Published:Updated:

அண்ணன் தோற்பது நிச்சயம்!

ஆவேசத்தில் மைதீன்கான் தம்பி!சென்னை மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

19-01-2011 தேதியிட்ட ஜூ.வி-யின் கழு​கார் பகுதியில், 'அ.தி.மு.க-வில் அமைச்​சரின் தம்பி’ என்ற

##~##

தலைப்பில், முகமது இக்பால் அ.தி.மு.க. பக்கம் தாவுவதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பிட்டு இருந்தோம். கழுகாரின் வாய் முகூர்த்தத்துக்கு ஏற்ப... தி.மு.க. அமைச்சர் மைதீன்கானின் தம்பியும், அவரது குடும்பத்தினரும் போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைய... ஆடிப்போய் இருக்கிறது, தி.மு.க. தரப்பு!

 இணைப்புக்கான காரணம் அறிய முகமது இக்பாலை சந்தித்து சில கேள்விகளை வீசினோம்.

''ஏன் இந்த திடீர் முடிவு?''

''இது திடீரென எடுத்த முடிவு அல்ல. நான் ஆரம்பம் முதலாகவே எம்.ஜி.ஆர். ரசிகன். அவர் மீது ஆழ்ந்த பற்றுகொண்டவன். எல்லோருக்கும் இது தெரியும். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பே, 'அ.தி.மு.க-வுக்கு போகலாம்’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நலனும் கிடைக்கவில்லை. தி.மு.க-வின் போக்கும் பிடிக்கவில்லை. இந்த ஆட்சி வந்த உடனேயே பவர்

அண்ணன் தோற்பது நிச்சயம்!

கட் வந்தது. விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆள்பவர்கள், நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுகிறார்கள். கோடிகளைக் கொள்கையாக வைத்திருக்கும் கட்சியை​விடவும், கொள்கைக்காகச் செயல்படும் அம்மாவின் பக்கம் இருப்பதே மேல் என்கிற முடிவை நானும் என் குடும்பத்தாரும் எடுத்ததா​லேயே அ.தி.மு.க-வில் இணைந்தோம்!''

''உங்கள் முடிவால் உங்கள் அண்ணன் மைதீன்கானுக்கு நெருக்கடி ஏற்படாதா?''

''தி.மு.க. சரியான கட்சி இல்லை என்கிற விஷயம் அவருக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும், சந்தர்ப்பச் சூழ்நிலையாலும் அமைச்சராக இருப்பதாலும் அங்கேயே இருக்கிறார். தி.மு.க-வில் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதைப் பார்த்து ஒவ்வொரு கட்சித் தொண்டனும் மனம் வெதும்பி நிற்கிறான். சீக்கிரத்திலேயே உண்மைகளை உணர்ந்து அந்தக் கட்சியில் இருக்கும் என் அண்ணன் உள்பட அனைவருமே அம்மாவின் பக்கம் வருவார்கள். நீங்கள் அதைப் பார்க்கத்தான் போகிறீர்களே!''

''அவர் இப்போது அமைச்சராக இருக்கிறார். அவரை எப்படி அ.தி.மு.க.வுக்கு வருவார் என்று சொல்கிறீர்கள்?''

''நல்ல கொள்கையுடன் செயல்படும் கட்சியில் இருப்பதுதானே நல்லவர்களுக்கு அடையாளம்! ரேஷன் பொருட்கள் கடத்தல், மணல் கொள்ளை, லட்சக்கணக்கான கோடியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் கட்சியில் இருந்துகொண்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? அதனால், அவரும் அ.தி.மு.க-வுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தப்பில்லையே!''

''அ.தி.மு.க. தலைமை உங்களை எப்படி வரவேற்றது?''

''நான், என் மனைவி, இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரன்-பேத்திகள் என குடும்பமாக போயஸ் கார்டனுக்குச் சென்றோம். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்தான் எங்களை அம்மாவிடம் அறிமுகப்படுத்தினார். அம்மாவும் இன்முகத்தோடு வரவேற்றார். குழந்தைகளிடம் கொஞ்சிப் பேசினார். அவர்கள் என்ன படிக்கிறார்கள், பேர் என்ன போன்ற விஷயங்களைக் கேட்டார். என்னையும், மகன்களையும் பார்த்து, 'என்ன தொழில் செய்றீங்க?’ என்று கேட்டதோடு, 'அ.தி.மு.க. என்னும் குடும்பத்தில் சேர்ந்திருக்கீங்க. கட்சிக்காக நன்றாகச் செயல்படுங்கள்’ என்று வாஞ்சையோடு பேசினார். அம்மாவை சந்தித்ததை நானும் குடும்பத்தினரும் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம்!''

''அண்ணன் மீதுள்ள வெறுப்புதான் நீங்கள் கட்சி மாறுவதற்குக் காரணம் என்கிறார்களே?''

''தனிப்பட்ட முறையில் அவருடன் எனக்கு வெறுப்பு இல்லை. நான் மிளகாய் மொத்த வியாபாரம் செய்கிறேன். அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. அவர் தேர்தலில் நின்றபோது அவருக்காகத் தீவிரமாக உழைத்தேன். எங்களை வைத்தே அவர் ஜெயித்தார். ஆனாலும், அப்போதெல்லாம் அவருக்குப் பின்னால் இருந்ததால் என்னை வெளியில் தெரியவில்லை. இப்போது அம்மா கட்சியில் சேர்ந்து இருப்பதால் தனியாகத் தெரிய ஆரம்பித்து இருக்கிறேன்...''

அண்ணன் தோற்பது நிச்சயம்!

''அண்ணனுடன் ஏதும் சொத்துப் பிரச்னையோ?''

''அப்படி எதுவும் கிடையாது. நாங்கள் அவருக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால், அவருக்கு எங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருப்பதை அவருடைய பேத்தி திருமணத்துக்கு அழைப்பு கொடுக்காததில் இருந்தே புரிந்துகொண்டேன். புதிதாகப் பணம் சேர்ந்திருப்பதால், அவருடைய மகனுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. எங்களைத் தனிமைப்படுத்தத் திட்டமிட்டார்கள். நாங்களோ அம்மா குடும்பத்தில் சேர்ந்துவிட்டோம். எங்களின் இந்த முடிவை கேள்விப்​பட்ட உறவினர்களும், நண்பர்களும், 'நல்ல முடிவை எடுத்திருக்கீங்க’னு வாழ்த்துகிறார்கள். இனிமேல் தனிமைப்பட்டு நிற்பது அவர்கள்தான்...''

''வரும் தேர்தலில் உங்கள் அண்ணனுக்கு எதிராகத் தேர்தல் வேலை செய்வீர்களா?''

''நான் இப்போது அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர். அம்மா இடும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியது தொண்டனின் கடமை. நான் வியாபாரம் செய்வதால், எல்லா மக்களையும் சந்திக்கிறேன். ஏழு தொகுதிகளைச் சேர்ந்த மக்களை தினமும் சந்திப்பதால் அவர்களின் மன ஓட்டம் புரிகிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்காத அண்ணனுக்கு மக்களின் நிலைமை தெரிந்திருக்க வழியில்லை. அவரை அமைச்சர் ஆக்குவதற்கு காரணமாக இருந்த தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால் கடுமை​யான கோபத்தில் இருக்கிறார்கள். அவருடைய மகனின் பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளை செய்திருக்கார். அதனால், மறுபடியும் தேர்தலில் நின்றால் தோற்பது நிச்சயம்தான்!''

- ஆண்டனிராஜ்

படம்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு