##~## |

தொழில் வளம், கட்டுமானம், ரியல்எஸ்டேட் போன்றவற்றில் சென்னை மற்றும் பெங்களூருவுக்கு நிகராக வளர்கிறது ஓசூர். இந்த நகராட்சிக்கான புதிய அலுவலகத்தை நகரில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக் கும் நல்லூர் ஊராட்சியில் கட்ட முயற்சிக்கும் விவகாரம்தான் ஓசூரின் இப்போதைய ஹாட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவரான தி.மு.க-வைச் சேர்ந்த மாதேஸ்வரன், ''சுமார் 28 வருடங்களுக்கு முன் கட்டிய ஓசூர் நகராட்சி அலுவலகம் பழுதாகி இருப்பதால், புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. பழைய இடத்திலேயே புதிய கட்டடத்தைக் கட்டினால், நகராட்சியின் நாலாபுறமும் வசிக்கும் மக்களுக்கு வசதியாக இருக்கும். அதை விட்டுவிட்டு இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நகராட்சி அலுவலகத்தைக் கொண்டுபோகப் பார்க்கிறார் சேர்மன் பாலகிருஷ்ண ரெட்டி. பாகலூர் சாலையில் இப்போது தேர்வு செய்திருக்கும் நான்கு ஏக்கர் இடம் நகராட்சிப் பகுதியே கிடையாது. அந்த இடம் நல்லூர் ஊராட்சியில் இருக்கிறது. அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, அங்கே புது அலுவலகம் கட்டுவதற்குக் கடும் பிரயத்தனம் செய்கிறார் சேர்மன். அதற்குக் காரணம், அவருக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலமும் அவருடைய குடும்பத்தாருக்குச் சொந்தமான நிலமும் அந்தப் பகுதியில் இருக்கிறது. அந்த நிலங்களின் விலை மதிப்பை நகராட்சி அலுவலகம் அமைவதன் மூலம் உயர்த்தி, கொள்ளை லாபம் அடைய வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.

இப்போது இருக்கிற இடத்திலேயே நவீனக் கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புது அலுவலகம் கட்டலாம். அந்த இடத்தில் வேண்டாம் என்றால், வாரச்சந்தை திடல், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் என்று நகர் பகுதியிலேயே நிறைய இடங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் பலரும் சுட்டிக்காட்டியும், யார் கருத்தையும் மதிக்காமல் பாலகிருஷ்ண ரெட்டி செயல்படுகிறார். அவர் லாபம் அடைவதற்காக மக்களைக் கஷ்டப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த முடிவு கைவிடப்படா விட்டால், மக்களைத் திரட்டி பெரிய போராட்டங்களை நடத்துவோம்'' என்று கொதித்தார்.

பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவரான நரேந்திரன், ''நகரின் நடுவே நகராட்சி அலுவலகம் கட்ட

முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை இல்லை. வாடகைக்கு விடப்பட்டு இருக்கும் இடங்களையும் சேர்த்துக்கொண்டு நவீன உத்திகளைப் பயன்படுத்தி மிகப் பிரமாண்டமான அலுவலகத்தையே பழைய இடத்தில் கட்ட முடியும். இப்போது தேர்வுசெய்து இருக்கும் இடத்துக்குப் போக நகராட்சிக்கு உட்பட்ட சில ஏரியா மக்கள் இரண்டு அல்லது மூன்று பஸ்கள் மாறித்தான் போக வேண்டும். அதிலும் புது அலுவலகப் பகுதிக்குச் செல்லும் சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. அதனால், அங்கே நகராட்சி அலுவலகம் கட்டினால், மக்களுக்கு வீண் அலைச்சல், செலவுகளோடு ஆபத்தும் ஏற்படும். அதனால்தான் நகருக்கு உள்ளேயே புது அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புகிறார்கள். உள்ளாட்சித் துறை

அமைச்சரான கே.பி.முனுசாமியின் மாவட்டத்தில் உருவாகி இருக்கும் விவகாரம் இது. அவர் இதில் தலையிட்டுத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புறோம்'' என்றார்.
ஓசூர் நகராட்சி சேர்மன் பாலகிருஷ்ண ரெட்டியிடம் பேசினோம். ''ஓசூர் விரைவில் மாநகராட்சிக்கான தகுதியை அடைய இருக்கிறது. அதனால், எதிர்கால வசதிகளைக் கருத்தில் கொண்டுதான் விசாலமான இடத்துக்கு அலுவலகத்தைக் கொண்டு போகிறோம். சிலர் குறிப்பிடும் இடங்களை எல்லாம் ஆய்வுசெய்து, அவற்றில் திருப்தி இல்லாமல்தான் புது இடத் தைத் தேர்வுசெய்துள்ளோம். அந்தப் பகுதியில் வருமான வரி அலுவலகம், ஐ.டி. பார்க் உள்ளிட்டவையும் வர இருக்கின்றன. மாநகராட்சி ஆகும்போது அந்த ஊராட்சியும் ஓசூருடன் இணைந்துவிடும். மற்றபடி என் நிலம் அங்கே இருப்பதாகவும், உள்நோக்கத்தோடு நான் இந்தக் காரியத்தைச் செய்வதாகவும் சொல்வது அரசியல் காழ்ப்பு உணர்ச்சிக் குற்றச்சாட்டுகள். அவற்றைச் சொல்பவர்கள் என் நிலம் அங்கே இருப்பதை நிரூபித்துக் காட்டட்டும்'' என்றார் காட்டமாக.
இதற்கிடையில், யாரும் சட்டரீதியான தடை வாங்கிவிடக் கூடாது என்று சேர்மன் தரப்பு நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்து இருக்கிறது. 'இதை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம்...’ என்று வழி தேடுகிறது எதிர்ப்பு அணி.
ஜெயிக்கப்போவது யாரோ?
- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: வி.ராஜேஷ்