Published:Updated:

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கப்படுமா?

எதிர்பார்ப்பில் தமிழ் அறிஞர்கள்

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கப்படுமா?

எதிர்பார்ப்பில் தமிழ் அறிஞர்கள்

Published:Updated:
##~##
ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கப்படுமா?

'சோழப் பேரரசர் ராஜராஜ சோழனுக்கு அவர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை, 1984-ம் ஆண்டு தமிழக அரசு நடத்​தியது. அதுபோலவே, முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை தமிழக அரசு நடத்த வேண்​டும்’ என்று கோரிக்கை​வைக்கிறார்கள் சோழ மண்டலத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்கைகொண்ட சோழபுரத்தின் மேம்பாட்டுக் குழுமத் தலைவரான பொறியாளர் கோமகன், ''சோழப் பேரரசர்​களிலேயே புகழ்பெற்று விளங்கி​யவர்​கள் ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோ ழனும் என்பதுதான் வரலாறு. அதில், கி.பி. 1012-ம் ஆண்டு, அதாவது ராஜராஜ சோழன் உயிரோடு இருக்கும்போதே, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ராஜேந்திர சோழன். கங்கைக்கரை வரை சோழப் பேரரசை நிறுவியதால் கங்கைகொண்ட சோழன் என்று அழைக்கப்பட்டார். அவர் தனது வெற்றியைக் கொண்டாடும் வகையில், 28 சதுர மைல் பரப்பளவில்  கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார்.

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கப்படுமா?

சரியாக 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர், தனது தந்தையைப்போன்று கட்டடக் கலையில் ஒரு

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கப்படுமா?

புரட்சியை ஏற்படுத்தினார். தஞ்சைப் பெரிய கோயிலை​விட முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கங்கைகொண்ட சோழபுரப் பிரகதீஸ்வரர் கோயில், யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக மரபுச் சின்னமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் கடந்த 1982-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். திருவாதிரைத் திருவிழாவை நடத்தினார். அப்போது கோயில் பற்றிய சிறப்பு மலரை​யும் வெளியிட்டார்.

இந்தக் கோயில் இந்தியத் தொல்லியல் துறையால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது என்றாலும், 12 வருடத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டிய கெமிக்கல் வாஷ் போன்ற புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்​படாததால், கோபுரத்தின் கலசம் பழுது அடைந்து உள்ளது. இப்போது புனர​மைப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், பழுதான கலசத்தைக் கீழே இறக்கி, அதை அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும். அதற்குப் பதிலாக, எங்கள் கிராம மக்கள் செய்துள்ள புதிய கலசத்தைப் பொருத்தி கோயிலின் கும்பாபிஷேகத்தை விரை​வாக நடத்த வேண்டும். அதோடு, ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். அப்படிக் கொண்டாடினால், 300 ஆண்டுகள் சோழப் பேர​ரசின் தலைநகராக விளங்கிய எங்கள் ஊரின் வரலாற்றை உலகறியச் செய்ய முடியும்'' என்றார் ஆதங்கத்துடன்.

தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன், ''மலேசியா, இந்தோனேசியா, ஜாவா போன்ற கீழ்த்திசை நாடுகளை எல்லாம் போரில் வென்ற பெருமைக்குரிய ராஜேந்திர சோழனுடைய பிறந்த நாளை, மக்கள் தவறுதலாக மார்கழி ஆதிரையாக நினைத்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறு. அவரால் கட்டப்பட்ட திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள அரசாணை தெரிவிக்கும் கல்வெட்டில் இது குறிப்பிடப்பட்டு உள்ளது. தான் பிறந்தது ஆடி மாதத் திருவாதிரைதான் என்றும், நடராசப் பெருமானின் மார்கழித் திருவாதிரை நாளையே தன் பெயரில் திரு நாளாகக் கொண்டாடியதாகவும் அந்தக் கல்வெட்டில் விவரித்துள்ளார். அதனால் ஆடித் திருவாதிரை நாளையே ராஜேந்திர சோழனின் பிறந்த நாளாக அறிவிக்க வேண்டும். தந்தை இருக்கும்போதே ராஜேந்திர சோழன் அரியணை ஏறி இந்த வருடத்துடன் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. அவரது தந்தையான ராஜராஜ சோழன் இறப்புக்குப் பின் சோழப் பேரரசுக்கே சக்கரவர்த்தியாக பதவி ஏற்றுக் கொண்டது கி.பி 1014-ம் ஆண்டு என்பதால், இந்த வருடம் முழுக்க ஆயிர​மாவது ஆண்டு விழாவை நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.  

இதுகுறித்து, இந்து அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் பேசினோம். ''கங்கை​கொண்ட சோழபுரம் கோயில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் இருக்கிறது. அதனால், அங்கு விழா நடத்தும் அதிகாரம் தொல்லியல் துறைக்கும் முதல்வரான அம்மாவுக்கும் மட்டும்தான் இருக்கிறது. எனவே, ராஜேந்திர சோழனுக்கு ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா எடுப்பது குறித்து அம்மாவின் கவனத்துக்குக் கொண்டுசென்று, தொல்லியல் துறையின் அனுமதியோடு விழா எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்'' என்றார்.

தமிழ் அறிஞர்கள் ஆர்வத்தோடு காத்திருக்​கிறார்கள்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி