கோழி, பாசி நிறுவன மோசடிகள் பற்றி ஊடகங்களில் எவ்வளவுதான் செய்திகள் வந்தாலும், தொடர்ந்து மக்கள் மோசடி நபர்களிடம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் போலி நிதி நிறுவனங்களின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது சாந்தி குறித்து விசாரித்து வருகிறோம். அப்ரோ யேசுதாஸுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்பதையும் விசாரிக்கிறோம்'' என்றார்.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று புத்தர் சும்மாவா சொன்னார்?

- செ.சல்மான், படம்: உ.பாண்டி