Published:Updated:

பறக்கும் படையா... உயிர் பறிக்கும் படையா?!

திருவாடானை திகில் அட்டாக்மத்திய மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

ரெய்டுக்குப் போகும் அதிகாரிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடப்பதைக்

##~##
கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கடத்தலைப்பற்றி துப்புக் கொடுத்தவர் மீது, கடத்தலைத் தடுக்கவேண்டிய அதிகாரிகளே, கொலைவெறித் தாக்குதல் நடத்த... அதிர்ந்து கிடக்கிறது ராமநாதபுரம் மாவட்டம்!

 திருவாடானையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வெள்ளையபுரம். இதன் அருகில் பாம்பாற்றில் மணல் திருட்டு சர்வசாதாரணம். ''பக்கத்திலேயே புதுக்கோட்டை மாவட்ட எல்லை தொடங்கி விடுவதால், இங்கு சில அதிகாரிகள் துணையோடு ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடக்கும். லோக்கல் புள்ளிகள் சிலரும் இந்தக் கடத்தல் தொழிலில் கல்லாக் கட்டுவதால்... விஷயத்தை யாரும் வெளியில் சொல்வதில்லை. ராமநாதபுரத்தில் இருந்து சில அதிகாரிகள் இந்தப் பகுதிக்கு அடிக்கடி விசிட் அடிப்பார்கள் - கடத்தலைக் கண்டுபிடிக்க அல்ல; 'கட்டிங்’ வாங்குவதற்காக!'' என்று இப்பகுதி மக்களே வெளிப்படையாக புகார்ப் பத்திரம் வாசிப்பது வழக்கம்!

வெள்ளையபுரம் கிளையின் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரான ராவுத்தர் நைனா

பறக்கும் படையா... உயிர் பறிக்கும் படையா?!

முகம்மதுதான், உயர் போலீஸ் அதிகாரிக்குக் கொடுக்கும் நபர் என்று இப்பகுதியினர் சொல்கிறார்கள். 'இந்தக் கடத்தல் புள்ளிகளோடு பறக்கும் படை அதிகாரிகள் வைத்திருக்கும் டீலிங் குறித்து அடிக்கடி கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பதை நைனா முகம்மது சில ஆண்டுகளாகச் செய்து வந்தார்’ என்கிறார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால்... ராவுத்தரே களத்தில் இறங்கினார். அதற்குப் பரிசுதான் வெறித் தாக்குதல்!

மருத்துவமனையில் இருந்த ராவுத்தர் நைனா முகம்மதுவிடம் பேசினோம். ''நாலு மாசத்துக்கு முந்தி ஒரு நாள் எங்க ஏரியாவில் இருந்து ரேஷன் அரிசியைக் கடத்திட்டுப் போனாங்க. தகவல் தெரிந்ததும் அந்த லாரியை மடக்கி, 'அரிசி எங்க போகுது?’ன்னு டிரைவர்கிட்ட கேட்டேன். 'அதை உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ன்னு அவர் சொல்ல... உள்ளே இருந்த இன்​னொருத்தன் யாருக்கோ போன் போட்டு எங்கிட்ட கொடுத்தான். போனில் பேசிய ராமநாதபுரம் பறக்கும் படை தாசில்​தாரின் கார் டிரைவர் செழியன், 'நீ கட்சிக்காரன்னா பெரிய இவனா?’ன்னு கேட்டு மிரட்டினார். 'ரேஷன் அரிசியைக் கடத்தினா எங்க ஆட்சிக்குத்தான் கெட்ட பேர்’னு சொன்னேன். 'அதை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். உன் வேலையை மட்டும் நீ பார்’னு சொன்னார். உடனே, கலெக்டர் வரைக்கும் புகார் பண்ணி, அந்த அரிசியை ஏத்துன இடத்திலேயே திரும்ப இறக்க வெச்சேன்!

அதில் இருந்தே என் மேல் அவங்களுக்குக் காட்டம்... பிப்ரவரி 11-ம் தேதி ராத்திரி எட்டரை மணிக்கு திருவாடானையில் இருந்து பைக்ல ஊருக்குத் திரும்பினேன். ஊர் எல்லையில் இருக்கிற கிருஷ்ணன் கோயில் பக்கத்தில் வந்தப்ப, பறக்கும் படை தாசில்தார் ஜீப் எதிரே வந்துச்சு. என்னைப் பார்த்தும் ஜீப்பை நிறுத்தி என்னை மறிச்சு கடுப்போட, 'இவன்தான் இன்ஃபர்மேஷன் கொடுக்கும் யோக்கியன்’னு

பறக்கும் படையா... உயிர் பறிக்கும் படையா?!

கத்திக்கிட்டே ஓடிவந்த டிரைவர் செழியன், கையில் வெச்சிருந்த கட்டையால் என்னை அடிச்சார். பறக்கும் படை தாசில்தார் செல்லப்பாவும் அருவாள் எடுத்து வெட்டினார். நான் விலகினதால அது முகத்தில் விழுந்துச்சு. இல்லைன்னா கழுத்தில் விழுந்திருக்கும். இன்னிக்கி நம்மளைக் கொல்லப் போறங்கன்னு நெனச்சுத் தப்பிச்சு ஓடினேன். விடாம தாசில்தார், டிரைவர், மூணு ஆர்.ஐ-க்கள் எல்லாம் துரத்தித் துரத்தி என்னை அடிச்சாங்க. அதற்குள், அக்கம் பக்கத்தில் ஆட்கள் வர்ற சத்தம் கேட்கவும், ஓடிட்டாங்க. அவங்க எல்லோரும் குடிச்சுட்டு நிதானம் தப்பி இருந்ததால தப்பிச்சேன். இல்லேன்னா, அங்கேயே எனக்கு சமாதி கட்டியிருப்பாங்க...'' என மரண பயத்தோடு சொன்னார்

இந்த சம்பவத்தில் 'வருவாய்த் துறையினர் மீது எஃப்.ஐ.ஆர். போடக் கூடாது’ என ஏகப்பட்ட பிரஷ​ராம். அதற்கெல்லாம் செவி மடுக்காமல்... தாசில்தார் செல்லப்பா, டிரைவர் செழியன், ஆர்.ஐ-க்கள் சதீஷ், ராஜாராம், கோவிந்தராஜ் ஆகிய ஐந்து பேர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார் திருவாடானை டி.எஸ்.பி-யான மோகன்ராஜ். ஐந்து பேரும் இப்போது தலைமறைவு!

நம்மிடம் பேசிய டி.எஸ்.பி., ''எங்களுக்கு பிரஷர் வந்தது உண்மைதான். ஆனால், நேரடியாக நான் விசாரணை செய்தபோது அத்தனையும் உண்மை என்பது தெரிய வந்தது. அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சும்மா இருக்க முடியும்? நாளைக்கு, ராவுத்தரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், யார் பதில் சொல்வது? தற்போது, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து இருக்கிறோம்...'' என்றார்.

இதனிடையே, தாக்குதல் கோஷ்டியில் இன்னொரு அதிகாரியும் இருந்தார். பதவி உயர்வுக்கான பரீட்சையில் இருக்கும் அவரை, சிலர் தந்திரமாக வழக்கில் இருந்து காப்பாற்றி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

பறக்கும் படையா... உயிர் பறிக்கும் படையா?!

போலீஸ் தரப்பில் பேசிய சிலர், ''இந்தப் பகுதியில் அடிக்கடி கடத்துபவர்களோடு வருவாய்த் துறையினர் பக்கா டீலிங் வைத்து இருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு, அதிகாரிகளுக்குக் கப்பம் வசூலிக்க வந்த சிலரை, ஊர்க்காரர்கள் சுற்றிவளைத்து அடித்திருக்கிறார்கள். அடித்த கும்பலில் ராவுத்தரும் இருந்திருக்கிறார். அதற்கு பதிலடியாகத்தான் இப்போது அவர்கள் தாக்கி இருக்கிறார்கள்...'' என்கிறார்கள்.

தாசில்தார் உள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடர்ந்த பிறகும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனிடையே, போலீஸ் பொய் வழக்குப் போட்டிருப்பதாகச் சொல்லி கடந்த 14-ம் தேதி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்!

வருவாய்த் துறை ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் கதிரேசன், ''அதிகாரிகள் ரெய்டுக்குப் போன நேரத்தில் வண்டியில் வந்து வழிமறித்த நைனா முகம்மதுவும், இன்னொருவரும், 'உங்கள் நடவடிக்கையால் நிறையப் பிரச்னை வருகிறது’ என்று குடிபோதையில் வம்பு செய்திருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் போகவே, பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கச் சொல்லி இருக்கிறார் தாசில்தார். உடனே நைனா முகம்மது பயந்துபோய் ஓடி எங்கோ கீழே விழுந்து அடிபட்டு, பொய்வழக்கு கொடுத்திருக்கிறார். இதனை தள்ளுபடி செய்யவேண்டும்!'' என்று சொன்னார்.

அதிகார வர்க்கம் எவ்வளவு ஊழலில் திளைக்கிறது என்பதற்கு திருவாடனை சம்பவம் ஒரு சாட்சி!

- குள.சண்முகசுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு