##~## |

மக்களின் உயிரோடு விளையாடும் மருத்துவமனைகள் ஒரு பக் கம் என்றால், அவை மீது நட வடிக்கை எடுக்காத அதிகாரிகளின் அலட்சியம் மறுபக்கம். இதனால், நொந்து கிடக்கிறார்கள் புதுவை மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மூன்று மாதங்களுக்கு முன், புதுவை செந்தில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணியான ராஜ மகேஸ்வரி, ஸ்ட்ரெக்சரில் இருந்து விழுந்து... அறுவை சிகிச்சையின்போது நினைவு இழந்தார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல, அங்கே அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பல மணி நேரத்துக்கு முன்பே மகேஸ்வரி இறந்து விட்டதாகக் கூறினர். அதன்பிறகுதான், செந்தில் மருத்துவமனை, அறுவைச் சிகிச்சை செய்வதற்கான உரிமம் பெறா மல் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கிவந்தது தெரிந்தது. இதுகுறித்து, 3.10.12 இதழில் 'ஏதோ வித் தியாசமான சத்தம் கேட்டது... என் மனைவி கீழே கிடந்தார்...’ என்ற தலைப்பில் ராஜ மகேஸ்வரியின் கணவர் சிவக்குமார் சொன்னதை வெளியிட்டு இருந்தோம். 'அந்த செந்தில் மருத்துவமனை மீது தவறு இருக்கும்பட்சத்தில், நிச்சயம் நடவடிக்கை எடுக் கப்படும்’ என்று உறுதி அளித்து இருந்தார் சுகாதாரத் துறையின் இயக்குனர் கே.வி.ராமன். ஆனால், மூன்று மாதங்களைக் கடந்த பிறகும் அந்த

மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறுகிறார் ராஜ மகேஸ்வரியின் கணவர் சிவக்குமார். ''ஜிப்மர் மருத்துவமனையில், குழந்தைக்குத் தலையில் அடிபட்டதால் இறந்து விட்டது என்றும், ரத்தம் அதிகம் வெளியேறி விட்டதால் என் மனைவி இறந்து விட்டார் எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தந்தனர். 'உங்களுக்கு சுகப் பிரசவம்தான் ஆகும்’ என்று உறுதி கூறியதால்தான், செந்தில் மருத்துவமனையில் என் மனைவியைச் சேர்த்தேன். ஆனால், என் மனைவியையும் குழந்தையையும் மரணத்துக்குள் தள்ளி என்னை அனாதையாக்கி விட்டனர். இவ்வளவு நடந்தும் அந்த மருத்துவமனை மீது ஒரு சின்ன நடவடிக்கைகூட சுகாதாரத் துறை எடுக்கவில்லை. புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள், அந்தத் தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாக இருக்கின்றன. மேலும், அரசு விழாக்களுக்கு இந்த மருத்துவமனை நிர்வாகம் பணத்தை அள்ளிக் கொடுப்பதால், புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருக் கிறது. எனக்கு நேர்ந்ததுபோல இனி யாருக்கும் நடக்கக்கூடாது. அதனால், நியாயம் கிடைக்கும் வரை மருத்துவமனைக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன்'' என்றார் சிவக்குமார் உறுதியாக.
இதுகுறித்து பேசினார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநிலத் தலைவர் லோகு ஐயப்பன். ''இந்த சம்பவத்துக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் புதுச்சேரியில் உள்ள பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகள் அதில் பணிசெய்யும் மருத்துவர்களின் ஒட்டுமொத்தத் தகவலையும் திரட்டினோம். அதில் செந்தில் குழந்தைகள் மருத்துவமனை, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆய்வுக்கூடத்துக்கான அனுமதியை மட்டுமே பெற்றுள்ளனர். அறுவைச் சிகிச்சை செய்யவோ, மகப்பேறு மருத்துவம் பார்க்கவோ அவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல், ஒரு கிளினிக்கை மருத்துவமனைபோல் அலங்காரம் செய்து, உயர் தொழில்நுட்ப சாதனங்களைக்கொண்டு அப்பாவிகளின் உயிர்களோடு விளையாடி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்யவேண்டிய சுகாதாரத் துறை அதிகாரிகளும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு சான் றிதழ் அறிக்கை அளிக்கின்றனர். இவ்வாறு ஏதேனும் இறப்பு சம்பவங்கள் நேரிட்டால்தான், அந்த மருத்துவனையின் தரம் மக்களுக்குத் தெரிகிறது.

புதுச்சேரியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் இருக் கின்றன. அதில் சுகாதாரத் துறையினரிடம் பதிவு செய்திருப்பது, 95 மட்டும்தான். அவையும்கூட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது இல்லை. பலரும் மருத்துவப் பரிசோதனைகளுக்கான அனுமதியை மட்டுமே பெற்றுக்கொண்டு மருத்துவமனை நடத் துகின்றனர். அதனால், அனுமதி பெறாத அத்தனை மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

புதுச்சேரி சுகாதாரத் துறையின் இயக்குனர் கே.வி. ராமனை சந்தித்தோம். ''செந்தில் மருத்துவமனை தொடர்பான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் ஆட்சியர் முன்னிலையில் முடிந்து விட்டது. அந்த மருத்துவமனைக்கு மெமோ அனுப்பி இருக்கிறோம். அவர்கள் கொடுக்கும் பதிலை வைத்துத்தான், அடுத் தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சுகாதாரத் துறையில் 30 பேர் மட்டுமே ஆய்வு செய்யும் அதிகாரிகளாக உள்ளனர். அவர்கள்தான் மருத்துவமனைகளை ஆய்வுசெய்து வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் அறிக் கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது செந்தில் மருத்துவமனையில், மருத்துவப் பரிசோதனைகள் மட்டுமே நடக்கின்றன. மீண்டும் தவறு நடந்தால், அந்த மருத்துவமனையின் பதிவை ரத்து செய்வோம்'' என்றார்.
தாமதமாக எடுக்கப்படும் நடவடிக்கையும் மிக மோசமான அநீதிதான்!
- நா.இள.அறவாழி
படங்கள்: ஜெ.முருகன்