Published:Updated:

''எவனா இருந்தா எனக்கென்ன?''

எகிறிய நகரம்.. பதறிய கல்லூரி!வடக்கு மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

தி.மு.க-வுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது... தொட்ட

##~##
இடத்தில் எல்லாம் வெடித்துக் கிளம்பு​கிறது சிக்கல்! கடந்த ஜனவரி 21-ம் தேதி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பிரிவில் 'வணிக மனை, பள்ளி மற்றும் பொது உபயோக மனைகள் விற்பனைக்கு’ என்று மூடி முத்திரையிட்ட டெண்டர் நடந்தது. 'இதில் கலந்துகொள்ள வந்த திருப்பத்தூர் நந்தனம் பொறியியல் கல்லூரி தாளாளர் நந்தகோபாலை, திருப்பத்தூர் தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரன் கொலைவெறியோடு தாக்கினார்!’ என்ற செய்திதான் இப்போது அந்தப் பகுதியின் பரபரப்புச் செய்தி!

 நந்தகோபாலை சந்தித்துக் கேட்ட​போது, பரிதாபமாக ஆரம்பித்தார். ''நான் திருப்பத்தூர் சின்ன பஜார் தெருவில் வசிக்கிறேன். ஒரு கல்லூரி நடத்துகிறேன். ஃபீஸ்கூட ரொம்ப கம்மியாகத்தான் வாங்குறேன். எனக்கு இன்னொரு விருப்பம் உண்டு. அதாவது என் தந்தையார் பெயரில் ஒரு இலவச

''எவனா இருந்தா எனக்கென்ன?''

மருத்துவமனை கட்டுவதுதான் அது. சமீபத்தில் பத்திரிகையில், வேலூர் வீட்டு வசதி வாரியம் மூலம் திருப்பத்தூரில் மனைகள் விற்பனைக்கு வருவதான விளம்பரத்தைப் பார்த்துட்டு, அதற்​கான ஆவணங்களையும் டி.டி​-யையும் எடுத்துக்கொண்டு ஜனவரி 21-ம் தேதி காலை 9 மணிக்கு அங்கே போனேன். என் டிரைவரும்கூட இருந்தார்.

அப்போது, 9.15 மணிக்கு திருப்பத்தூர் தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் ஒரு பத்துப்பதினைந்து பேருடன் என்கிட்ட வந்தார். எடுத்த எடுப்பிலேயே, 'எதுக்குடா இங்கே வந்த? நீ டெண்டர் எடுக்க வேணாம், கிளம்புடா!’ என ஒருமையில் மிரட்டினார். நான் பதறிப்போய், 'அமைதியாப் பேசுங்க. எனக்கு வயது 66’ன்னு பொறுமையாகச் சொன்னேன். உடனே, 'என்னடா, எதிர்க்கிற?’ என்று என் சட்டை​யைப் பிடித்துக் கிழித்து, கன்னத்தில் 'பளார்’ என அடித்தார். எனக்குப் பொறி கலங்கி​விட்டது. அங்கிருந்த அரசு அதிகாரிங்க, இதை கண்டும் காணாதது மாதிரியே இருந்தாங்க. எனக்குப் பயமாவும் அவமானமாவும்

''எவனா இருந்தா எனக்கென்ன?''

இருந்துச்சு. நான் என்ன செய்வது என்று யோசிக்கும் முன், அவர் மறுபடியும் என் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளினார். ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி செய்திருக்கேன். பீ.பி., சுகர் வேறு! மயக்கம் வருவது போல் இருந்தது. அவரோடு இருந்த ஆட்களும் என்னைப் பச்சை பச்சையா திட்டினாங்க. 'இனிமே நீ டெண்டர் கிண்டர் எடுக்கிறேன்னு இங்க வந்தா, உயிரோடவே திரும்ப மாட்டே’ன்னு மிரட்டினாங்க. வெளியே வந்ததும் ஒரே படபடப்பாயிருச்சி. என் டிரைவர் மாத்திரை, காபி வாங்கிக் கொடுத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தார்...'' என்றவர் தொடர்ந்து,

''அப்புறம் கொஞ்சம் தெளிந்ததும், மதியம் நேரா சத்துவாச்சாரி காவல் நிலையம் போய் புகார் கொடுத்தேன். ஆனா, அவங்க புகாரை வாங்காமல் சாக்குப்​போக்குச் சொல்லி என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள். நான் விடாப்பிடியாக 'புகாரை கொடுத்து​விட்டுத்தான் போவேன்’ என்றதும் மாலை 5 மணி வாக்கில்தான் புகாரை வாங்கினர். இப்படி புகார் வாங்கவே மறுக்கும் காவல் துறை, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கா​விட்டால், நான் மனித உரிமைக் கழகத்திடம் போக உள்ளேன். சமுதா​யத்தில் ஓரளவு அந்தஸ்துடன் இருக்கும் எனக்கே இந்த கதி என்றால், ஏழைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடிய​வில்லை!

இதுவரை அந்த ராஜேந்திரனிடம் ஒரு வம்புக்கும் வழக்குக்கும் நான் போனதில்லை. 'நானுண்டு என் கல்லூரி உண்டு’ என்றுதான் இருக்கிறேன். இதோ பாருங்க, நான் கொண்டுசென்ற டெண்டருக்கான டி.டி. மற்றும் டாக்குமென்ட்கள்...'' என்று அதைக் காட்டியவர், ''சீல் வைத்த இந்த கவரைக்கூட கொடுக்கவிடாமல் மிரட்டி, அடித்து அனுப்பிவிட்டார்களே! பிறகு எதற்கு பேப்பர்களில் விளம்பரம் கொடுக்கிறார்கள்? அவர்களே டெண்டர் விட்டது போல் காட்டி, எடுத்துக் கொள்ளலாமே... இரண்டுமே ஒன்றுதானே? போலீஸ்கிட்ட நான் 'என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?’ என்று கேட்டால், 'சமாதானமா போயிடுங்க’ன்னு கூசாம சொல்றாங்க...'' என்றார் பரிதாபமாக.

திருப்பத்தூர் தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரனிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''அப்படி ஒரு

''எவனா இருந்தா எனக்கென்ன?''

சம்பவமே நடக்கலே, நீங்க சொல்ற நபர் யார்னே எனக்குத் தெரியாது!'' என்று அப்பாவியாகச் சொன்னார்.

சத்துவாச்சாரியில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக அதிகாரிகளிடம் நாம் இதுபற்றி விசாரிக்க வாய் எடுக்கும்போதே, ''அடடே, அப்படியா! அந்த மாதிரி எந்த பிரச்னையுமே நடக்கலையே!'' என்று ராஜேந்திரன் சொன்னதையே கிளிப்பிள்ளையாகத் திருப்பிச் சொன்னார்கள்.

அங்கிருந்த ஒருவர் நம்மைத் தனியே வெளியே சந்தித்து, ''சார், பாத்தீங்களா... நாட்டுல எந்த அளவுக்கு அநியாயம் பெருகி இருக்குதுங்கிறதுக்கு இந்த சம்பவமே ஒரு சாம்பிள்! அன்னிக்குக் காலையில் அவ்வளவு பெரிய தகராறு நடந்தது முழுசுமே உண்மைதான்! ஆனா, உங்ககிட்ட அந்த தி.மு.க-காரரும் அரசு அலுவலர்களும் முழுப் பூசணிக்காயை சோத்துல மறைப்பது போல் எப்படி மறைக்கிறாங்க பார்த்தீங்களா?'' என்று தன் ஆதங்கத்தை நம்மிடம் கொட்டினார்.

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, ''அவர் புகார் கொடுத்தது என்னவோ உண்மை... ஆனா, அவங்க இரண்டு பேரும் இப்போ சமாதானம் ஆகிட்டாங்க.. அதுனால இந்த விஷயத்துல நாங்க ஒண்ணும் பண்ண முடியாதே!'' என்றனர் ஒரே போடாக!

பார்க்கலாம்... இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்று!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு