Published:Updated:

யானைகளால் அலறும் வால்பாறை!

மேற்கு மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

யானையைப் பார்த்து வியந்து ஆச்சர்யப்​படுபவர்களும்,

##~##
வணங்குபவர்களுமே அதிகம். ஆனால், வால்பாறை பகுதி மக்கள், யானைகள் என்றாலே, அரண்டு போய்க் கிடக்கிறார்கள். கடந்த வாரம், தேயிலை பறித்துக் கொண்டிருந்த மூன்று பெண்களை யானைகள் தூக்கிப்போட்டு மிதித்துச் சிதைத்து உச்சபட்ச வெறியாட்டம் நடத்தியதில், ஊரே நடுங்கிக் கிடக்கிறது!  காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோவை தங்கத்திடம், ''இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கப் போகிறீர்கள்?'' என்றோம்.

 எண்ணெய் வழியும் தலையை மௌனமாகத் தேய்த்துக் கொண்டவர், ''வால்பாறையில தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குழந்தைங்க ஸ்கூலுக்குப் போகாம வாழ்க்கையை வீணடிச்சுட்டுக் கிடந்தாங்க. அந்தப் புள்ளைங்க படிச்சு வாழ்க்கையில முன்னேற, கஷ்டப்பட்டு ஸ்கூல் கொண்டாந்தேன். வெறும் ஸ்கூலை மட்டும் கட்டிவெச்சா போதா​துன்னு நல்ல சத்துணவு செஞ்சு போடவும் அந்த மலைக்காட்டுல ஆட்களை ரெடி பண்ணினோம். ஆனா, யானைங்க ராத்திரி நேரத்துல வந்து ஸ்கூல் ஜன்னலையும், கதவையும் இடிச்சு நாசம் பண்ணி வெச்சிடுதுங்க. குட்டி யானைங்க க்ளாஸ் ரூம் கதவை உடைச்சு உள்ளே வந்து பெஞ்சு, போர்டையெல்லாம் அடிச்சு துவம்சம் பண்ணிடுதுங்க. அதெல்லாம் போதாதுன்னு, சத்துணவுக் கூடத்துல இருக்கிற அரிசி, பருப்பு, உப்பு, புளியையும் உடைச்செடுத்து சாப்பிட்டு காலி பண்ணி​டுதுங்க. இந்த மாதிரி நடந்தா நாங்க எப்படித்தான் ஸ்கூல் நடத்துறது? பாவப்பட்ட புள்ளைங்​களை எப்படித்தான் படிக்க வைக்கிறது? அந்த மலையில ஒருத்தனும் எந்தக் கடையும் வெச்சு நடத்த முடியறதில்லை.

யானைகளால் அலறும் வால்பாறை!
யானைகளால் அலறும் வால்பாறை!

யூரியாவுக்கும், இந்த யானைகளுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்குதா தம்பி? கருமம் அந்த கடையையும் உடைச்சு யூரியாவைத் தின்னுபோட்டு வயிறுபேதியாகி படுத்துக்கிச்சு ஒரு பெண் யானை. அப்புறம் வனத்துறை​கிட்ட சொல்லி அதுக்கு குளூக்கோஸ் ஏத்தி பிழைக்க​வைக்கப் படாத பாடுபட்டோம். ஒரு புரோட்டா கடை, இலைக் கடை, தேயிலைக் கடைன்னு எதுவும் வைக்க முடியறதில்லை. இதுங்க ஆட்டமா ஆடி அம்புட்டையும் அடிச்சு நொறுக்கிடுதுங்க. ஏதோ பணம் போச்சுன்​னாக்கூட சம்பாதிக்கலாம் ஆனா, ஆளுங்​களை அடிச்சுக் கொல்றதைத்தான் தாங்கிக்க முடியலை.

அதிலேயும் இப்போ நடந்த அந்த சோகத்தை நினைச்சாலே கண்ணீர் வருது தம்பி. பெரிய கல்லாறு எஸ்டேட்டுக்குப் பக்கத்துல தேயிலை தோட்டத்துல சிவ

னே​ன்னு இலை பறிச்சுட்டு இருந்திருக்காங்க பொண்ணுங்க. திடீர்னு மூணு யானைங்க ஓடி வந்து

யானைகளால் அலறும் வால்பாறை!

பேயாட்டம் ஆடியிருக்குதுங்க. மத்தவங்க எல்லாம் தப்பிச்சுப் போனாலும்... செல்வத்தாய், பரமேஸ்வரி, கதீஜா-ன்னு மூணு பொம்பளைங்க இதுங்ககிட்ட மாட்டிட்டாங்க. தும்பிச்சாங்கையால தூக்கிச் சுழற்றியடிச்சு கால்ல மிதிச்சே கொன்னுருக்குங்க. அந்தப் பாவப்பட்ட குடும்பமே இப்போ உடைஞ்சு நிக்குதுங்க. இந்தப் பிரச்னை சம்பந்தமா நடந்து முடிஞ்ச சட்டமன்றத்துல நஷ்டஈடு வேண்டி சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். எப்பவுமே என்னோட கோரிக்கையை கனிவா பரிசீலிக்கிற முதல்வர், இந்த வாட்டியும் ஆதரவுக்கரம் நீட்டினார். அந்தக் குடும்பத்துக்கு நஷ்டஈடு பணம் கிடைக்கப்போகுது. நாம என்னதான் கோடிகோடியா பணம் கொட்டிக் கொடுத்தாலும்... இறந்து போனவரோட இடத்தை நிரப்ப முடியாதுதான் ஆனாலும் நம்மால முடிஞ்சது இதுதானே?

வால்பாறையில கடந்த இருபது வருஷத்துல மட்டும் யானை தாக்கி 37 பேர் செத்திருக்​காங்க. இதுபோக சிறுத்தை, காட்​டெரு​மைட்ட சிக்கி செத்தவங்க கணக்கு தனி. ஆனாலும் யானைங்க சாகடிச்ச எண்ணிக்கைதான் அதிகம். அதனாலதான் அந்த யானைங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறேன்: 'உங்களுக்கு என்னதான் வேணும்? ஏன் இப்படி ஆடுறீங்க?’-ன்னு'' என்று முடித்தபோது அவரது குரல் கரகரத்தது.

கோவை தங்கத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல யானைகள் வராது, ஆனால், சூழலியலாளர்கள் இருக்கிறார்களே! 'தி நேச்சர் டிரஸ்ட்டின்’ நிறுவனரான திருநாரணன், ''பெரிய கல்லார், சின்ன கல்லார் வனப்பகுதியில் சோலைகள் அதிகம். இந்த சோலைகள் வன விலங்குகளுக்கு மிகப்பாதுகாப்பான இடம். சம்பவம் நடந்த தேயிலை எஸ்டேட்களில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்​படுத்தப்படுவது இல்லையாம். செழிப்பான புற்கள் நிறைந்து வளர்ந்து இருக்கின்றன. இதனால் இந்தப் பகுதியை யானைகள் அதிகம் விரும்பி இருக்கின்றன. பெண்களைத் தாக்கிய மூன்று யானைகளும் அந்த சமயத்தில் ஏதோ ஒரு கோபத்தில், மனக்கலவரத்தில் இருந்திருக்கலாம். வேறு ஏதோ ஒரு எஸ்டேட்டில், மனிதர்களால் விரட்டி அடிக்கப்பட்டோ... பட்டாசு சப்தத்தில் பயந்தோ வந்திருக்கலாம். அதனால்தான் அந்தப் பெண்கள் அவற்றை எந்தத் தொந்தரவும் செய்யாமல் இருந்தும் இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கிறது.

யானைகளும் அந்த காட்டை விட்டு நகராது, மக்களும் வாழ்வு ஆதாரங்களுக்காக டீ எஸ்டேட்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும். இரண்டு தரப்புக்கும் வேறு வழியே இல்லை. என்னதான் செய்வது? வனத் துறையினரால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியாது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள், தங்கள் வீடுகளில் வாழை போன்ற யானைகளை ஈர்க்கக்கூடிய பயிர்​களை வளர்க்காமல் இருப்பது பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்று. அதுபோல தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் போதும், திரும்பும்போதும் அத்தனை பேரும் மொத்தமாகச் செல்வதும், வாகனங்களை பயன்படுத்துவதும் கைகொடுக்கும்!'' என்கிறார்.

மிருகங்களின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டு, அதன்மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை!

- எஸ்.ஷக்தி

படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு